ஆங்கிலம் அறிவோமே 4.0 - 5: ஆர்டினென்ஸ், ஆர்ட்னென்ஸ் வித்தியாசம் என்ன?

Ordinance
Ordinance
Updated on
2 min read

Tamil Nadu govt promulgates Ordinance prohibiting online gambling games.

ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு சட்டத்தை இயற்றி இருக்கிறது என்று மேற்படி வாக்கியத்தைப் பலராலும் புரிந்துகொள்ளமுடியும். என்றாலும் இந்த வாக்கியத்தில் உள்ள சில சொற்களைப் பற்றி மேலும் தெளிவு பெறலாமா?

இந்தச் செய்தியில் தமிழக அரசு ஒன்றை ‘promulgate’ செய்கிறது. அப்படி என்றால்?

புதிதாக இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதை ‘promulgate’ என்ற வார்த்தையால் குறிப்பிடுவார்கள். ‘Both the laws were promulgated on the same day’. ஒரு கருத்து அல்லது கொள்கையைப் பலரிடையே பரப்பும் செயலையும் ‘promulgate’ என்பார்கள்.

செய்தியில் இடம் பெற்ற ‘Ordinance’ என்ற வார்த்தையின் பொருள் ‘அதிகாரபூர்வமான சட்டம்’. அடிமை முறை சட்டம் அரசின் ‘ordinance’ மூலம் ஒரு முடிவுக்கு வந்தது என்பது போல. ‘Canon’, ‘law’, ‘rule’, ‘statute’ ஆகியவை ‘Ordinance’ என்பதற்கான சம வார்த்தைகள் (‘statue’ என்பது சிலை).

இந்திய நாடாளுமன்றம் கூடாத காலகட்டத்தில் குடியரசுத் தலைவர் அறிமுகப்படுத்தும் சட்டத்தை ‘ordinance’ என்பார்கள். ஆனால், இந்தச் சொல்லில் ‘ஈகோ’வைக் குறிக்கும் ஓர் எழுத்தை விட்டுவிட்டு ‘ordnance’ என்று எழுதினால் அதன் பொருள் வேறு. ராணுவத் தளவாடங்களை (ஆயுதங்களை) ‘ordnance’ என்பார்கள். போர் விமானங்கள் பலவித ‘ordnance’களைச் சுமந்து செல்லும்.

‘Corps’ என்பதும் ராணுவத்தைக் குறிக்கும் சொல்தான். ‘ஐயகோ, அது பிணத்தைக் குறிக்கும் சொல் அல்லவா!’ என்று பதறுபவர்கள் அவசரக்காரர்கள் அல்லது அந்த வார்​த்தையின் இறுதியில் ‘e’ சேர்க்கப்பட்டு ‘corpse’ என்று ஆனால்தான் அது உயிரற்ற உடலைக் குறிக்கும் சொல் என்பதை அறியாதவர்கள்.

Ordnance
Ordnance

இன்னும் உயர் பதவியை எட்டாமலிருக்கும் கடற்படை வீரனை ‘slick sleeve’ என்பார்கள். ‘Sleeve’ என்பது கையை மறைக்கும உடை. ‘Short sleeves’, ‘sleeveless’ ஆகியவற்றின் பொருள்களை இந்த அடிப்படையில் உங்களால் புரிந்து கொள்ள முடியும். ராணுவ உடையின் கைப்பகுதியில் செருகப்படும் நட்சத்திரங்(மெடல்)களின் எண்ணிக்கை உயர்பதவிக்கேற்ப அதிக எண்ணிக்கையில் காணப்படும். வெளி நாடுகளுக்கு அனுப்பப்படாத, போர் அனுபவம் இல்லாத ராணுவ வீரனை (நட்சத்திரங்கள் இல்லாத அல்லது குறைவாகக் கொண்டவரை) ‘slick sleeve’ என்று சொல்வதுண்டு.

‘Prohibited’ என்றால் தடை செய்யப்பட்டது. ‘Illegal’ என்ற பொருளை இது கொடுப்பது போல் தோன்றினாலும் இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. ‘Illegal’ என்பது சட்டமீறல். பெரும்பாலும் குற்றவியல் தொடர்பானது. ‘Prohibited’ என்பது அனுமதிக்கப்படாத ஒன்று. ஆலயங்களுக்குள் காலணி அணிந்து செல்ல முடியாது. அவை அங்கே ‘prohibited’. ‘Illegal’ அல்ல. (அப்படியானால் காலணி அணிந்து சென்றால் வழக்கு தொடுத்தாலும் நிற்காது அல்லவா என்று குதர்க்கமாகக் கேட்டால், நீதிமன்றம் சட்டத்தோடு மரபுகளையும் மதித்தே தீர்ப்பளிக்கும் என்பதே பதில்).

தொடர்பு இருப்பதை ‘online’ என்பார்கள். ‘Offline’ என்றால் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இணையத் தொடர்பைத்தான் பெரும்பாலும் இப்படி குறிப்பிடுகிறோம். எனவே ‘online games’ என்பவை இணையத்தைப் பயன்படுத்தி விளையாடக்கூடியவை. இப்போதெல்லாம் விளையாட மட்டுமல்ல பொருட்களை வாங்க, திரைப்படங்களைப் பார்க்க, தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்க, வேலை செய்ய என்று பலவற்றுக்கும் ஆன்லைன் தொடர்பு கொள்கிறோம்.

'திருமணத்துக்குப் பிறகுதான் நான் லட்சாதிபதியானேன்... அதற்கு முன்னால்? கோடீஸ்வரராக இருந்தேன்' என்ற ஒரு பழங்கால நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. இதன் முதல் வார்த்தையை சூதாட்டத்துக்கு என்று மாற்றினால் அது பலருக்கும் பொருந்துமோ? அதாவது, ரிஸ்க் உள்ள செயல்பாடு. அது ரம்மி ஆட்டமாக இருக்கலாம் அல்லது குதிரைப்பந்தயமாக இருக்கலாம்.

‘மகாபாரதத்தில் தன் தம்பிகளை சூதாட்டத்தில் பணயம் வைத்து தருமன் இழந்தார்’. இந்த வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ‘gambling’ என்ற வார்த்தையை சிலர் பயன்படுத்தலாம். என்றாலும் பணத்தை வைத்து இழப்பதைத்தான் (அல்லது அதிகம் சம்பாதிப்பதைத்தான்) ‘gambling’ என்பார்கள்.

(செய்திகளைப் படிக்கும்போது எழும் ஆ​ங்கிலமொழி தொடர்பான சந்தேகங்களை வாசகர்கள் எழுப்பலாம்).

(தொடரும்)

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in