Last Updated : 08 Nov, 2022 06:36 AM

Published : 08 Nov 2022 06:36 AM
Last Updated : 08 Nov 2022 06:36 AM

ப்ரீமியம்
ஆங்கிலம் அறிவோமே 4.0 - 6: ப்ராக்ஸி என்பவர் யார்?

Mr Sunak promised to deliver the manifesto that won the Conservatives a landslide election victory in 2019 and pledged to fix ‘mistakes’ made under Liz Truss's leadership.

மேற்படி செய்தியில் உள்ள சில வார்த்தைகள் குறித்த விளக்கங்களைப் பார்ப்போம். ‘Manifesto’ என்றால் கொள்கை விளக்க அறிக்கை. தேர்தல் அறிக்கை என்றும் கொள்ளலாம். தேர்தல் குறித்த வேறு சில சொற்களைக் குறித்து தெளிவு பெறுவோமா?

‘Candidacy’ என்றால் சிறு குழப்பம் ஏற்படுபவர்களுக்குக்கூட ‘candidate’ என்ற வார்த்தைப் பொதுவாகத் தேர்தலில் நிற்பவரைக் குறிக்கிறது என்பது தெரிந்திருக்கும். ‘Candidacy’ தேர்தலில் நிற்கும் நிலையை அல்லது தன்மையைக் குறிக்கிறது எனலாம். ‘He is expected to announce his candidacy for mayor’ என்றால் மேயர் தேர்வுக்கு தான் போட்டியிடப் போவதை அவர் அறிவிக்கப் போகிறார் என்று பொருள்.

‘Exit poll’ என்பது வாக்களித்துவிட்டு வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வருபவர்களிடம் அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தனர் என்று கேட்டு, அதன்மூலம் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பதைக் கணிக்கும் செயல்முறை. (‘அவங்கிட்ட வாங்கின காசுக்கு ஏணி சின்னத்தில ஒரு குத்து. உன்கிட்ட வாங்கின காசுக்கு தென்னை மரச் சின்னத்தில ஒரு குத்து. சந்தேகம் இருந்தா, இதோ வாக்குச் சீட்டைப் பாரு’ என்று ஒருவர் கூறும் காட்சியில் வடிவேலு நடத்துவதுகூட ஒருவகையில் ‘exit poll’தான்!).

‘Franchise’ என்பது வாக்களிக்கும் உரிமை. வணிகத் தளங்களில் ‘franchise’ செய்வது என்பது ஒரு நிறுவனம் தனது தயாரிப்புகளை ஒரு குறிப்பிட்ட பகுதியில் வேறொருவர் விற்பதற்கான உரிமையை அளிப்பது. ‘Proxy (voter)’ என்பவர் யார்? ஒருவர் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் தனக்குப் பதிலாக (பெரும்பாலும் தான் விரும்பும் வகையில்) வேறொருவரை வாக்களிக்கச் சொன்னால் அப்படி வாக்களிப்பவர் ‘proxy’ என்று குறிப்பிடுவார்.

தனக்கென வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் கேரவான்களில் தலைவர்கள் நின்றபடி பயணம் செய்துகொண்டு மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்வதுண்டு. அது போன்ற வாகனத்தை ‘battlebus’ என்பதுண்டு. கேபினெட் என்பது பொதுவாக மொத்த அமைச்சரவையும் குறிக்கும் வார்த்தை அல்ல. சீனியர் அமைச்சர்கள் அமைந்த சிறு குழுவைத்தான் ‘cabinet’ என்கிறார்கள்.

‘Kitchen cabinet’ என்பதற்கும் சமையலறைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. எந்தவித அதிகாரப் பதவியிலும் இல்லாத ஒரு சிலர் தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகளை அளித்து அவர்களை ஆட்டி வைப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் ‘kitchen cabinet’ என்பது வழக்கம்.

'Landslide election victory' என்றும் செய்தியில் குறிப்பிடப்படுகிறது. தேர்தலில் ஒரு கட்சி மிகமிக அதிக வாக்கு பெற்றால் அதை 'landslide victory' என்பதுண்டு. 'Landslide' என்பது நிலச்சரிவைக் குறிக்கிறது. அதாவது வெகு வேகமாக ஒரு கட்சிக்கான ஆதரவு வெள்ளமாகப் பெருகி மற்றொரு கட்சியைப் புதையுண்டு போகச் செய்வதை இப்படிக் குறிக்கிறார்கள். 1800களில் அறிமுகமானது இந்தப் பயன்பாடு.

'Fix the mistakes என்றால் தவறுகளை சரிசெய்தல். அதாவது, தனக்கு முன் பிரதமராக இருந்தவர் சில கோளாறுகளை செய்து வைத்திருப்பதாகவும் அவற்றைத் தான் சரி செய்யப் போவதாகவும் ரிஷி கூறுகிறார். ‘Fix the economy’ என்றால்? பொருளாதாரம் சிக்கலில் அல்லது சரிவில் இருக்கிறது. எனவே அதை சரி செய்து மீட்டெடுப்பது என்று பொருள்.

பதவி ஏற்ற ஆறே வாரங்களில் நிலைமையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியை ராஜினாமா செய்யும்படி ஆனது. இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சில குறும்புக்காரர்கள், தான் பதவியேற்றபோது லிஸ் ட்ரஸ், ராணி எலிசபெத்தை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு இருவருமே மனதுக்குள் 'நீங்கள் அதிக நாட்களுக்கு நிலைத்து இருக்க மாட்டீர்கள்' என்று கூறுவது போல் காமென்ட் அடித்திருந்தார்கள். இதற்கான இருவரின் மைண்ட்வாய்ஸ் (ஆங்கிலத்தில்) எதுவாக இருக்கும் என்பதை கொஞ்சம் யோசியுங்களேன்.
அதுமட்டுமல்ல. அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு ‘மிக அதிக காலம் பதவி வகித்தவரும் மிகக் குறைந்த காலம் பதவி வகித்தவரும்’ என்று தலைப்பு வேறு! தேர்தல் என்றால் பிரச்சாரம் இருக்கத்தான் செய்யும். அதை கேன்வாஸிங் என்பார்கள். Canvas என்பது ஒருவித உறுதியான துணி வகையை குறிக்கிறது. Canvass என்பதுதான் பிரச்சாரத்தை உணர்த்தும் சரியான வார்த்தை.
குறும்பு வாசகத்தில் ‘It seems you will not last long’ என்றிருந்தது. அந்தப் புகைப்படம் வெளியான சில நாட்களி​ல் ராணி இறந்தார். லிஸ் பதவியிழந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x