

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியே மனித குலத்தின் வாழ்வை மகத்தானதாக மாற்றிவருகிறது. கற்பனையிலும் எட்டாத கண்டுபிடிப்புகளை அது மேலும் வழங்கி, வளம் சேர்த்துவருகிறது. அறிவியல் சிந்தனையும் அறிவியல் மனப்பான்மையுமே நாம் சந்தித்துவரும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகளுக்கும் எதிர்கால சவால்களுக்கும் தீர்வு காணும் அருமருந்தாக அமையும். அறிவியல் மனப்பான்மையே வறுமை, வேலையின்மை, கல்லாமை, மூட நம்பிக்கை, இயற்கை வளங்களை வீணாக்குதல், சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை போன்றவற்றை வளர்த்தெடுக்கும் கருவியாகவும் உள்ளது.
இத்தகைய அறிவியல் மனப்பான்மையின் அவசியம் பற்றி 1946ஆம் ஆண்டிலேயே நேரு முதன்முதலாகப் பரிந்துரை செய்தார். ஆனால், 1976ஆம் ஆண்டில்தான் மக்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக 'அறிவியல் மனப்பான்மை’யை வளர்த்தெடுத்தல் மாறியது. 51ஏ எச் என்னும் அரசமைப்புச் சட்டத் திருத்தமே ‘அறிவியல் மனப்பான்மை’யை வளர்த்தெடுத்து, மனிதநேயத்தை வளர்த்தெடுத்திருக்க வேண்டும்.
பகுத்தறிவுவாதிகள், மக்கள் அறிவியல் இயக்கத்தினர் இது பற்றிப் பல காலமாகப் பேசிவருகிறார்கள். ஆனால், அறிவியல் மனப்பான்மை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைக்கப்பட்டுவிட்டது. அதன் பரந்த பொருளை நோக்கிப் பயணிக்கவில்லை. கல்வி நிறுவனங்களில் கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றில் கவனம் செலுத்தியிருந்தால் இந்தத் திசை வழியில் கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கலாம்.
அரசியல் சாசன தினத்தையொட்டி (நவம்பர் 26) தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, இந்த அடிப்படை கடமையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டிருக்கிறது. நாட்டிலேயே இத்தகைய பணியை முதன்முறையாகத் தமிழக அரசே முன்னெடுத்திருக்கிறது. ‘வானவில் மன்றங்கள்’ என்கிற பெயரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இச்செயல் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
மாநிலம் முழுவதும் நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட உள்ளது. அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துதல், அறிவியல், கணிதப் பாடங்களில் உள்ள கருத்துக்களை ஆழமாகச் சிந்திக்க வைத்தல், அந்தக் கருத்துக்களின் மீது திறன்களை வளர்த்தெடுக்கப் பயிற்சி அளித்தல், கேள்வி கேட்கும் மனப்பாங்கை ஊக்குவித்தல், உற்சாகப்படுத்துதல், சிந்தனைத் திறன், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது, கேள்வி கேட்கும் மனம் வேர் விட்டுத் துளிர்விடும்போது மாணவர்களைச் சின்னச் சின்ன ஆய்வுகளில் ஈடுபடுத்துவது, ஆய்வுசெய்யத் தூண்டுவது, பள்ளியிலிருந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் ஆய்வுகளைப் பரிசோதித்துப் பார்க்க உற்சாகமூட்டுவது, ஒரே கோட்பாட்டைப் பல்வேறு தரவுகள், பல்வேறு பொருட்களைக் கொண்டு ஆய்வுசெய்யத் தூண்டுவது போன்ற அடிப்படை நோக்கங்களைக் கொண்டே வானவில் மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கென ஓர் ஒன்றியத்துக்கு ஒரு கருத்தாளர் வீதம் ‘அறிவியல் தூதர்’களாக அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு, அறிவியல், கணித செயல்பாடுகளில் நன்கு பயிற்சி தரப்படும். தேவையான பரிசோதனைக் கருவிகளோடு பள்ளிகளுக்குச் சென்று, செயல்வழியாக அவர்கள் செய்துகாட்டுவார்கள். இவர்களுக்கான மதிப்பூதியம், பயணப்படி, பரிசோதனைக் கருவிகளை அரசு வழங்கியுள்ளது. பள்ளிகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு நிதியையும் ஒதுக்கியிருக்கிறது. தமிழகப் பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரம் ஆசிரியர்கள் தாமாக முன்வந்து இத்திட்டத்துக்கென ஆலோசனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மாவட்ட, வட்டார அளவில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இத்திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இம்முயற்சி ஈடேறும்போது இந்திய அரசியல் சாசனத்தின் 51A (j) பிரிவு சொல்லும் கூற்றும் நிறைவேறும். பள்ளிக் கல்வி வழியாக அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க ஏற்ற பருவம் ஆறு முதல் எட்டு வரை படிக்கும் வயதுடையவர்களே. அறிவியல் தொழில்நுட்பத்தின் கனிகளை அறிவியல் மனப்பான்மையோடு பயன்படுத்தும்போது அவற்றின் பயன் எல்லாருக்கும் சென்று சேரும். இச்செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசின் முயற்சி வெற்றி அடையட்டும். - நா.மணி கட்டுரையாளர், பொருளாதாரப் பேராசிரியர், tnsfnmani@gmail.com