கடலோரக் கோட்டைகள் 1: பழவேற்காட்டில் கோட்டை இருந்ததா?

கடலோரக் கோட்டைகள் 1: பழவேற்காட்டில் கோட்டை இருந்ததா?
Updated on
2 min read

சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் வழியில் பழவேற்காட்டில் (புலிகாட்) கோட்டை இருந்தது என்றால், அதை நம்புவது சற்று கடினம்தான். ஆனால், வங்கக் கடலில் களிமுகப் பகுதியாக விளங்கும் பழவேற்காடு வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.

போர்ச்சுகீசியர்கள் கி.பி. 1502-ஆம் ஆண்டில் விஜயநகர ஆட்சியாளர்களின் உதவியால் வங்கக் கடற்கரையோரத்தில் உள்ள பழவேற்காடு ஏரிக்கரையில் ஒரு வர்த்தக மையத்தை அமைத்தனர். அதைச் சுற்றி சிறிய அளவிலான கோட்டையையும் எழுப்பினர். ஆனால், இக்கோட்டை பின்னர் டச்சுக்காரர்களால் கி.பி. 1609-இல் கைப்பற்றப்பட்டது. அதன்பின்னர் கி.பி. 1613-ஆம் ஆண்டில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி, அந்த இடத்தில் இன்னும் வலுவாக கோட்டையைக் கட்டியெழுப்பினர். அதன் பெயர் ஜெல்ட்ரியா கோட்டை (Fort Geldria).

இந்த கம்பெனியின் இயக்குனராக இருந்த வெம்மர் வான் பெர்செம்மின் சொந்த ஊர் ஜெல்ட்ரியா என்பதால், அந்தப் பெயரிலேயே இந்தக் கோட்டை அழைக்கப்பட்டது. டச்சுக்காரர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்டையாகவும் இது அறியப்படுகிறது. இந்தக் கோட்டை அந்நாளில் கோரமண்டல் கடற்கரையில் டச்சுக்காரர்களின் முதல் குடியிருப்பாகவும் உருவெடுத்தது.

அந்தக் காலகட்டத்தில் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் இடையே வணிகப் போட்டி இருந்ததால், மூவருமே இக்கோட்டையைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டிவந்தனர். அன்று வணிகம் என்ற பெயரில் நாடு பிடிக்கும் போட்டியில் மோதிக்கொண்ட ஐரோப்பியர்களின் பார்வை இந்தப் பகுதியை நோக்கியே இருந்தது. தொடர்ந்து நடைபெற்றுவந்த போட்டி, பொறாமை, மோதல்களுக்கு இடையே 1780-களில் இக்கோட்டையை ஆங்கிலேயர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். பின்னர் படிப்படியாக இக்கோட்டையின் உரிமை ஆங்கிலேயர்களின் வசம் சென்றது. 1800-களின் தொடக்கத்தில் இந்தக் கோட்டையை ஆங்கிலேயர் தகர்த்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இன்றைய பிரம்மாண்ட நகரான சென்னைக்கு அருகே அன்று வணிகப் போட்டிக்கு வித்திட்ட ஜெல்ட்ரியா கோட்டை இருந்த தடம் இப்போது தெரியவில்லை. ஆனால், சில எச்சங்கள் மட்டுமே பாக்கியிருக்கின்றன. அன்று கோட்டைக்குள் இருந்த சில கல்லறைகள் அப்படியே உள்ளன. இங்குள்ள கல்லைறையில் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், இந்தியர்கள் என 77 சமாதிகள் உள்ளன. சில கல்லறைகள் குவி மாடத்துடன் எழுப்பப்பட்டிருக்கின்றன. கல்லறையின் நுழைவாயிலில் உள்ள தூண்களில் எலும்புக்கூடு சிற்பம் உள்ளது. இந்தக் கல்லறையில் உள்ள டச்சுக்காரர்களின் வாரிசுகள், தங்கள் முன்னோருக்கு அஞ்சலி செலுத்த அவ்வப்போது வந்துசெல்லும் தகவலும் ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in