ஆங்கிலம் அறிேவாேம 4.0 - 10: எதை உள்ளடக்கியது ‘இன்குளூசிவ்?’

ஆங்கிலம் அறிேவாேம 4.0 - 10: எதை உள்ளடக்கியது ‘இன்குளூசிவ்?’
Updated on
2 min read

ஒரு வாசகர் கேட்டார். ‘இன்று வியாழக்கிழமை. ‘Last Wednesday’ என்று நான் குறிப்பிட்டால் அது நேற்றைய நாளைக் குறிக்கிறதா அல்லது போன வார புதன் கிழமையைக் குறிக்கிறதா?’.

நண்பரே, இதுபோன்ற கேள்விகள் மொழியின் இலக்கணத்தில் அடங்காது. நடைமுறையில் நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் சேரும். இன்று வியாழக்கிழமை என்றால் ‘last Wednesday’ எனும்போது, அது சென்ற வார புதன் கிழமையைத்தான் குறிக்கிறோம். ஏனெனில் நேற்று வந்த புதன்கிழமையை ‘yesterday’ என்றே குறிப்பிடுவோம்.

இன்று வியாழக்கிழமை. மூன்று நாட்களுக்கு முந்தைய திங்கள் கிழமையை ‘I went to the hospital on Monday’ என்றும் பத்து நாட்களுக்கு முன் சென்ற திங்கள் கிழமையை ‘last Monday’ என்றும் குறிப்பிடுவோம்.

‘Next Tuesday meeting’ என்று ஒருவர் குறுந்தகவல் அனுப்பினால் அதை எப்படிப் புரிந்து கொள்வது? இன்று புதன் கிழமையென்றால் பிரச்சினை இல்லை. ஆனால், இன்று திங்கள் கிழமை என்றால்? அப்போதும் அதே நாளைத்தான் குறிக்கிறோம். அதாவது அடுத்த வார செவ்வாய்.

தமிழில்கூட இந்த ஐயம் எழலாம். நாளிதழில் டிசம்பர், 2022ல் எழுதப்படும் கட்டுரையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் என்றால் அது பிப்ரவரி, 2022ஐ குறிக்கும். என்றாலும் ‘இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்’ என்று எழுதினால் குழப்பம் வராதே! பிறரால் நமக்கு இந்த விஷயத்தில் குழப்பம்உண்டாகலாம். ஆனால் நாம் குழப்பத்தை உண்டாக்குவதைத் தவிர்த்து விடலாமே.

கீழே உள்ளதில் எது குழப்பத்தைத் தவிர்க்கும் கேள்வி(கள்) என்பதைக் கூறுங்கள். (இன்று செவ்வாய்க் கிழமை என்று வைத்துக்கொள்வோம்)

1. Can you come to my house next Sunday?
2. Can you come to my house on Sunday?
3. Can you come to my house this Sunday?
******
இப்போது செய்தி வாக்கியத்துக்கு வருவோம். ‘India’s G-20 agenda will be inclusive, ambitious, action-oriented and decisive.’
G-20 என்ற அமைப்பு 19 நாடுகளையும் ஐரோப்பிய யூனியனையும் கொண்டது. உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சவால்களைச் சமாளிக்கும் வழிமுறைகளை இது விவாதிக்கும். ‘Agenda’ என்பதை நிகழ்ச்சி நிரல் என்று கூறலாம். அதாவது செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான விவரங்களின் பட்டியல்.

சரி, இப்பட்டியல் ‘inclusive’ஆக இருக்கும் என்றால் என்ன பொருள்? ‘Inclusive’ என்ற வார்த்தை ‘உள்ளடக்கியது’ என்ற பொருள் கொண்டது. எதை உள்ளடக்கியது? எதை உள்ளடக்கியது என்பதைக் குறிப்பிட்டிருந்தால் அதை உள்ளடக்கியது - Term fee inclusive of lab fee என்பது போல்.

ஆனால், செய்தி வாக்கியத்தில் எது அல்லது யார் ‘inclusive’ என்று குறிப்பிடவில்லை. எனவே, இச்சொல் எல்லாவற்றையும் அல்லது எல்லா மக்களையும் என்ற பொருளைக் கொடுக்கிறது. அதாவது எல்லாத் தரப்பு மக்களையும். எல்லா வகைக் கருத்துக்கள் கொண்ட மக்களையும். ‘The government must adopt more inclusive strategies and a broader vision.’

‘Action oriented?’ அதாவது அமைப்பின் செயல்பாடுகள் சும்மா ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் செயல்படத்தக்கதாக இருக்க வேண்டும். ‘Ambition’ என்றால் ஆசை அல்லது ஆர்வம். ‘Ambitious’ என்றால் ஆர்வம் கொண்ட. என்றாலும் இது இங்கே சக்திமிக்க அல்லது எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீர்மானம் கொண்ட என்று பொருள் தருகிறது. ‘A fiercely ambitious young industrialist.’

ஒன்றைச் செய்ய நிறைய முயற்சி தேவை, நிறையப் பணம் தேவை, நிறைய காலம் தேவை என்றால் அதைக்கூட ‘ambitious’ என்ற சொல்லின் மூலம் குறிப்பிடுவதுண்டு. ‘It is an ambitious project.’

‘Decisive’ என்றால்? குழப்பமற்ற, இறுதியானதாக, மிக முக்கியமான. ஒரு போரில் ‘decisive factor’ என்று ஒன்றைக் குறிப்பிட்டால் அதுதான் அந்தப் போரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க மிக முக்கியமானது என்று பொருள். ‘Government must take decisive action’ என்றால் வார்த்தை அலங்காரம் செய்துக்கொண்டிருக்காமல் தீர்மானமான, தெளிவான செயல்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று பொருள்.

(தொடரும்) - ஜி.எஸ்.எஸ். aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in