

‘Paparazzi has reached low levels' என்று சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்குகொண்ட ஒருவர் வருத்தத்தோடு ஆக்ரோஷப்பட்டார். அவர் முன்னும் பின்னும் கூறிய கருத்தை வைத்துப் பார்த்தால் ‘ஊடகங்கள் மிகவும் சீர்கெட்டுவிட்டன’ என்று அவர் கூற வந்தார் எனக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதில் இரண்டு முரண்கள் உள்ளன. ‘பபராஸி' என்பது ஊடகத்தினர் அனைவரையும் குறிக்கும் சொல் அல்ல. ஒளிப்படக்காரர்களை மட்டுமே குறிக்கிறது. இவர்கள் எந்த இதழின் ஊழியர்களும் அல்ல. பிரபலமானவர்களின் பின்னால் அலைந்து திரிவார்கள். அவர்களை எதிர்பாராத கோணங்களில் (அவர்கள் அறியாமல்) ஒளிப்படம் எடுத்து ஊடகங்களுக்கு அளிப்பார்கள். பரபரப்பான இதழ்கள் இவற்றைப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு பிரசுரிக்கும்.
முதல் முரண் இதுதான். ‘பபராஸி’ எப்போதுமே மட்டமானவர்கள்தாம். பிறருடைய அந்தரங்கத்தை மதிக்காதவர்கள். இரண்டாவது முரண், ஆங்கில இலக்கணம் தொடர்பானது. ‘பபராஸி’ என்பது பன்மைச் சொல். எனவே, ‘Paparazzi have’ என்று அவர் கூறி இருக்க வேண்டும். அப்படியானால் இதன் ஒருமைச் சொல் எது? அப்படி ஒளிப்படம் எடுப்பவர் ஆண் என்றால் ‘paparazzo’. பெண் என்றால் ‘paparazza’.
இளவரசி டயானா இறந்தபோது ‘paparazzi’ என்கிற வார்த்தை மிகவும் பிரபலமானது. 1997இல் அவரும் அவருடைய காதலரும் காரில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ‘பபாராசி’யிடமிருந்து தப்பிக்க மிக வேகமாகத் தங்கள் காரைச் செலுத்திய போதுதான் விபத்து ஏற்பட்டு இறந்தனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடியின் அந்தரங்கத்தைச் சிறிதும் மதிக்காமல் பலவித ஒளிப்படங்களை எடுத்துத் தள்ளிய ரான் கலெல்லா ஒருவிதத்தில் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டார். அவரை ‘அமெரிக்க பபாராசியின் தந்தை’ என்கிறார்கள்!
இப்போதெல்லாம் பிரபலங்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய அந்தரங்கங்களை வீடியோ எடுப்பவர்களையும் இதே வார்த்தையைக் கொண்டு குறிப்பிடுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின்போது பெர்த் நகரின் ஹோட்டலில் விராட் கோலி தங்கியிருந்த அறையில், அவர் இல்லாதபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது நினைவுக்கு வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவைத் தொடர்ந்து தேசியப் பேரிடர் அமைப்பு, அரசு அதிகாரிகளுக்கு ஒரு ‘gag order’ஐப் பிறப்பித்துள்ளது என்கிறது ஒரு செய்தி.
அது என்ன ‘gag order?’ (‘gagging order’ என்றும் இதைக் குறிப்பிடுவார்கள்). பெரும்பாலும் இந்த ஆணை நீதிபதிகளால் பிறப்பிக்கப்படுவதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் சில தகவல்களைப் பொதுமக்களுக்கு அளிக்கக் கூடாது என்பதாக அது இருப்பதற்குக் காரணம், அப்படிப் பகிர்ந்துகொள்ளும்போது தவறான கருத்துக்கோ அமைதியின்மைக்கோ அது வித்திடக்கூடும். சமூக வலைத்தளங்களுக்கு இந்த நிலச்சரிவு தொடர்பாக எந்தத் தகவலையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்கிறது தேசியப் பேரிடர் அமைப்பின் ஆணை.
(தொடரும் - தொடரின் முழு வடிவத்தை ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் வாசிக்கலாம்.)
- ஜி.எஸ்.எஸ்; aruncharanya@gmail.com