Published : 26 Oct 2022 04:19 PM
Last Updated : 26 Oct 2022 04:19 PM

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 15

ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

தமிழ்நாடு புவியியல்
எளிய முறை குறிப்புகள்

முக்கோண வடிவில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு
1,30,058 ச.கி.மீ.

மலைகள்

தமிழகம் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மேற்கு மலைத் தொடர்களாலும், கிழக்குப் பகுதி வங்கக் கடல் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளாலும் சூழப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உயரமானது கேரள்த்தில் உள்ள ஆனைமலை. கிழக்குத் தொடர்ச்சி மலையில் உயரமானது சேர்வராயன் மலை. தமிழ்நாட்டின் உயரமான சிகரங்கள் தொட்டபெட்டா, முக்கூர்த்தி ஆகியவை. மேற்கு மலைத் தொடரும் கிழக்கு மலைத் தொடரும் நீலகிரி மலையில் சேருகின்றன. கேரளத்தின் ஆனைமுடி மலையிலிருந்தும் நீலகிரியிலிருந்தும் கிழக்கு நோக்கிச் செல்லும் ஒரு கிளைத் தொடர் குன்றுதான் பழனிக் குன்றுகள். ஏலமலைத் தொகுதியில் கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. பாலக்காட்டுக் கணவாய்க்கு தெற்கே காணப்படும் மலைகள் அகத்திய மலை, ஏலமலை, ஆண்டிப்பட்டி மலை ஆகியவை. வருசநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே செங்கோட்டை கணவாய் உள்ளது.

முக்கிய மலைகள் மாவட்டம்
ஜவ்வாது, ஏலகிரி வேலூர்
கல்வராயன் விழுப்புரம்
சேர்வராயன் சேலம்
செஞ்சி திருவண்ணாமலை
கொல்லி மலை நாமக்கல்
பச்சை மலை திருச்சி
சித்தேரி தருமபுரி, சேலம்

பீடபூமிகள்

கோயம்புத்தூர் பீடபூமி நீலகிரியிலிருந்து தருமபுரி வரை பரவியுள்ளது. சேர்வராயன் குன்றுகளுக்கு மேற்கில் உள்ள தருமபுரி பீடபூமி (பாராமஹால் பீடபூமி) மைசூர் பீடபூமியின் தொடர்ச்சியாகும். தமிழ்நாட்டில் ஆற்றுச் சமவெளிகள் முக்கிய ஆறுகளின் போக்கால் உருவாகியுள்ளன. கடலோரச் சமவெளிகள் வடக்கே பழவேற்காடு ஏரியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. சோழமண்டலச் சமவெளியில் உள்ள கடலோர சமவெளி மாவட்டங்கள் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகியவை.

நீர்நிலைகள்

உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா சுமார் 13கி.மீ. வரை பரவியுள்ளது. அலையில்லா கடற்பரப்பிற்கு இராமேஸ்வரம் சிறப்பு பெற்றது.

கர்நாடகத்தில் குடகு மலையில் உற்பத்தியாகும் தமிழகத்தின் மிக முக்கிய ஆறான காவிரி அதன் கிளை ஆறுகளுடன் தமிழ்நாட்டின் மையப்பகுதியை வளப்படுத்துகின்றன. காவிரியின் முதன்மையான கிளை ஆறான கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் இடையே ஶ்ரீரங்கம் (தீவு) அமைந்துள்ளது. காவிரியின் இணை ஆறுகள் பவானி, நொய்யல், கபினி, அமராவதி போன்றவை. காவிரியின் கிளை ஆறுகள் கொள்ளிடம், குடமுருட்டி, வெண்ணாறு, அரசலாறு போன்றவை. மதுரையில் வைகையும், திருநெல்வேலியில் தாமிரபரணியும், தூத்துக்குடியில் குண்டாறும், கன்னியாகுமரியில் கோதையாறும் ஓடுகின்றன.

காலநிலை

ஒரு பெரிய பரப்பிற்கான 30 வருடகால சராசரி வானிலையே காலநிலை எனப்படுகிறது. காலநிலைக் கூறுகளாவன- வெப்பநிலை, அழுத்தம், காற்று, ஈரப்பதம், மேகங்கள் மற்றும் மழைப்பொழிவு ஆகும். சூரியனின் கதிர்கள் புவியில் விழும் கோணம் மற்றும் மழையைத் தரும் பருவக்காற்றுகளின் நேரடித் தாக்கம் ஆகியவை தமிழ்நாட்டின் காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும்.

தமிழ்நாட்டில் டிசம்பர் கடைசியிலும் ஜனவரியிலும் குளிர் மிகுந்து காணப்பட்டாலும் பிப்ரவரி இரண்டாம் வாரத்திலிருந்து வெப்பம் சீராக உயரத்தொடங்கும். கோடை காலமான மே மாதத்தில் அதிக வெப்பமான காலம் அக்னி நட்சத்திரம் மேலும் கத்திரி வெயில் எனப்படுகிறது. ஜுன் இரண்டாம் வாரம் முதல் வெப்பம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். வடகிழக்கு பருவக்காற்று மழையும் சூறாவளி மழையும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கிறது. மேலும் இக்காலத்தில் கடலோரப்பகுதிகள் சற்று கூடுதலாக மழை பெறுகின்றன.

பருவம் என பொருள்படும் மான்சூன் என்ற வார்த்தை மௌசம் எனும் அரேபிய சொல்லாகும்.

காடுகள்

இந்திய தேசிய காடுகள் கொள்கைப்படி 33% காடுகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் மரங்கள் அடர்ந்து காணப்படும் சில மாவட்டங்கள் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி. யூகலிப்டஸ் தைல மரங்கள் நீலகிரியில் மிகுதியாக உள்ளன. குறிப்பாக பசுமை மாறாக் காடுகள் தமிழகத்தில் நீலகிரி, ஆனைமலை சரிவு மற்றும் கடலோரப்பகுதிகளில் காணப்படுகின்றன. வருடத்திற்கு 200 செ.மீ.க்கு மேல் மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் அயனமண்டல பசுமை மாறாக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் எபோனி மரங்கள் வளர்கின்றன.

பருவக்காடுகள் என அழைக்கப்படும் அயன மண்டல அகன்ற இலைக் காடுகளில் பொதுவாக மூங்கில் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆற்றுப் படுகையும் ஓதப்பெருக்கும் மிகுதியான கடலோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலக்காடுகளில் பசுமை மாறா மரங்களும் புதர் வகைகளும் இருக்கின்றன. பிச்சாவரம் பகுதியில் பெரிய சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளன.

வளங்கள்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மனிதனின் முயற்சியின்றி இயற்கையாகவே மனித பயன்பாட்டிற்கு புவியில் கிடைக்கும் பொருட்களான வளங்கள் உறுதுணையாக உள்ளன. புதுப்பிக்கத்தக்க சில வளங்கள் - சூரிய சக்தி, காற்று, ஆறு மற்றும் மண் போன்றவை.
புதுப்பிக்க முடியாத சில வளங்கள் -
நிலக்கரி, பெட்ரோல் மற்றும் கனிமங்கள்.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் அவற்றின் சிறப்புகள், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் பற்றிய தகவல்கள், முக்கிய ரயில்கள், ரயில்தடங்கள் பற்றிய குறிப்புகள், முக்கிய கனிம வளப் பகுதிகள், கோடை வாழிடங்கள், விலங்குகள் சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள், மாவட்டங்களின் சிறப்புகள், மண் வகைகள் செறிந்துள்ள பகுதிகள், ஆறுகள், ஏரிகள் , அணைக்கட்டுகள் பற்றிய தகவல்கள் , நெல், கரும்பு, சோளம், காபி, தேயிலை போன்ற பயிர்கள் விளையுமிடங்கள், சிறப்பு பெற்ற பல்கலைக்கழகங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய தகவல்கள், புவியியல் சார்ந்த முதன்மைகள், தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள் போன்றவைகளைப் பற்றிய செய்திகளை அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் பட்டியலிட்டு படிப்பது நன்று.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/886021-tnpsc-group-1-exams-simple-notes-for-preparation-part-14-8.html

அடுத்த பகுதி அக்டோபர் 28 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிடப்படும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x