முனைவர் படிப்புக்குப் புதிய விதிமுறைகள்

முனைவர் படிப்புக்குப் புதிய விதிமுறைகள்
Updated on
2 min read

முனைவர் பட்டம் (Phd) பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறையில் பணியில் இருக்கும் பட்டதாரிகளுக்காக, பகுதிநேர முனைவர் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மதிப்பெண்களில் 5 சதவீதத் தளர்வும் அளிக்கப்படுகிறது. 2016இல் அறிவிக்கப்பட்ட விதிகளுக்குப் பதிலாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள்:

புதிய விதிமுறைகள்: முதலாவதாக, சேர்க்கைக்கான தகுதி அளவுகோல்கள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, நான்கு ஆண்டு/எட்டு செமஸ்டர் இளங்கலை திட்டப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான படிப்புத்தரம் பெற்றவர்கள் முனைவர் பட்டத்துக்குத் தகுதியுடையவர்கள். இருப்பினும், நான்கு ஆண்டு இளங்கலை பட்டப் படிப்புக்குப் பின்னர் முனைவர் படிப்பில் இணைய விரும்புவோர் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மூன்று ஆண்டு இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தோர், முனைவர் படிப்பில் இணைய இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். முன்பு பல பல்கலைக்கழகங்கள் முனைவர் படிப்புக்கு எம்.பில்., படிப்பையும் வலியுறுத்தின. தற்போது எம்.பில்., படிப்பின் தேவை நீக்கப்பட்டுள்ளது.

சேர்க்கையில் மாற்றங்கள்: வழக்கம்போலப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் நெட்/ஜேஆர்எஃப் தகுதி வழியாகவும், கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகள் மூலமும் முனைவர் படிப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும் வழிமுறை தொடரும். நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் 50 சதவீத ஆராய்ச்சி முறைகளையும், 50 சதவீதம் பாடம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் கூறுகின்றன. தனிப் பல்கலைக் கழகங்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில், எழுத்துத் தேர்வின் திறனுக்கு 70 சதவீதமும், நேர்காணலுக்கு 30 சதவீதமும் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் முனைவர் படிப்புக்கான வருடாந்திர சேர்க்கையில் 60 சதவீதத்தை நெட்/ஜேஆர்எஃப் தகுதிபெற்ற நபர்களுக்கு ஒதுக்க வேண்டும் எனும் நடைமுறை தற்போது கைவிடப்பட்டுள்ளது. முக்கியமாக, முனைவர் படிப்புக்கான உத்தேச பொது நுழைவுத் தேர்வும் கைவிடப்பட்டுள்ளது.

முனைவர் வழிகாட்டிகள்: முன்பு போலவே, தகுதியுடைய பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் முறையே எட்டு, ஆறு, நான்கு முனைவர் படிப்புக்கான விண்ணப்பதாரர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டியாகச் செயல்படலாம். ஒவ்வொரு மேற்பார்வையாளரும் இவர்களுடன் சேர்த்து, கூடுதலாக இரண்டு வெளிநாட்டு மாணவர்களுக்கும் வழிகாட்டியாகச் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களும் கல்லூரி களும் வெளிநாட்டு முனைவர் பட்ட மாணவர்களின் சேர்க்கையை நிர்வகிக்க சொந்த விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம். முனைவர் படிப்புக்கான மாணவர்கள், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள பேராசிரியர்களைத் தங்களுக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொள்வதைத் தற்போதைய விதி தடை செய்கிறது.

தரம் மேம்பாடு: முனைவர் பட்டப் படிப்புக் காலத்தில் மாணவர்கள் தேர்ந்தெடுத்த பாடத்துடன் தொடர்புடைய கற்பித்தல்/ஆய்வு/எழுதுவதில் பயிற்சி ஆகியவற்றைப் பெறுவதை புதிய விதிமுறைகள் உறுதிசெய்கின்றன.

ஏன் நீக்கம்? - முனைவர் படிப்பைப் பயிலும் மாணவர்கள், முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளைப் பிரசுரிக்க வேண்டும் என்கிற விதிமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் மூலம் பின்னாட்களில் காப்புரிமை பெற முடியும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், தேசிய, சர்வதேச தரத்திலான ஆய்விதழ்களில் 75 சதவீத மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதில்லை என்பது மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், ஐஐடிகளிலும் முனைவர் பட்டம் பயிலும் 2,573 மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால், ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பது கட்டாயம் எனும் விதிமுறையை யுஜிசி நீக்கியுள்ளது.

பகுதி நேரப் படிப்பு: பகுதி நேர முனைவர் படிப்பு என்பது ஏற்கெனவே ஐஐடிகளில் உள்ளன. இருப்பினும், பெரும்பாலான பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரி களுக்கும் இது புதிது. இதில் முழுநேர விண்ணப்பதாரர் களுக்கும், பகுதி நேர விண்ணப்பதாரர் களுக்குத் தகுதி நிபந்தனைகள் ஒன்றாகவே இருக்கும். பணி மதிப்பீடும் ஒன்றாகவே இருக்கும். வழக்கமான தகுதி நிபந்தனைகளுடன் கூடுதலாக, பகுதிநேர விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.

முனைவர் படிப்பின் பங்கு: முனைவர் படிப்புக்கான வருடாந்திர சேர்க்கை உயர்கல்வியில் மிகச் சிறிய பங்கையே கொண்டுள்ளது. 2015-16இல் 1,26,451 ஆக இருந்த சேர்க்கை, 2019-20இல் 2,02,550ஆக உயர்ந்துள்ளது. ஆனால், உயர்கல்வி மொத்த மாணவர் சேர்க்கையில் இது 0.5 சதவீதம் மட்டுமே. தற்போது புதிய விதிமுறைகள் இந்த நிலையை மேம்படுத்த உதவக்கூடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in