

பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் நேர்காணல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நேர்காணல்கள் ஆங்கில வழியிலேயே நடைபெறும் என்பதால், அதை எதிர்கொள்ளச் சிரமப்படுவோர் உண்டு. இந்தக் குறையைப் போக்க ஆங்கிலத் திறனை மேம்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக எந்த வழியில் ஆங்கிலத் திறனை மேம்படுத்தலாம்?
l இந்த இணையயுகத்தில் ஆங்கிலத் திறனை மேம்படுத்திக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆங்கிலத்தில் தகவல்தொடர்புத் திறனை வளர்க்க பாட்காஸ்ட்கள்கூட உதவுகின்றன. இதேபோல ஆங்கில ஆன்லைன் படிப்புகள் இணையத்தில் ஏராளம் கிடைக்கின்றன. யூடியூப்களில் கிடைக்கும் ஆங்கிலவழிப் பாடங்களைக்கூடப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
l ஆன்லைன் வழியில் பல வாய்ப்புகள் கிடைத்தாலும், இவற்றில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு முன்பாக உங்களுடைய ஆங்கிலத் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நம்முடைய ஆங்கிலத் திறனை அறிந்து அதற்கேற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும்.
l உங்களுடைய ஆங்கிலத் திறன்களை அறிந்துகொள்வதற்கு உங்கள் நண்பர்களோடு சேர்ந்து ஒரு ஆங்கிலப் பயிற்சி கிளப்பை உருவாக்கலாம். அதில் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதன் மூலம் ஒவ்வொருரின் ஆங்கிலத் திறனும் தெரிய வரும். இதன் பிறகு எந்த ஆங்கில வகுப்புகளில் சேருவது என்பது பற்றி முடிவுசெய்யலாம்.
l நண்பர்களுடன் ஆங்கிலம் பேசிப் பழகுவதில் இன்னொரு நன்மையும் உண்டு. நிறுவனங்களில் உரையாடலின்போது ஆங்கிலத் திறனும் மென்திறனும் கவனிக்கப்படும். எனவே, நண்பர்களுடன் உரையாடல்களில் ஈடுபடும்போது ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சிக்கலைத் தீர்க்கவும், குழுவாக வேலை செய்வதற்கும் இது உதவும். பணியிடத்தில் இவை மிக முக்கியம். மேலும், நண்பர்களுடனான உரையாடல்கள் உங்கள் ஆங்கிலப் பிழைகளை அடையாளம் காணவும், நடைமுறையில் அவற்றை மேம்படுத்தவும் வாய்ப்புகளை வழங்கும்.
l சிலர் ஆங்கிலத் திறனோடு இருப்பார்கள். ஆனால், உரையாடலின்போது சொதப்புவார்கள். அது போன்றவர்கள் ஆங்கிலத் திறனை சுயாதீனமாகவும் மேம்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக எந்த இடத்தில் தடுமாறுகிறோம் என்பதை அறிந்து, அதில் மட்டும் கவனம் செலுத்தலாம். இதற்குத் தொடர்ந்து ஆங்கில உரையாடல்களில் ஈடுபடவேண்டும்.
l பெரிய நிறுவனங்களில் மொழி ஆளுமை, தகவல் தொடர்பு, மென் திறன்கள் போன்றவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. சர்வதேச வேலைவாய்ப்புகள் உள்பட விரும்பும் வேலைவாய்ப்புகளைப் பெற ஆங்கிலத்தில் அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலமே அதைச் சாத்தியப்படுத்த முடியும். அதற்கு உயர்கல்வி படிக்கும்போதே ஆங்கிலத் திறனையும் சேர்த்து வளர்த்துக்கொள்வது அவசியம்.