

எப்போதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள் பேசுபொருளாக இருக்கும். அந்த வகையில் எதிர்காலத்தில் எந்தெந்தத் தொழில்நுட்பங்கள் உலகில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்?
ட்ரோன் டாக்ஸி: உலகின் பல நாடுகளும் ட்ரோன் டாக்ஸி பற்றி அதிகம் பேசத் தொடங்கியிருக்கின்றன. ட்ரோன் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. மின் சக்தியில் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் இந்த ட்ரோன் டாக்ஸி, குறுகிய தூரப் பயணங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டுள்ளது. ட்ரோன்கள் தொழில்நுட்பம் ஒவ்வொரு சேவையாக விரிவடைந்துவரும் நிலையில், எதிர்காலத்தில் ட்ரோன் டாக்ஸிகள் முக்கிய சேவையாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.
எட்ஜ் கம்ப்யூட்டிங்: இன்றைய இணைய யுகத்தில் ‘எட்ஜ் கம்ப்யூட்டிங்’ ஒரு முக்கிய தொழில்நுட்பமாக வேகமாக முன்னேறி வருகிறது. கூகுள் கிளவுட் பிளாட்ஃபார்ம், அமேசான் வெப் சர்வீசஸ், மைக்ரோசாஃப்ட் அஸூர் போன்ற பெரிய நிறுவனங்களால் இது சாத்தியமாகி வருகிறது. எட்ஜ் கம்ப்யூட்டிங் என்பது கணக்கீடு, தரவு சேமிப்பகத்தைத் தரவு மூலங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து, நேரத்தை மேம்படுத்துவதாகும். கணினித் தொழில்நுட்பத்தில் இது புதிய சகாப்தமாக இருக்கக்கூடும்.
மெய்நிகர் உண்மை: கடந்த சில ஆண்டுகளாகவே ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ என்றழைக்கப்படும் மெய்நிகர் உண்மை பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. பெரும்பாலும் பிளே ஸ்டேஷன்கள், கேமிங் கருவிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகவே இது கருதப்படுகிறது. என்றாலும் மெய்நிகர் விளையாட்டில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. நேரடியாக மைதானத்துக்குச் செல்லும் அனுபவத்தை இது தரும் என்பதால், எதிர்காலத்தில் இதன் தேவை அதிகரிக்கலாம்.
பிளாக்செயின் தொழில்நுட்பம்: பிளாக்செயின் தொழில்நுட்பம் என்றாலே பிட்காயின், கிரிப்டோகரன்சியோடு சேர்த்து குழப்பிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், பிளாக்செயின் தொழில்நுட்பம் வேறுபட்டது. இது தகவல்களைப் பதிவுசெய்யும் ஒரு முறையாகும். இத்தொழில்நுட்பத்தில் கணினியை மாற்றுவது, ஹேக் செய்வது, பிறர் கையாள்வது போன்றவை சாத்தியமற்றவை. இதை டிஜிட்டல் லெட்ஜர் எனலாம். பிளாக்செயினில் பங்கேற்கும் கணினிகளின் நெட்வொர்க் பரிவர்த்தனைகளை நகலெடுத்து விநியோகம் செய்கிறது. இத்தொழில்நுட்பத்தின் தேவை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோபாட் நாய்கள்: பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் விலங்குகளை எளிதாகச் சமாளிக்க உதவும் ஒரு கருவியாக ரோபாட்டிக் வழிகாட்டி நாய் இருக்கும். இக்கருவியை இங்கிலாந்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். பார்வைக் குறைபாடு உள்ளவரை நிகழ்நேரத் தரவுகளுடன் பாதுகாப்பான பாதையில் அழைத்துச் செல்ல இந்த இயந்திர வழிகாட்டி நாய் உதவும். சாலையை அடையாளம் கண்டும் இது வழிகாட்டும்.
செயற்கை நுண்ணறிவு (AI): செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உலகின் நான்காவது தொழில்நுட்ப புரட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. எனவே, ஏ.ஐ. பொறியியல், ஏ.ஐ. சிறப்புத் திட்டங்கள் பல நாடுகளிலும் இடம் பிடித்து வருகின்றன. தற்போதைய நிலையில் பல தளங்களிலும் இத்தொழில்நுட்பம் ஒரு மாற்று தொழில் நுட்பமாக வருவதற்கான அனைத்து ஆற்றலையும் கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற தொழில்நுட்பங்கள் உலகில் ஆதிக்கம் செலுத்தும் சூழலில், அது சார்ந்த படிப்புகளும் முக்கியத்துவம் பெறக்கூடும்.