நெதர்லாந்தில் உதவித்தொகையுடன் உயர்கல்வி

நெதர்லாந்தில் உதவித்தொகையுடன் உயர்கல்வி
Updated on
2 min read

அறிவியல் தொழில்நுட்பத்திலும், புதியவற்றைக் கண்டுபிடிப்பதிலும் நெதர்லாந்து ஒரு முன்னோடி நாடு. கணிதம், இயற்பியல், உயிரியல், பொறியியல் என அனைத்துத் துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளை அனுதினமும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நெதர்லாந்து பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியில் முக்கியத்துவம் பெற மிக முக்கியக் காரணம், கிட்டத்தட்ட அனைத்து உயர்நிலைப் படிப்புகளையும் தற்போது அவை ஆங்கிலத்தில் வழங்குகின்றன.

அதிக செலவின்றி, சிறந்த உதவித்தொகையுடன் உலகின் தலைசிறந்த உயர்கல்வியைப் பெறும் வாய்ப்பை நெதர்லாந்தில் உள்ள இப்பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. பலதரப்பட்ட இளநிலை, முதுநிலை படிப்புகள் அனுபவமிக்க பேராசிரியர்களால் நடத்தப் படுகின்றன. எந்தக் கல்வி உதவித்தொகையும் இன்றி இப்பல்கலைக்கழகங்களில் படிக்க இந்திய மதிப்பில் பல லட்சங்கள் செலவாகும் என்றாலும், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனியே தங்கள் பல்கலை.யில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குகின்றன. ஆண்டுக்கு சுமார் ஐந்தாயிரம் வெளிநாட்டு மாணவர்கள் உதவித்தொகையைப் பெறுகிறார்கள்.

பொதுவாக, அமெரிக்க மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதில்லை. ஐரோப்பிய மாணவர்களும் உதவித்தொகைகக்கு விண்ணப்பிக்க அனுமதி இல்லை. ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையிலேயே உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உதவித்தொகைகளைப் பெற்று பயின்று வருகிறார்கள்.

இந்த உதவித்தொகையைப் பெற முதலில் நெதர்லாந்து பல்கலை.யில் சேர விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. ஏதேனும் ஒரு பல்கலை.யில் இடம் கிடைத்தால், அங்கேயே உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். நெதர்லாந்து பல்கலைக்கழகங்களில் படிக்கக் கூடுதலாக ஆங்கிலத் தகுதித்தேர்வில் (TOEFL, IELTS) தேர்ச்சி பெறுவது அவசியம். பள்ளிப்படிப்பு அல்லது இளநிலை கல்லூரிப் படிப்பை முழுவதும் ஆங்கிலத்தில் படித்திருந்தால் அதற்கான ஆதாரத்துடன் ஆங்கிலத் தகுதித் தேர்விலிருந்து விலக்குக் கோரலாம். 2023ஆம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்புகள் தற்போது வெளியாகின்றன. பல்கலைக்கழங்கள், படிப்புகள் தொடர்பாக https://www.studyinnl.org/dutch-education/studies என்கிற இணைய தளத்தில் அறியலாம்:

உதவித்தொகை பெற தகுதிகள்: ஐரோப்பிய குடியுரிமை பெற்றிருக்கக் கூடாது. முழுநேர இளங்கலை அல்லது முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். உங்களுக்குச் சேர்க்கை அனுமதி அளித்திருக்கும் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும். இதற்கு முன்பு நெதர்லாந்து பல்கலை.யில் படித்திருக்கக் கூடாது. இந்தத் தகுதிகள் பொருந்தும்பட்சத்தில், பள்ளிக் கல்வி, இளநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், சிறப்பு தகுதிகள், ஆங்கில தகுதித் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். தகுதி திறமைக்கு ஏற்ப €2000 முதல் €30,000 வரை உதவித்தொகை இருக்கக்கூடும்.

மூன்று வகை உதவித்தொகைகள்: பகுதி அளவு கல்விக்கட்டணச் சலுகை (மீதமுள்ள கல்விக் கட்டணம், தங்கும் செலவை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்) அல்லது முழுமையான கல்விக் கட்டணச் சலுகை (தங்கும் செலவை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்) அல்லது முழுமையான கல்விக் கட்டணச் சலுகை தங்குவதற்கான செலவு உள்ளடக்கியது (முழு கல்வி உதவித்தொகை). பெரும்பாலான கல்வி உதவித்தொகைகளுக்கு வருகிற 2023 பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எந்தப் பல்கலைக்கழகங்களில் எந்தப் படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது, விண்ணப்பிக்க கடைசி தேதி போன்றவற்றை https://www.studyinnl.org/finances/holland-scholarship என்கிற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம். - கண்ணன் கோவிந்தராஜ், merchikannan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in