

திரைப்படங்களில் தொடங்கி சமூக வலைத்தளம் வரை எங்கும் வியாபித்திருக்கிறது உருவக் கேலி. ஒருவரை உருவக் கேலி செய்வதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளும் போக்கும் அதிகம் காணப்படுகிறது. இப்பழக்கம் கல்வி நிலையங்களில் சற்று அதிகமாகவே இருப்பது உண்டு. உருவக் கேலிக்கு ஆளாகும் மாணவ, மாணவிகள் படும் மனத் துயரங்களுக்கும் அளவில்லை. இந்தச் சூழலில் இந்தியாவில் மேல்நிலைப் பள்ளிகளில் படித்துவரும் பெரும்பாலான மாணவர்கள் தங்களது தோற்றம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயக்கம் காட்டுவதாகத் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இஆர்.டி) அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 6 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் மாணவர்களுக்கு அவ்வப்போது மனக் குழப்பம் ஏற்படுவதாகவும் தேர்வு குறித்த பயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, உடல்தோற்றம், பள்ளிக்கல்வி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர்கள் தயக்கம் காட்டுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி.யின் இந்த ஆய்வு உருவக் கேலி மாணவர்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
உருவக் கேலிக்கு எதிரான விழிப்புணர்வு பள்ளி மாணவர்கள் மத்தியில் போதுமான அளவு இல்லாததால் சக மாணவர்களைக் கேலி பேசும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கடந்த மே மாதம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் தன் உடல் பருமன் குறித்த உருவ கேலிக்கு ஆளானதால் சக மாணவரைக் கொலை செய்தார்.
உலகம் முழுவதும் பதின் பருவத்தைச் சேர்ந்த பல லட்சம் பேர் உருவக் கேலிக்கு ஆளாவதால் அவர்களது மனநிலை பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்படுகிறது. மனிதர்களின் புறத்தோற்றத்தைக் கேலி செய்வது மனித உரிமை மீறல் என்பது உருவக் கேலிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களின் வாதம்.
இந்த நிலை மாற மாணவர்களிடையே உருவக் கேலிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். எந்த வயதினராக இருந்தாலும் கேலி பேசப்படும்போது மனமுடைந்துபோவது மனித இயல்பே. எனவே, வளரிளம் பருவத்தைச் சேர்ந்தவர்களிடம் சக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவருமே அதிக கவனத்துடன் பேச வேண்டியதும் அவசியம்.
உருவக் கேலி செய்யக் கூடாது என்பதையும், யாரேனும் அதைச் செய்வதைப் பார்த்தால் அச்செயலை ஆதரிக்கக் கூடாது, அதைக் கண்டிக்க வேண்டும் எனவும் கற்றுத்தருவது முக்கியம். உருவக் கேலிக்கு எதிரான விழிப்புணர்வைப் பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி அண்மையில் தெரிவித்திருந்தார். இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். அதே வேளையில் உருவக் கேலி குறித்தான விழிப்புணர்வு முதலில் நம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். ஏனெனில், முதல் உருவக் கேலி பெரும்பாலும் அங்கிருந்துதான் தொடங்குகிறது.
உருவக் கேலிக்கு எதிராகக் குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தர வேண்டும்?
# உருவக் கேலிப் பேச்சுகளை முதலில் பெரியவர்கள் தவிர்த்து, அதைக் குழந்தைகளையும் பின்பற்றச் சொல்லலாம்.
# திரைப்படங்களில் நகைச்சுவை யாகச் சித்தரிக்கப்படும் கேலிப்பேச்சுகள் தவறு என்பதைக் குழந்தைகளுக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டலாம்.
# உருவக் கேலி செய்பவர்களுக்குப் பதிலடியாக அதையே திருப்பிச் செய்வது தவறு எனவும், தவறை விளங்க வைக்க முயற்சி செய்யலாம் என்பதையும் கற்றுத்தர வேண்டும்.
# உருவக் கேலிக்கு ஆளாகும்போது பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் தயங்காமல் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
# புறத்தோற்றம் எப்படி இருந்தாலும் அகத்தோற்றமே மிக முக்கியமானது என்பதைப் புரியவைக்கலாம்.