மீண்டும் கற்கால வால்நட்சத்திரம்!

மீண்டும் கற்கால வால்நட்சத்திரம்!
Updated on
2 min read

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள் வானில் அந்த வால்நட்சத்திரத்தை நிச்சயமாகக் கண்டிருப்பார்கள். ஏனென்றால், புவியில் நம் கண்களையும் வானத்தையும் கூச வைக்கும் வகையிலான அளவுகடந்த ஒளியைக் கூட்டாக உமிழும் விளக்குகள் அன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அந்த வால்நட்சத்திரம் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘பொன்னியின் செல்வன்’ கதையை அறிந்தவர்களுக்கு வால்நட்சத்திரம் அல்லது ‘தூமகேது’ எனப்படும் ‘Comet’ குறித்த ஆர்வம் தோன்றியிருக்கலாம்.

கற்கால மனிதர்கள் வியந்து பார்த்த அதே வால்நட்சத்திரம் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்துப் புவிக்கு அருகில் மீண்டும் வந்துகொண்டிருக்கிறது. அதன் பெயர் C/2022 E3 (ZTF). அதன் பெயரில் இடம்பெற்றுள்ள ‘C’ என்பது ‘Comet’யைக் குறிக்கிறது. 2022 மார்ச் இரண்டாம் தேதி (அதாவது ஐந்தாவது அரை மாதம்-A,B,C,D,E) Zwicky Transient Facility (ZTF) என்கிற ஆய்வுக் கருவி மூலம் கண்டறியப்பட்ட மூன்றாவது (3) வால்நட்சத்திரம் இது.

இதைக் குறிக்கவே C 2022 E3(ZTF) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இப்பெயரை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினமாக இருந்தால், வசதிக்காகப் ‘பச்சை வால்நட்சத்திரம்’ என்று அழைக்கலாம். அது பச்சை நிறத்தில் இருக்கிறது. இந்த வால்நட்சத்திரத்தின் மையப்பகுதியில் இரு கார்பன் அணுக்கள் சேர்ந்த டைகார்பன் மூலக்கூறுகள் நிறைந்துள்ளன. இங்கு நடக்கும் வேதிவினைகளால் இந்தப் பச்சை நிற ஒளி உருவாகிறது.

குய்பர் பட்டையும் ஓர்ட் மேகங்களும்: பொதுவாக வால் நட்சத்திரம் என்பது உறைந்த நிலையில் உள்ள பனிப்பாறைகள், வாயுக்கள், தூசு நிறைந்த ஒரு திடப்பொருள். இவை சூரியக் குடும்பம் உருவாகும்போது மீந்த எச்சங்கள். இவை சூரியனை நெருங்க நெருங்க உறைந்த நிலையில் உள்ள வாயுக்கள் உருகி விரிவடைந்து வால் போன்ற தோற்றத்தைப் பெறுகிறது. இதனால்தான் இவற்றுக்கு ‘வால்’நட்சத்திரம் எனப் பெயரிடப்பட்டது. சூரியக் குடும்பத்தைச் சுற்றி இரண்டு இடங்களில் வால் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

ஒன்று, நெப்டியூன் கோளுக்கு அப்பால் குய்பர் பட்டை என்கிற பகுதி. இன்னொன்று, ஓர்ட் மேகங்கள் எனப்படும் சூரியனுக்குப் பல ஆயிரக்கணக்கான வானியல் தொலைவில் உள்ள கோளக்கூடு வடிவ மேகக்கூட்டங்கள். குய்பர் பட்டையில் இருக்கும் வால்நட்சத்திரங்கள் பெரும்பாலும் 100 அல்லது 200 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனுக்கு அருகில் வரும்.

ஓர்ட் மேகக் கூட்டங்களில் இருக்கும் வால்நட்சத்திரங்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளில் தொடங்கி இரண்டு-மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சூரியனுக்கு அருகில் வரும். தற்போது பூமிக்கு அருகில் வரும் பச்சை வால்நட்சத்திரம் ஓர்ட் மேகக்கூட்டத்திலிருந்துதான் வருகிறது.

எப்படிப் பார்ப்பது?: ஜனவரி 12 அன்று சூரியனுக்கு அருகில் (166 மில்லியன் கி.மீ.) வந்த இந்த வால்நட்சத்திரம் சிறிது சிறிதாகப் புவியை நோக்கி நகர்ந்து பிப்ரவரி 1 அன்று புவிக்கு அருகில் (அதாவது 42 மில்லியன் கி.மீ தொலைவில்) வரப்போகிறது. பூமிக்கு அருகில் வர வர அதன் பொலிவுத்தன்மை கூடிக்கொண்டே போகும். தற்போது விடியற்காலை நேரத்தில் வடக்கு திசையில் தெரியும் இந்த வால்நட்சத்திரம் ஜனவரி 26, 27 தேதிகளில் இரவு வானத்தில் சிறிய கரடி விண்மீன் கூட்டத்துக்கு அருகில் தெரியும்.. இந்தத் தேதிகளில் வெறும் கண்களால் பார்ப்பது சிரமம். சற்று திறன் வாய்ந்த தொலைநோக்கியால் பார்க்க முடியும்.

ஆனால், பிப்ரவரி முதல் வாரத்தில் இரவு ஏழு மணிக்கு மேல் வடமேற்கு வானத்தில் கபெல்லா நட்சத்திரத்துக்கு அருகில் மேற்குப் பக்கத்தில் சிறிய பச்சை நிற புகைப்படலம் போல் இது தெரிய ஆரம்பிக்கும். நகரங்களில் ஒளி மாசு அதிகமாக இருப்பதால் வெறும் கண்களால் காண்பது சற்று கடினம். ஆனால், இருண்ட வானம் உள்ள பகுதிகளில் சற்றுப் பொறுமையாகக் கூர்ந்து பார்த்தால், இந்தப் பச்சை வால்நட்சத்திரம் வெறும் கண்களுக்கே புலப்படும்.

இருநோக்கி அல்லது தொலைநோக்கி இருந்தால் நன்றாகப் பாக்கலாம். தற்போது பூமியைக் கடக்கும் இந்த வால்நட்சத்திரம் இதற்குப் பிறகு புவியை நோக்கி வராது. ஏனென்றால் சூரியன், கோள்களின் ஈர்ப்பு விசையால் இந்த வால்நட்சத்திரத்தின் பாதை நீள்வட்டப் பாதையிலிருந்து பரவளையப் பாதையாக மாறிவிட்டது. அதனால், இப்போது போனால் திரும்பவும் வராது.

வால்நட்சத்திரத்தைப் பற்றி கடந்த 30 ஆண்டுகளாக நிறைய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. வால்நட்சத்திரங்களை ஆய்வுசெய்வதன் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றி அறியலாம். சில ஆண்டுகளுக்கு முன் நாசாவின் விண்கலம் ஒன்று ‘வைல்ட் 2’ என்கிற வால்நட்சத்திரத்திலிருந்து சில பகுதிகளைப் புவிக்கு எடுத்து வந்து ஆராய்ந்து பார்த்தது. புவியில் உயிர் உருவாகத் தேவையான ஹைட்ரோகார்பன் போன்ற வேதிப்பொருள்கள் அதில் இருந்தன.

புவியில் உயிர் எப்படி உருவாகி இருக்க முடியும் என்கிற கேள்விகளுக்கான விடையை வால்நட்சத்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் அளிக்கக்கூடும். அப்படிப் பார்த்தால் புவியை நோக்கி வரும் ஒவ்வொரு வால்நட்சத்திரமும் ஏதொவொரு அறிவியல் செய்தியைச் சொல்லத்தான் வருகிறது. எனவே, சூரியக் குடும்பத்தின் தூரத்துச் சொந்தமான பச்சை வால்நட்சத்திரத்தை அனைவரும் வரவேற்போம்.

- சி. ஜோசப் பிரபாகர்; josephprabagar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in