வகுப்பறைகளில் மாறும் கற்றல் வடிவங்கள்

வகுப்பறைகளில் மாறும் கற்றல் வடிவங்கள்
Updated on
2 min read

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரம்பரிய வகுப்பறையில் மட்டுமே கற்றல் நடைபெற்றது, ஆனால், இன்று கல்வி டிஜிட்டல்மயமாகிவிட்டது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு டிஜிட்டல் கல்விதான் பெரிதும் கைகொடுத்தது. என்றாலும் இதில் சில சிரமங்கள் இருக்கவே செய்கின்றன. அதைக்களையும் வகையில் நெகிழ்வான கற்றல் வடிவங்கள் தொடர்ந்து உருவாகியும் வருகின்றன. புதிய கற்றல் வடிவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

தகவமைப்பு கற்றல்: ஒரு வகுப்பறையில் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான திறன்களோடு இருப்பதில்லை. சில நேரம் மாணவர்களின் திறன்களுக்கும் அறிவுக்கும் ஏற்ப கல்வியைக் கற்பிக்கும் சூழலும் வகுப்பறைகளில் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் தகவமைப்பு கற்றல், தகவமைப்பு கற்பித்தல் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இது கணினி வழிமுறையுடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஒரு கல்வி முறை, இது மாணவர்களின் தொடர்புகளை ஒழுங்கமைக்கும்.

ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்ய தனிப் பயனாக்கப்பட்ட கற்றல் செயல்பாடுகளையும் வழங்கும்..இதன் மூலம் மாணவர்கள் ஆர்வத்தின் அடிப்படையில் பாடங்களைத் தேர்வு செய்யலாம், மாணவர்களின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்கலாம். மாணவர்கள் பலவீனமான பாடங்களில் தனிப்பட்ட முறையில் கற்றல் உத்தியை உருவாக்கி,ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியும்.

விளையாட்டுக் கற்றல்: கேமிஃபிகேஷன் என்பது விளையாட்டுடன் தொடர்புடையது மட்டுமல்ல, கல்வியில் சிக்கலைத் தீர்க்க உதவும் தொழில்நுட்பமும்கூட. விளையாட்டு அடிப்படையில் கற்றல் அணுகுமுறை என்பது கற்றலில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும். அவர்களுடைய திறன்களை வளர்க்கவும் கற்றலை அதிகரிக்கவும் பெரிதும் உதவும். வரும் ஆண்டுகளில் விளையாட்டு அடிப்படையிலான கற்றல் அணுகுமுறை 32 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கேமிஃபிகேஷன் பள்ளிகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

உதவும் மெய்நிகர் உண்மை: கல்வித் துறையில் மெய்நிகர் உண்மை எனப்படும் வெர்ச்சுவல் ரியாலிட்டியும் ஆகுமெண்டட் ரியாலிட்டியும் முக்கிய இடத்தைப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் வெற்றிகரமான கற்றலுக்கு உதவுகின்றன. இவை மாணவர்களின் கற்றல் தகவமைப்பு, கற்றல் செயல்முறை ஆகியவற்றை மேம்படுத்தும், குறிப்பாக மாணவர்கள் மதிப்பெண்கள் பெற மனப்பாடம் செய்வதே நல்லது என்ற எண்ணத்தைக் குறைக்கும், இத்தொழில்நுட்பங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் என இரு தரப்பையுமே மேம்படுத்தும். எதிர்காலத்தில் கற்றலில் இத்தொழில்நுட்பங்கள் அதிகம் பயன்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

கைகோக்கும் டிஜிட்டல்: எப்போதும் ஒரு புதிய வரவு பாரம்பரிய அம்சங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதே வேளையில் புதிய வரவை பாரம்பரியத்துடன் சம விகிதத்தில் இணைக்கும்போது அது புதிய வடிவத்தைப் பெறும். பாரம்பரிய வகுப்புகளுக்கு மத்தியில் டிஜிட்டல் கல்வி முறையையும் இணைப்பதன் மூலம் கல்வியைக் கற்பிக்க புதிய உத்தி கிடைக்கிறது. இன்று வகுப்பறைகளில் அனிமேஷன் செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளைப் பயன்படுத்தி கற்பிக்கப்படுகின்றன.

இவை மாணவர்களின் புரிதலுக்குப் பெரிதும் உதவுகின்றன. எனவே, வகுப்பறைகளில் தேவைக்கேற்ப இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவும். எனவே, இனி பாரம்பரிய வகுப்புகளுடன் டிஜிட்டலும் கைகோக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in