ஆங்கிலம் அறிவோமே 4.0 - 7: ஹார்பரும் போர்ட்டும் ஒன்றா?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 7: ஹார்பரும் போர்ட்டும் ஒன்றா?
Updated on
2 min read

Traffic surge at ports is a sign of India's economic revival.

மேற்குறிப்பிட்ட செய்தியில் உள்ள சில வார்த்தைகளைப் பார்ப்போம். ‘Surge’ என்றால் திடீர் அதிகரிப்பு. பெரும் அதிகரிப்பு. ஓலா, உபர் பயனாளிகள் ‘surge rate’ குறித்து அவ்வப்போது நொந்து போவார்கள். சமயத்தில் ஒரு பகுதிக்குச் செல்ல விரும்புபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தால், அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் திடீரென உயரும். ‘என்ன இது, இந்த இடத்துக்குச் செல்ல வழக்கமாக 150 ரூபாய்தானே காட்டும்? இப்போது 250 என்று காட்டுகிறதே’ என்று பயனாளிகள் பதறக்கூடும்.

‘There is a surge in house rents recently’ என்றால் திடீரென வீட்டு வாடகைகள் அதிகரித்துள்ளன என்று பொருள். ‘திடீரென்று, அதிக அளவில்’ ஆகிய இரண்டுமே ‘surge’ன் தன்மைகள். ‘Surge in electrical power’ உண்டானால் அது கணினி, டிவி செட் போன்றவற்றுக்கு ஊறு விளைவிக்கலாம்.

‘Port’ என்றால் துறைமுகம். ‘Harbour’ என்பதையும் துறைமுகம் என்கிறோம். இரண்டிலுமே படகுகள், கப்பல்களைக் காண முடியும் என்பது ஒற்றுமைதான். மற்றபடி அது வேறு, இது வேறு. மனிதர்கள் (மற்றும் பொருள்களை) படகுகள் அல்லது கப்பல்களில் ஏறி இறங்கும் (ஏற்றி இறக்கும்) பகுதியை ‘port’ என்பார்கள். ‘Port’ பகுதியில் பளுதூக்கிகள் (cranes), கிடங்குகள் போன்றவை இருக்கும். கப்பல்களில் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்யும் வசதிகளும் இருக்கும். அதோடு சாலை அல்லது ரயில் போக்குவரத்து தொடர்புகொண்டதாக ‘port’ இருக்கும். ஏனென்றால் வணிகப் பரிவர்த்தனைகள் அங்கே நடைபெற வாய்ப்பு அதிகம்.

தட்பவெப்பநிலை கடுமையாகும்போது கப்பல்களையும் படகுகளையும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் இடம் ‘harbour’. ‘Harbour’ என்பது கடலிலிருந்து சற்று உள்ளடங்கியும் இருக்கலாம். அது இயற்கையாகவோ மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம். தொன்மையான ஆங்கிலத்தில் ‘herebeorg’ என்ற வார்த்தைக்கு தஞ்சம் அல்லது பாதுகாப்பு என்று பொருள். அதிலிருந்து உருவானதுதான் ‘harbour’.

ஒரு எண்ணத்தையோ உணர்வையோ தொடர்ந்து கொண்டிருப்பதையும் ‘harbour’ என்பதுண்டு. ‘Harbour a hatred’ என்றால் ஒரு வெறுப்பை தொடர்ந்து மனத்தில் தக்க வைத்துக் கொள்வது. இப்போது துறைமுகங்கள் தொடர்பான சில வார்த்தைகளின் பொருட்களைப் பார்ப்போமா?

நீர், வான், நிலம் ஆகிய எதன் வழியாகவும் எடுத்துச் செல்லப்படும் பொருள்களை ‘cargo’ என்பார்கள். ‘Vessel’ என்றால் பாத்திரம் என்ற வார்த்தைதான் நம் நினைவுக்கு சட்டென்று வரும். ஆனால், அந்த ஆங்கில வார்த்தை கப்பல் என்பதையும் குறிக்கும்.

‘Anchor’ என்பது நிகழ்ச்சியைத் தொகுத்து அளிப்பவரைக் குறிக்கிறது என்பது பலரது மனத்தில் பதிந்திருக்கும். ஆனால், கூர்மையாகச் செயல்பட்டு கப்பலை நிறுத்த உதவும் பகுதியைத்தான் நங்கூரம் என்பது வழக்கம். ‘Beam’ என்பது கப்பலின் அகலத்தைக் குறிக்கும். ‘Bunker’ என்பது எரிபொருளை நிரப்பி வைத்துக்கொள்ளும் இடம்.

பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கப்பலில் எடுத்துச் செல்லும்போது இவ்வளவு நாட்களுக்குள் அதை எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். அதைவிட தாமதமானால் அளிக்கும் அபராதத் தொகையை ‘demurrage’ என்பார்கள். ‘Freight’ என்றால் சரக்கு. சரக்குக் கட்டணத்தைக் குறிக்கவும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

செய்தி வாக்கியத்தில் ‘economic revival’ என்று காணப்படுகிறது. ‘Revival’ என்பதை மறுமலர்ச்சி அல்லது புத்தாக்கம் என்று பொருள் கொள்ளலாம். அதாவது, ஏற்கெனவே இருந்த ஒன்று நடுவில் குறைந்திருந்தது மீண்டும் செயல்படத் தொடங்குவதை இந்த வார்த்தையின் மூலம் குறிப்பிடுவார்கள். ‘Recently there has been a revival of ancient music’ என்றாள் பழங்கால இசை மீது சமீபகாலமாக அதிக ஈடுபாடு செலுத்தப்படுகிறது என்று கொள்ளலாம்.
‘Economic revival’ என்பது கொஞ்சம் சுருங்கிப் போயிருந்த பொருளாதாரம் மீண்டும் வேகம் எடுப்பதை உணர்த்துகிறது. அதிக அளவில் துறைமுகங்கள் செயல்பட்டால், ஏற்றுமதி இறக்குமதி அதிக அளவில் உள்ளது என்று பொருள். இது பொருளாதார மந்த நிலைக்கு எதிரானது. எனவேதான் துறைமுகங்களில் திடீரென்று அதிகமாகும் பரிவர்த்தனைகள் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் உயர்வதை சுட்டிக்காட்டுகிறது என்கிறது செய்தி வாக்கியம்.

(தொடரும்)

(தொடரைப் படிக்கும்போது ஆங்கிலம் தொடர்பாக எழும் சந்தேகங்களை கேள்விகளாக அனுப்பலாம்.)

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in