

The former editor of the New Statesman explains how over eclectic commissioning and a lack of humorous writers affected his tenure.
மேற்படி செய்தியில் உள்ள சில ஆங்கில வார்த்தைகளின் விளக்கங்களைப் பார்ப்போம்.
‘Farmer’ என்றால் விவசாயி, ‘Former’ என்றால் முன்னாள் என்பது புரிந்திருக்கும். ஆக, ‘நியூ ஸ்டேட்ஸ்மேன்’ இதழின் முன்னாள் ஆசிரியர் கூறும் கருத்து இது. ‘State’ என்றால் மாநிலம் என்பதும், அந்த ஆங்கில வார்த்தை ‘verb’ ஆகப் பயன்படுத்தப்படும்போது ‘கூறுக’ என்கிற பொருள் கொண்டது என்பதும் நீங்கள் அறிந்ததுதான் (State the goals என்றால் குறிக்கோள்களைக் கூறுக).
ஆனால், ‘statesman’ என்கிற வார்த்தை மாநிலம் தொடர்பானது அல்ல. அது, அரசியல்வாதி என்பதைக் குறிக்கும் சொல். குறிப்பாக அனுபவம் வாய்ந்த, மதிக்கப்படும் அரசியல்வாதியைக் குறிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். ராஜதந்திரி என்றும் இந்த வார்த்தைக்குப் பொருள் உண்டு. (தற்போது நம் நாட்டில் உள்ள மூன்று ஸ்டேட்ஸ்மெனின் பெயர்களை யோசிப்பது உங்கள் இஷ்டம்). ‘Stateswoman’ என்கிற வார்த்தையும் உண்டு. பெண்பால்.
‘Lack of’ என்றால் குறைவாக உள்ள அல்லது குறைபாடு கொண்ட. ‘Lack of oxygen’ என்றால் போதிய பிராண வாயு இல்லை. ‘Lack of decency’ என்பது கண்ணியக் குறைவை உணர்த்துகிறது. லட்சம் என்பதைக் குறிக்க ‘lac’ அல்லது ‘lakh’ என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
‘Electric’ என்பது மின்சாரத்துடன் தொடர்புடையது என்பது அறிந்ததுதான். ‘Electric bulb’, ‘Electric connection’. ஆனால், அது என்ன ‘Eclectic?’ தோராயமாகச் சொல்வதென்றால் ‘பரந்துபட்ட’ எனலாம்.
‘Eclectic approach’ என்பது பல பிரிவுகளில் உள்ளவற்றில் சிறந்தவற்றை இணைத்துக்கொண்ட அணுகுமுறை எனலாம். அக்பர் உருவாக்கிய ‘தீன் இலாஹி’ பல சமயங்களின் சிறந்த கோட்பாடுகளை உள்ளடக்கியது என்பார்கள். ‘பஹாய்’ என்பது மனிதாபிமானம் மற்றும் உலக அமைதி ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டு அனைத்து மதங்களின் சாராம்சத்தையும் உள்ளடக்கியது என்பார்கள்.
‘Eclectic’ என்கிற வார்த்தையைச் சிலர் ‘eccentric’ என்கிற வார்த்தையுடன் குழப்பிக்கொள்ள வாய்ப்பு உண்டு. ‘Eccentric’ என்பதை ‘strange’, ‘unusual’ போன்ற வார்த்தைகளின் மூலம் புரிந்துகொள்ள முடியும். சூழ்நிலைக்குப் பொருந்தாத என்றும் கூறலாம். மரபுவாதிகள் நடுவே இருக்கும்போது ‘eccentric’ ஆக உணரப்படும் உடை, நவீனவாதிகள் நடுவே அப்படித் தோன்றாமல் போகும். ‘Eccentric’ என்கிற வார்த்தையைச் சிலர் வெறுப்பு தொனிக்கும் வகையில் ‘flaky’, ‘outlandish’ ஆகிய சொற்களின் மூலம் வெளிப்படுத்துவார்கள். ‘Weird’ என்றும் கூறலாம். ‘வியர்ட்’ என்று உச்சரிப்பதால் இந்த வார்த்தையின் எழுத்துகளில் ‘i'-க்குப் பிறகுதான் ‘e’ வரும் என்று சிலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கக் கூடும். (நான் மட்டும்தான்அப்படி நினைத்திருப்பேனா என்ன?). எனவே ‘Be careful’. நான் என்னை(யும்) சொன்னேன்.
'Humerus' என்ற சொல்லைக் கரும்பலகையில் எழுதிக் கேட்டால்கூட அதன் பொருள் ‘நகைச்சுவையான’ என்று பதில் வர வாய்ப்பு அதிகம். ஆனால் அந்தச் சொல்லின் எழுத்துக்களை உற்று கவனியுங்கள். அது தோளுக்கும் முழங்கை மூட்டுக்கும் நடுவே உள்ள பெரிய எலும்பைக் குறிக்கிறது. மற்றபடி ‘humorous’ என்றால் நகைச்சுவையான என்பது சரிதான். Funny, amusing, hilarious.
ஆக, செய்தி வாக்கியத்தின்படி ‘பலவற்றையும் ஏற்கும் வகையில் எழுத்தாளர்களைப் படைத்து வழங்குமாறு கேட்டுக்கொள்ளும் போக்கும், நகைச்சுவையாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் குறைவாகவே இருப்பதும் தனது ஆசிரியப் பணியைப் பாதித்ததாக நியூ ஸ்டேட்ஸ்மேன் இதழின் முன்னாள் ஆசிரியர் கூறுகிறார்’.
(தொடரும்)
தொடர்புக்கு: aruncharanya@gmail.com