

தேர்வை எதிர்கொள்ள அஞ்சும் மாணவர்கள் நம்மிடையே உண்டு. அது எந்த அளவுக்கு அதிகம் என்பது அண்மையில் தேசியக் கல்வி ஆராய்சி மற்றும் பயிற்சிக் குழு (என்.சி.இ.ஆர்.டி.) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 81 சதவீத மாணவ மாணவியர் தேர்வுக்குத் தயாராவது, தேர்வை எதிர்கொள்வது, தேர்வு முடிவுகள் குறித்த பதற்றம் இருப்பதாக என்.சி.இ.ஆர்.டி. ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிறார்கள் மட்டுமல்லாமல் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பதின் பருவத்தினக்கும் இந்தப் பதற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. தேர்வு பயம், தாழ்வு மனப்பான்மை, நம்பிக்கையின்மை, தொடர்புகொள்வதில் சிக்கல், நவீன இணையவழி கல்விக்கு ஈடுகொடுக்க இயலாமை என்பது போன்ற வேறு சில மன நலப் பிரச்சினைகளையும் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் எதிர்கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு. இதன் அடிப்படையில், இந்தப் பிரச்சினைகளை முன்னரே கண்டறிய ஏதுவாக அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் ‘மனநல ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட வேண்டும் என என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைத்துள்ளது.
ஓராண்டுக்கு 220 நாள்களைப் பள்ளிக்கூடத்தில் செலவழிக்கும் மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைக் காலம் தாழ்த்தாது கண்டறிந்தால் தீர்வு எளிதாகும் என்றும் என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது. பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட வேண்டிய இந்த ஆலோசனைக் குழுவில் பெற்றோர், ஆசிரியர், மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள் இடம்பெற வேண்டும். இவர்கள் அடங்கிய குழு, மனநலப் பிரச்சினைகளைக் கண்டறிவது, சரிபடுத்துவது தொடர்பான பயிற்சி வகுப்புகளை அவ்வப்போது பள்ளிக்கூடங்களில் நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று தொடங்கியது முதலே பள்ளிக்கூடங்கள் காலவரையன்றி மூடப்பட்டன. இதனால், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் மூலமே படிக்கும் சூழல் ஏற்பட்டது. திடீரென மாறிய கல்வி கற்பிக்கும் முறையால், மாணவர்கள் சில சிக்கல்களைச் சந்தித்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, ஆன்லைன் வகுப்பில் 39 சதவீதம் பேர் கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ளவில்லை என்றும் 51 சதவீதம் பேர் ஆன்லைன் வகுப்புப் பாடங்களைப் பின்பற்றுவதில் சிரமப்பட்டதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் தற்போது மீண்டும் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு தெளிவற்ற மனநிலை நீடிப்பதும் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கூடங்களில் அமைக்கப்படவிருக்கும் ஆலோசனைக் குழுவால் அதிக பயன் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பள்ளிக்கூடம் என்றாலே படிப்பும் தேர்வும் தவிர்க்க முடியாதவை. எனவே, பதற்றம் இல்லாத மனநிலையில் படிக்க சில டிப்ஸ்:
* கடைசி நேரத்தில் தேர்வுக்குத் தயாராவதைத் தவிர்த்து முன்னரே திட்டமிட்டுப் படிக்கத் தொடங்குங்கள்.
* படிக்கும்போது அவ்வப்போது இடைவெளி விட்டுப் படியுங்கள்.
* தேர்வுக்கு முன்பே முடிவை என்ணிப் படிப்பதை விட்டுவிடாதீர்கள்.
* தேர்வுக் காலத்தில் சத்தான உணவும் உறக்கமும் அவசியம்.
* ஏதேனும் பிரச்சினை இருந்தால் ஆசிரியர், பெற்றோர் அல்லது நண்பர்களுடன் பகிருங்கள். தேவைப்பட்டால், உளவியல் நிபுணரின் உதவியையும் நாடலாம்.