

The Supreme Court expressed concern over the conditions of jails in the country and suggested the idea of building private jails involving big corporates.
மேற்படி செய்தியில் உள்ள சில வார்த்தைகள், பயன்பாடு குறித்துப் பார்ப்போம்.
‘Supreme Court’ என்றால் உச்ச நீதிமன்றம் என்பது தெரிந்திருக்கும். அதை ‘superior court’ என்றும் கூறலாமா? ‘Superior’ என்பதற்கும் ‘Supreme’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. ஒன்றைவிட மேம்பட்டதை ‘superior’ என்பார்கள். எல்லாவற்றையும்விட அதிக சக்தி கொண்ட என்பதைக் குறிக்க ’supreme’.
‘Noun’ ஆகப் பயன்படுத்தும்போது ‘superior’ என்பது நம்மைவிட உயர்மட்டத்தில் உள்ள ஒருவரைக் குறிக்கப் பயன்படுகிறது. அதேசமயம் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஒருவரை ‘supreme’ என்று (noun ஆக) குறிப்பிடுவதில்லை.
சமையல் பிரிவில் கோழி அல்லது வாத்தின் மார்புப் பகுதியை ‘supreme’ என்று குறிப்பிடுவதுண்டு. ‘Supreme’ என்பதை வினைச்சொல்லாகவும் (verb) பயன்படுத்த முடியும். சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றின் தோல் பகுதியை நீக்கிவிட்டு சுளைகளை எடுத்து விதைகளையும் நீக்கிவிடுவதை ’supreme’ செய்வது என்பார்கள்.
‘Concern’ என்றால் அக்கறை. என் மேல் உனக்கு கொஞ்சமாவது ‘concern’ இருக்கிறதா? ‘Noun’ஆக இதை பயன்படுத்தும்போது அது கவலை அல்லது மனக் கலக்கத்தையும் உணர்த்துகிறது. ‘There is no cause for concern’. சிலர், அந்த வார்த்தையின் முழுமையைத் தெரிந்து கொள்ளாமல், ‘concern’ என்கிற வார்த்தையை ‘ஒரு நிறுவனம்’ என்கிற பொருளில் பயன்படுத்துகிறார்கள்.
‘In which concern are you employed? ’ என்பதுபோல். ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியில், ‘concern’ என்கிற வார்த்தை வணிகக் குழுவைக் குறிக்கிறது. இது ஜெர்மானிய வார்த்தையான ‘Konzern’ என்பதிலிருந்து உருவானது. ஒரே நிர்வாகத்தின்கீழ் செயல்படும் பல தனித்தனி நிறுவனங்களைக் குறிக்கும் வார்த்தையாக இது செயல்படுகிறது.
‘Jail’ வேறு. ‘Prison’ வேறு. காவல்துறை கைது செய்த, இன்னமும் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படாதவர்களை அடைத்து வைத்திருக்கும் இடம் ‘jail’. குறைந்த கால தண்டனை பெறும் குற்றவாளிகளை ’jail’இல் வைத்திருப்பதுண்டு. அதிக பரப்பு இல்லாததாக இருப்பதால் குறைவான நபர்களையே அதில் வைத்திருக்க முடியும்.
‘Prison’ என்பது கொடுங்குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் இடம். நீண்ட காலம் தண்டனை பெற்றவர்களை இங்கு வைத்திருப்பார்கள்.
சிறை தொடர்பான சில வார்த்தைகளின் பொருள்களைப் புரிந்துகொள்வோம்.
‘Sentence’ என்பது வாக்கியம் மட்டுமல்ல தண்டனை அளிப்பதையும் குறிக்கிறது. ‘He was sentenced to one year jail’.
‘To be convicted’ என்பது ஒரு குற்றத்தை ஒருவர் செய்திருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது. ‘He was convicted of murder’.
‘Execution’ என்பது ஒருவரைக் கொல்லும் செயலைக் குறிக்கிறது. என்றாலும் சட்டபூர்வமாக ஒருவரைக் கொல்வதைத்தான் இப்படிப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, தூக்கிலிடுவது.
‘Bar’ என்கிற வார்த்தை மதுவகத்தைக் குறிக்கிறது. வழக்கறிஞர்கள் தொழிலையும் குறிக்கிறது. என்றாலும் ‘put behind bars’ என்பது ஒருவரைச் சிறைப்படுத்துவதைக் குறிக்கிறது. அதாவது கம்பிகளுக்குப் பின் தள்ளுவது!
இதை ஒரே வார்த்தையில் ‘incarcerate’ என்றும் கூறலாம். தப்ப முடியாத விதத்தில் ஓரிடத்தில் அடைத்து வைப்பதை ‘immure’ என்கிற சொல்லின் மூலமும் குறிப்பிடலாம். ‘A society immured in superstitions’ என்று இலக்கியத்தனமாகவும் குறிப்பிடுவதுண்டு!
அவர் ஒரு ‘criminal’ என்று ஒருவரையும், அவர் ஒரு ‘felon’ என்று இன்னொருவரையும் சுட்டிக்காட்டும்போது இரண்டாமவரை அதிக வெறுப்போடு நாம் பார்க்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் ‘felon’ என்பவர் (கொலை, கற்பழிப்பு போன்ற) கடுமையான குற்றங்களைச் செய்தவர். பிரெஞ்சு மொழியிலிருந்து உருவான வார்த்தை இது.
தூக்கட்டுமா என்று ஒரு குழந்தையைப் பாசத்துடன் கேட்பது வேறு. கிரிமினல்களின் பாஷையில் ‘தூக்கட்டுமா?’ என்பது என்பது கடத்திவிடலாமா அல்லது கொன்றுவிடலாமா என்பதைக் குறிக்கும் சொல் என்பது கார்த்திக் சுப்புராஜ் பட ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். சட்ட மீறலாக ஒருவரை அழைத்துச் சென்று அவரைப் பணயக் கைதி ஆக்குவதை ‘kidnap’ என்கிற வார்த்தை மூலம் குறிப்பிடுவார்கள். ‘Kid’ என்றில்லை, பெரியவர்களைப் பணயக் கைதிகளாக்கினாலும் ‘kinnap’தான்!
‘Revenge’ (வஞ்சம்) என்ற வார்த்தையை நீதிமன்றங்களில் அதிகம் கேட்க முடியும். இப்போதெல்லாம் ‘revenge travelling’ என்கிற புதிய பயன்பாடும் அறிமுகமாகிவிட்டது. கொரோனா காலத்தில் வீட்டிலேயே அடைந்து கிடந்தவர்கள், உத்வேகத்துடன் மிக அதிக அளவில் பயணம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இதைக் குறிப்பதுதான் ‘revenge travelling’.
(வாசகர்கள் செய்திகளைப் படிக்கும்போது எழும் ஆங்கில மொழி சார்ந்த சந்தேகங்களை எழுப்பலாம்).
(தொடரும்)
aruncharanya@gmail.com