ஆங்கிலம் அறிவோமே 4.0 - 8: நீங்க பாப்புலரா, ரொம்ப பாப்புலரா?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 8: நீங்க பாப்புலரா, ரொம்ப பாப்புலரா?
Updated on
2 min read

முதலில் வாசகர் ஒருவரின் ஐயத்தைப் பார்த்துவிட்டு பிறகு செய்தி வாக்கியத்துக்குச் செல்வோம்.

‘எனது தந்தை ஒரு தீவிர சிவாஜி ரசிகர். அவருடன் சிவாஜி நடித்த ‘கெளரவம்’ திரைப்படத்தை 50 முறையாவது பார்த்திருப்போம். அப்படத்தில் ஒரு நீதிமன்ற காட்சியில் சிவாஜி கணேசன் நீதிபதியிடம் மேஜர் சுந்தர்ராஜனைக் குறித்து 'Your Honour, he is so popular' எனக் கூறுவார். ‘Popular person’ என்றால் புகழ்பெற்றவர் என்பதைத் தவிர வேறு அர்த்தம் ஏதேனும் இருக்கிறதா? ‘Popular’-க்கும் ‘So Popular’க்கும் வேறுபாடு இருக்கிறதா?’

‘Popular’ என்றால் புகழ்பெற்ற என்பதைத் தவிர அதே சாயலில் வேறொரு பொருளும் உண்டு. சராசரி மக்கள் தொடர்பான (அறிவுஜீவிகளுக்கு அவ்வளவு ஏற்பு இல்லாத) ‘Popular music’ என்றால் சராசரி மக்கள் விரும்பும் இசை. அதிகமாகப் புகழ்பெற்ற என்றால் (so popular என்பதைவிட) ‘very popular’ என்று குறிப்பிடலாம்.

என்றாலும் ‘We all know that he is so popular because he is a very good singer’ என்பது போல் கணிசமானவர்கள் பயன்படுத்துகிறார்கள். (அவர் அவ்வளவு புகழ் பெற்றவராக இருப்பது ஏனென்றால் என்கிற அர்த்தத்தில்).

எதிர்மறைப் பொருளில் பெறப்படும் பிரபலத்துவத்தை ‘popular’ என்பதற்கு பதிலாக ‘notorious’ என்கிற வார்த்தையின் மூலம் குறிப்பிடலாம். புகழ்பெற்ற திருடன் என்றால் ‘notorious thief’. ‘Notorious crimes’ என்றால் கொடூரமான குற்றங்கள். ‘Notorious places’ என்றால் மோசமான இடங்கள்.

இப்போது செய்தி வாக்கியம். ‘Crises between America and China loom on several fronts’.

அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகளைக் குறிப்பிட்டதால் between என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டுக்கும் மேற்பட்ட என்றால் ‘among’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ‘Crises among America, China and U.K.’
‘Crisis’ என்றால் நெருக்கடி. ‘Crisis’ என்பதன் பன்மை ‘crises’. ‘Loom’ என்பது தறியைக் குறிக்கிறது. நெசவுத் தறி. இந்த ஆங்கிலச் சொல் ‘verb’ஆகப் பயன்படுத்தப்படும்போது அது ‘பெரிதாகப் பயமுறுத்தும் வகையில்’ என்ற பொருள் கொண்டதாக உள்ளது. ‘Another air plane loomed into the sky எனும்போது அந்த விமானம் வேறொரு விமானத்தோடு மோதிவிடுமோ என்ற பரிதவிப்பும் உணர்த்தப்படுகிறது.

ட்விட்டர், மெட்டா, அமேசான் போன்றவற்றில் அதிரடி ஆட்குறைப்பு செய்வதை அறிந்ததும், ‘the threat of downsizing looms over the workforce’. ‘Front’ என்றால் முன்னால் அல்லது முன்புறம் என்பது தெரிந்திருக்கும். அதன் எதிர்ச்சொல் ‘back’. அதே சமயம் ஒரே அரசியல் கொள்கையைக் கொண்டு அது நிறைவேறுவதற்காகச் செயல்படும் குழு தன்னை ‘front’ என்று குறிப்பிட்டுக்கொள்வதுண்டு.
‘National Front’, ‘Liberation Front’.

மற்றவர்களை ஏமாற்றுவதற்காகப் பொதுவெளியில் நடந்து கொள்ளும் தன்மையையும் ‘front’ என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுவதுண்டு. ‘She presents a cheerful front; but she is ill. Don’t be fooled by her fondness–it is just a front.
ஆனால், செய்தி வாக்கியத்தில் காணப்படும் ‘several fronts’ என்பதற்கு ‘பல தளங்களில்’ அல்லது ‘பல கோணங்களில்’ என்று பொருள் கொள்ளலாம். அதாவது ‘Crises between America and China loom on several fronts’ என்ற வாக்கியத்துக்கு அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே பல முனைச் சிக்கல்கள் அச்சுறுத்துகின்றன என்று பொருள் கொள்ளலாம். ‘Multiple fronts’ என்பதும் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிக்கிறது.

(தொடரும்) ஜி.எஸ்.எஸ்., aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in