

கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி கவனம் பெற்ற அறிவியல் நூல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
‘இந்து தமிழ் திசை’யின் ’திசைகாட்டி’ இணைப்பிதழில் வெளியாகி, பரவலான கவனம் பெற்ற தொடரின் புத்தக வடிவம் இது. அன்றாட வாழ்வில் நாம் காணும் செயல்களின் பின்னுள்ள அறிவியலை எளிமையாக விளக்கி, நவீன தொழில்நுட்பம் தற்காலத்தில் அதை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இணைத்துக் கூறும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அறிவியல் கண்ணோட்டத்தை மேம்படுத்த இந்நூல் உதவும்.
அறிவுக்கு ஆயிரம் கண்கள்: அன்றாட வாழ்வில் அறிவியல்
ஹேமபிரபா, பயில் பதிப்பகம், விலை: ரூ.122, தொடர்புக்கு: 99400 92020
‘டார்க்நெட்’ என்றால் பொதுவாக ஓர் அச்சம் எல்லோரிடமும் எழுகிறது. ஆனால், ‘டார்க்நெட்’டுக்கும் மறுபக்கம் உள்ளது. அது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டது. ‘டார்க்நெட்’ எங்கே, எப்படித் தோன்றியது? அதை இயக்குபவர்கள் யார்? ‘டார்க்நெட்’ இயங்குவதற்கு, அமெரிக்க அரசாங்கம் ஏன் நிதி கொடுக்கிறது? அமெரிக்காவின் முன்னணி நாளிதழான ’நியூ யார்க் டைம்ஸ்’, ‘டார்க்நெட்’ பக்கத்தைத் தொடங்கியது ஏன்? என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் ‘டார்க்நெட்’ எனும் இருள் இணையத்தின் வரலாற்றை இந்நூல் கூறுகிறது.
டார்க்நெட் (இருள் இணையத்தின் வரலாறு)
வினோத் ஆறுமுகம், வளரி,
விலை: ரூ.166, தொடர்புக்கு: 044 - 4286 7570
நவீன உலகில் எல்லா மட்டங்களிலும் அறிவியல் என்ற கருத்து தாக்கத்தைச் செலுத்தி வருகிறது. இருப்பினும், அறிவியலின் இயல்பு, அதாவது உண்மையிலேயே அறிவியல் என்றால் என்ன என்பது பிடிபடாமல்தான் இருக்கிறது. இந்தப் புத்தகம் அது குறித்துத் தத்துவார்த்தரீதியாகச் சிந்திப்பதற்கான வழியை ஏற்படுத்தித் தருகிறது.அறிவியலைப் புரிந்துகொள்வதற்கான சில இந்தியச் சிந்தனைச் சட்டகங்களையும் அறிமுகப்படுத்துகிறது. அறிவியலை அதன் சிக்கல்களோடும், அதன் பலம், பலவீனங்களோடும் புரிந்துகொள்ள இப்புத்தகம் உதவக்கூடும்.
அறிவியல் என்றால் என்ன?
சுந்தர் சருக்கை (ஆசிரியர்); சீனிவாச ராமாநுஜம் (தமிழில்), சீர்மை நூல்வெளி, விலை: ரூ.550, தொடர்புக்கு: 80721 23326
பள்ளிப் பாடப் புத்தகம் முதல் வானியல் சர்வதேசக் கருத்தரங்குகள், அறிவியல் மாநாடுகள் என யாவராலும் புறக்கணிக்கப்படும் இந்திய வானியலாளர் களுடைய புதிய தலைமுறையின் இருண்ட சரித்திரத்தை இந்த நூல் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன். கருந்துளைகள் பற்றிய புதிய அறிவியல் கண்டறிதல்களுடன் வெளிவந்திருக்கும் இந்நூல், பள்ளி மாணவர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.
கருந்துளை (பிறப்பின் அழுகுரலும் – பிரபஞ்ச புதிர்களும்)
த.வி.வெங்கடேஸ்வரன், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.80, தொடர்புக்கு: 044 2433 2924
2009இல் வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. மாணவர் பருவத்தில் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்கியது முதல் நோபல் பரிசு அறிவிப்பு வெளியான காலத்திலிருந்து, பரிசு பெற்ற அனுபவம், பரிசு பெற்ற பின் அமையும் வாழ்க்கை போன்றவற்றை வெங்கி இந்நூலில் பதிவுசெய்துள்ளார். அறிவியல் ஆய்வில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் வாசிக்க வேண்டிய நூல்.
ஜீன் மெஷின்
ரைபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்
வெங்கி ராமகிருஷ்ணன் (ஆசிரியர்); சற்குணம் ஸ்டீவன் (தமிழில்), காலச்சுவடு, விலை: ரூ.395, தொடர்புக்கு: 04652 278525
தொகுப்பு: வசீகரன்