ஆங்கிலம் அறிவோமே 4.0 - 15 | பிஞ்சிலே பழுத்தவர்: எப்படி அழைப்பது?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 15 | பிஞ்சிலே பழுத்தவர்: எப்படி அழைப்பது?
Updated on
2 min read

பிஞ்சிலே பழுத்தவன் என்பதை ஆங்கிலத்தில் ‘prodigy’ என்று குறிப்பிட்டலாம். சரிதானே?’. இப்படிக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

இளம் வயதிலேயே மிகச் சிறப்பான தன்மைகளையும் ஆற்றல்களையும் கொண்டிருக்கும் ஒருவரை ‘prodigy’ என்று கூறுவதுண்டு. அந்த விதத்தில் பிஞ்சிலே பழுத்தவர் என்ற நேரடி அர்த்தம் பொருந்துகிறதுதான். ஆனால், பிஞ்சிலே பழுத்தவன் என்பதை நாம் எதிர்மறையாகத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். அதாவது வயசுக்கு மீறிய அல்லது வேண்டாத (தீமையான) விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பவனை அப்படிக் குறிப்பிடுகிறோம்.

‘​Prodigy’ என்பதைப் போன்ற பொருள் கொண்ட வார்த்தைதான் ‘precocious child’ என்பதும். ‘Prodigy’ என்ற வார்த்தை எப்போதுமே ஒருவரைப் பாராட்டுகிற விதத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது. இளம் மேதை என்பதுபோல. எதிர்மறையாக விமர்சிக்கிற விதத்திலும் ‘precocious’ என்ற சொல்லைப் பயன்படுத்தப்படலாம்.

‘Genius’, ‘wunderkind’ ஆகியவையும் ‘prodigy’ என்பதன் சம வார்த்தைகளே. ‘Wizard’ என்ற சொல்லையும் ‘prodigy’ என்பதுபோல் இப்போதெல்லாம் சிலர் பயன்படுத்துகிறார்கள். என்றாலும்

wizard’ என்ற சொல் புனை கதைகளில் வரும் மாய, மந்திர ஆற்றல்கள் கொண்ட மாயாவி, மந்திரவாதியைக் குறிக்கவே பயன்பட்டது. இவன் தனது அதீத ஆற்றலைப் பிறருக்குத் தீமைகள் செய்யவே பயன்படுத்துவான்.

இப்போது செய்தி வாக்கியம். ‘If a woman sniper is caught, she will be humiliated, tortured and executed.’

இதில், ‘Sniper’ என்பது யாரைக் குறிக்கிறது? மறைந்திருந்து எதிராளியை நோக்கி சுடுபவர் அல்லது அம்பு எய்பவரை இந்த வார்த்தைக் குறிக்கிறது. இதில் நேரடியாகத் தாக்காமல் பதுங்கிய நிலையில் தாக்குவது என்பது முக்கியம்.

நடைமுறையில் ‘sniper’ என்பவர் தனியாக இயங்கமாட்டார். ‘Spotter’ என்ற வேறொருவருடன் இணைந்துதான் பணிபுரிவார். சொல்லப்போனால் ‘spotter’ என்று அழைக்கப்படுபவர்தான் தலைவர். யாரைத் தாக்க வேண்டும் என்று அவர்தான் தீர்மானித்து ‘sniper’க்கு ஆணை இடுவார்.

Catch’ என்பதன் ‘past tense caught’. இந்த வார்த்தை பிடிபட்டான் அல்லது பிடிபட்டுவிட்டது என்பதைக் குறிக்கிறது. ‘Entangled’, ‘seized’, ‘clenched’ போன்ற வார்த்தைகள்கூட இந்தப் பொருளை அளிப்பவைதான்.

மேஜையில் உள்ள பொருளைக் கையில் எடுத்துக்கொண்டால் அதை ‘catch’, ‘caught’ என்று கூற மாட்டோம். இயக்க நிலையிலுள்ள ஒன்றைக் கையால் பிடிப்பதைத்தான் அந்த வார்த்தைகளில் விவரிப்போம். ஓடிக் கொண்டிருக்கும் ஒரு திருடனைப் பிடிப்பது, மேலெழும்பி வந்து கொண்டிருக்கும் ஒரு கிரிக்கெட் பந்தைப் பிடிப்பது ஆகியவற்றை விவரிக்க ‘caught’ என்ற வார்த்தையைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

‘Humiliation’ என்பது அவமானம். பெருத்த அவமானம் என்றும் கூறலாம். அதாவது, ‘இந்த நொடியே பூமி பிளந்து நான் உள்ளே போய் விடக் கூடாதா’ என்று நினைக்கும் வகையில் உண்டான சூழல். ‘He had to undergo one humiliation after another’ என்றால் அவன் தொடர் அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது என்று பொருள். ‘Abasement’, ‘mortification’, ‘chagrin’ ஆகியவற்றை ‘humiliation’ என்பதற்கு சம வார்த்தைகளாகக் குறிப்பிடலாம்.

Torture’ என்ற ஆங்கில வார்த்தையின் பொருள் தீவிரமானது. ஒன்றைச் சொல்ல அல்லது செய்ய வைப்பதற்காகவோ ஒருவரைக் கடுமையான துன்பத்துக்கு உட்படுத்துவதைத்தான் ‘torture’ செய்வது என்பார்கள். (ஒருவரையோ அல்லது அவருக்கு மிக நெருக்கமானவர்களையோ) சவுக்கால் அடிப்பது, தீயால் சுடுவது போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.

ஆனால், அந்த வார்த்தையை அற்ப விஷயங்களுக்கெல்லாம் இப்போது பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. 'இப்படி ஆளாளுக்கு ரூபாய் நோட்டு்களா நீட்டி டார்ச்சர் செய்றீங்களே. சில்லறைக்கு நான் எங்கே போவேன்?' என்று ஒரு நடத்துனர் கூறுவது காதில் விழுகிறது. அவ்வளவு ஏன், ஒரு தாய் 'கொஞ்ச நேரம் பாடத்தைப் படியேன்' என்று கூற, அவளது ஐந்து வயது மகள் 'ஏம்மா என்னை இப்படி டார்ச்சர் செய்யறே' என்று கூறுவதைக் கூட கேட்க முடிகிறது!

(தொடரும்)

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in