

‘புயல் தொடர்பாக ஆங்கிலச் செய்திகளில் ‘cyclone’ என்று குறிப்பிடுகிறார்கள். அதே சமயம் புயலைக் குறிக்க ‘Hurricane’, ‘typhoon’ ஆகிய வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்கள். இந்த மூன்றில் எந்த வகை புயல் மிக ஆபத்தானது?' என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.
இந்த வார்த்தைகளின் பயன்பாடுகள் புயல் அடிக்கும் வேகத்தைப் பொறுத்து அமைந்தவை அல்ல. மேலே உள்ள மூன்று ஆங்கில வார்த்தைகளுமே ஒரே பொருளை அளிப்பவைதான். பொதுவாக மணிக்கு 119 கிலோ மீட்டரைவிட அதிக வேகத்தில் வீசும் காற்றை இந்த மூன்று வார்த்தைகளினாலும் குறிப்பிடுகிறார்கள். உலகின் எந்தப் பகுதியில் புயல் வீசுகிறது என்பதன் அடிப்படையில் இந்த வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்றன.
தென் பசிபிக் கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் உருவாகும் புயலை ‘cyclone’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற பகுதிகளைத் தாக்கும் புயல்களை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். வடமேற்கு பசிபிக் கடலில் உருவாகும் புயலை ‘typhoon’ என்கிறார்கள். பிலிப்பைன்ஸ், ஜப்பான் போன்றவற்றைத் தாக்கும் புயலை இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.
வட அட்லாண்டிக் கடல், வடக்கு பசிபிக் கடலில் உருவாகும் புயலை ‘hurricane’ என்கிறார்கள். அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை, மேற்கிந்திய தீவுகள் போன்றவற்றைத் தாக்கும் புயலை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். புயலும் மழையும் நமக்குப் பரிச்சயமானவைதான். எனினும் மழை தொடர்பான ‘bumbershoot’ என்ற ஒரு வார்த்தை அறியப்படாமல் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அது நமக்கெல்லாம் மிகவும் அறிமுகமான ஒன்றுதான். குடை!
‘Bumbershoot’ என்பது 19-ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு வார்த்தை. ‘Umbrella’, ‘parachute’ ஆகிய இரண்டு வார்த்தைகளின் இணைப்பு இது என்று கூறலாம். வாஷிங்டனில் உள்ள சியாடல் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இசை மற்றும் கலைவிழாவின் பெயரும் ‘Bumbershoot’தான்.
இப்போது செய்தி வாக்கியம். 31 dead as savage US blizzard cuts power, snarls travel.
‘Blizzard’ என்பது பனிப்பொழிவுடன் கூடிய மூர்க்கத்தனமான காற்றைக் குறிக்கிறது. ‘Savage Blizzard’ என்றால் அது எத்தகைய பனிக்காற்று? இங்கே ‘savage’ என்பது மிக மூர்க்கமான அல்லது காட்டுமிராண்டித்தனமான என்பதைக் குறிக்கிறது. ‘Savage blizzard’ என்பது மிகக் கடுமையான சேதத்தை விளைவிக்கக்கூடிய புயலை குறிக்கிறது.
‘A hurricane savaged the city’ என்றால் புயல் ஒன்று அந்த நகரத்தை மிகவும் சீரழித்து விட்டது என்று பொருள். ‘The newspapers savaged his reputation’ என்றால் அவனது கெளரவத்தை நாளிதழ்களில் வெளியான தகவல்கள் மிகவும் பாதிப்படைய வைத்து விட்டன என்று பொருள்.
செய்தி வாக்கியத்தில் பனிப்புயல் காரணமாக மின் தொடர்பு பாதிக்கப்பட்டது என்பது புரிகிறது (blizzard cuts power). ஆனால், அந்தப் புயல் ‘snarls traffic’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு என்ன பொருள்?
முதலில் ‘snarl’ என்பதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வோம். ‘The dog snarled at the stranger’. இந்த வாக்கியத்துக்கு பொருள், புதியவனைப் பார்த்த நாய் குரைத்தது என்பதாகும். ‘Snarl’ என்ற வார்த்தை பற்களைக் காட்டியபடி சினக்குரலை வெளிப்படுத்துவதாகும். இது பெரும்பாலும் விலங்குகளின் சின வெளிப்பாட்டைக் குறிக்கத்தான் பயன்படுத்தப்படுகிறது. மனிதன் பற்களைக் கடித்தபடி கோபத்தை வெளிப்படுத்தினால் ‘grinding the teeth’ என்று அது குறிக்கப்படுகிறது.
சாலையில் விபத்து நடந்துவிட்டது அல்லது மரம் விழுந்து விட்டது. இதன் காரணமாக போக்குவரத்து பெரிதும் தடைபடுகிறது. நீண்ட வரிசையாக வாகனங்கள் நகர முடியாமல் காத்துக்கொண்டிருக்கும் நிலை உண்டாகிறது. இச்சூழலை விவரிக்க ‘snarl-up’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு.
‘To avoid further snarl-ups on the roads, many roadworks have been suspended’. மேலும் சாலைப் பணிகளை மேற்கொண்டால் அந்த சாலைகளில் வாகனக் காத்திருப்புகள் மிக அதிகமாகும். எனவே அத்தகைய பணிகள் மேற்கொள்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஆக, மூர்க்கமான அந்தப் பனிப்புயல் மின்னிணைப்பை நிறுத்தியிருக்கிறது. போக்குவரத்தை பெரிதும் பாதித்திருக்கிறது. இதன் விளைவாக 36 பேர் இறந்துவிட்டனர்.
(தொடரும்)
- aruncharanya@gmail.com