

Goa police registers a murder case in the death of Haryana politician Sonali Phogat and books two aides who had accompanied her to Goa.
‘ஹரியானா மாநில அரசியல்வாதி சோனாலி போகட் இறப்பைக் கொலை என்று பதிவு செய்துள்ளது கோவா காவல்துறை’ என்பதை மேற்படி தகவலின் முதல் பகுதி குறிப்பிடுகிறது. இரண்டாம் பகுதியில் ‘two aides’ என்ற வார்த்தைகள் இடம் பெறுகின்றன.
‘Aid’ என்றால் உதவுவது அல்லது ஆதரவளிப்பது. ஒரு பணக்கார நாடு ஏழை நாட்டுக்கு ‘aid’ அளிக்கிறது என்றால் அது உணவு, பணம், மருந்துகள் போன்றவற்றைத் தந்து உதவுவதைக் குறிக்கிறது. ஏன் ஆயுதங்களைக்கூட அளித்து ‘aid’ செய்யலாம்! ஆனால், என்னதான் அளவு கடந்த உதவி அளித்தாலும் அதை ‘aid’ என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்வார்களே தவிர ‘aids’ என்று பரந்த மனதோடு பன்மையில் கூறுவதில்லை.
‘ஓ, aids நோய் அல்லவா, அதனாலா என்கிறீர்களா? முதலில் அது ‘aids’ அல்ல, ‘AIDS’. அது ஒரு தொகுப்பின் முதல் எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுருக்கம் (Acquired Immune Deficiency Syndrome). இப்படிப்பட்ட சுருக்கங்களை ‘acronym’ என்போம். (மற்றபடி ‘minute’ என்பதை ‘min.’ என்றோ, ‘examination’ என்பதை ‘exam.’ என்றோ சுருக்கும்போதோ அந்த வார்த்தைகளை ‘abbreviations’ என்போம்). தொற்று ஏற்படும்போது நம் உடலில் இயற்கையாகவே உருவாகும் சில பாதுகாப்பு அரண்களை அழித்துவிடும் (வைரஸால் உண்டாகும்) நோய் நிலையை ‘AIDS’ குறிக்கிறது.
அதெல்லாம் சரி, மேற்படி வார்த்தையோடு ஒரு ‘ஈ’யை ஒட்டவைத்து ‘aide’ என்ற வார்த்தையைச் செய்தியில் கொடுத்திருக்கிறார்களே, அது ஏன்? ‘Aid’ என்பது உதவி. ‘Aide’ என்பது உதவியாளர். முக்கியமான அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அலுவல் தொடர்பாக உதவுபவரை எப்படி அழைக்கலாம்? (ஜால்ரா, சம்சா, அடிவருடி, காக்கா என்று மனத்தில் தோன்றக்கூடிய வார்த்தைகளை அழியுங்கள்). ‘Aide’.
‘Aide de camp’ என்பது தன்னைவிட அதிக ராங்க்கில் உள்ள அதிகாரிக்கு உதவும் ராணுவ அதிகாரியைக் குறிக்கும் சொல். ‘Book’ என்றால் புத்தகம் என்பது யாருக்குதான் தெரியாது? ஆனால், ‘book’ என்பதை ‘verb’ஆகப் பயன்படுத்தினால் அதன் பொருள் வேறு. ‘ஹோட்டலில் ரூம் புக் பண்ணு, மாலைக் காட்சிக்கு அந்த தியேட்டரிலே ரெண்டு டிக்கெட் புக் செய்யணும்’ போன்ற வாக்கியங்களில் ‘book’ என்பது நமக்கென ஒரு வசதியை ஒதுக்கீடு செய்துகொள்வதைக் குறிக்கிறது.
ஒரு காவல் அதிகாரி யாரையாவது ‘book’ செய்கிறார் என்றால் அந்த நபரின் பெயரை அலுவலக ஆவணத்தில் பதிவு செய்கிறார் என்று பொருள். அதாவது, அவர் செய்த ஒரு குற்றம் அல்லது தவறுக்காக இந்தப் பதிவு செய்யப்படுகிறது. இந்த அர்த்தத்தில்தான் ‘books two aides’ என்பது செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘One for the books’ என்றால் அது எதிர்பாராத ஒரு நிகழ்வைக் குறிக்கிறது. ‘I never thought he would have committed the crime. That is one for the books.’
‘Goes strictly by the book’ என்றால் சட்டப்படி மட்டுமே நடந்து கொள்வதை உணர்த்துகிறது. ஸ்ட்ரிக்ட் ஆபீசர்!
(வாசகர்கள் செய்திகளைப் படிக்கும்போது எழும் ஆங்கிலமொழி தொடர்பான சந்தேகங்களை எழுப்பலாம்).
தொடர்புக்கு – aruncharanya@gmail.com