விண்வெளி துறையில் புதுமை: விக்ரம் எஸ்

விண்வெளி துறையில் புதுமை: விக்ரம் எஸ்
Updated on
2 min read

இனி, இந்தியாவில் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை ஏவுவது ஒரு டாக்சியை முன்பதிவு செய்வதுபோல விரைவில் எளிதாகிவிடும். இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’ நவம்பர் 18ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ வரலாறு படைத்தது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ‘விக்ரம் எஸ்’ ஏவப்பட்டது.

இந்திய விண்வெளித் துறையின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர். விக்ரம் சாராபாயின் நினைவாக இந்த ராக்கெட்டுக்கு ‘விக்ரம் எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்துள்ளது.

விக்ரம் ராக்கெட் ஏவும் சீரிஸில் மூன்று வகையான ராக்கெட்டுகள் உள்ளன. இந்த ராக்கெட்டுகள் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும். ‘விக்ரம் எஸ்’ என்பது மூன்று பேலோடுகளைச் (செயற்கைக்கோள்) சுமந்து செல்லும் ஒற்றை-நிலை துணை சுற்றுப்பாதை ராக்கெட்.

விக்ரம் I, விக்ரம் II, விக்ரம் III ஆகியவற்றால் தாழ்வான புவி வட்டப்பாதைக்கு (லோ எர்த் ஆர்பிட்) அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்ல முடியும். விக்ரம் எஸ் மூன்று சிறிய செயற்கைக்கோள்களை ‘லோ எர்த் ஆர்பிட்’டுக்கு கொண்டு சென்றது. இதில், இரண்டு இந்திய வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமானவை. ஒரு செயற்கைக்கோள் வெளிநாட்டுக்குரியது.

ராக்கெட்டின் முழுமையான பரிசோதனை 2022ஆம் ஆண்டு மே மாதம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், துணை வட்டப் பாதைத் திட்டத்துக்கு ‘பிரரம்ப்’ (ஆரம்பம்) என்று ஸ்கைரூட் நிறுவனம் பெயரிட்டது. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளான பவன்குமார் சந்தனா, நாக பரத் டாக்கா ஆகியோர் இணைந்து 2018இல் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தைத் தொடங்கினர்.

தனியார் நிறுவன முயற்சிகளை, இஸ்ரோ ஊக்கப்படுத்தி வருகிறது. ராக்கெட் ஏவுவதில் ஒருங்கிணைப்பு வசதி, ஏவுதளம், தொலைதூரத் தொடர்பு, கண்காணிப்பு ஆகியவற்றை இஸ்ரோ செய்கிறது. தனியார் நிறுவனமான ஸ்கைரூட் அதன் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் ஸ்டார்ட் அப் நிறுவனம்.

சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ், ஸ்பேஸ்கிட்ஸ், கோவையைச் சேர்ந்த பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் ஆகியவை சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பவிருக்கும் பிற இந்திய நிறுவனங்கள்.

ஸ்கைரூட் உயர்தரத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிக எண்ணிக்கையிலும் மிகவும் குறைந்த விலையிலும் ராக்கெட்டுகளைத் தயாரிக்க முன்வந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் சிறிய செயற்கைக்கோள்களைத் தங்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்துவதை இந்நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டாயிரம் செயற்கைக்கோள்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

இந்த ராக்கெட்டுகள் ஏவுதளத்திலிருந்து குறைவான கால அளவுள்ள கவுண்ட் டவுனுடன் (3 - 4 மணி நேரம்) 24 மணி நேரத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டு ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. விண்வெளித் துறையில் இஸ்ரோ, தனியார் விண்வெளி நிறுவனங்களை ஒருங்கிணைக்க ‘IN-SPACEe’ என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

இன்னும் 20 ஆண்டுகளுக்குள் உலகளாவிய விண்வெளித் தொழில் சுமார் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, இந்தச் சந்தையில் தடம் பதிக்க ஆர்வமாக உள்ளது. தற்போது உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு இரண்டு சதவீதமாக உள்ளது. இதை அதிகரிக்க தனியார் நிறுவனங்களை இந்தியா ஊக்குவிக்கிறது.

இந்திய மண்ணிலிருந்து... இந்தியாவின் முதல் ராக்கெட் நவம்பர் 21, 1963 அன்று திருவனந்தபுரம் அருகே தும்பாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. அந்த ராக்கெட் வெறும் 715 கிலோ எடை கொண்டது. 30 கிலோ எடையுடன் 207 கிலோமீட்டர் உயரத்தை எட்டும் வகையில் அது இருந்தது. ஒரு ராக்கெட் வட்டப் பாதையில் சுற்றுப்பாதை வேகத்தை எட்ட மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். இல்லையெனில் அது பூமியில் விழுந்துவிடும். ‘சப் ஆர்பிட்டல்’ ராக்கெட்டுகள் மணிக்கு 6,000 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in