

என்னதான் வேலையை இழுத்துப்போட்டு செய்தாலும் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மனம் புழுங்குவோர் ஏராளம் உண்டு. இந்த விஷயத்தில் ஒரு தெளிவை நோக்கி நகர்வதற்கு சற்று மேலாண்மை மொழியில் பேசுவோமா?
எந்தவொரு நிறுவனமும் தங்களுடைய பணியாளர்களின் விலகல்கள் தேவையில்லாமல் அதிகரிக்கவிடக் கூடாது என்றே நினைக்கும். அப்போது திறமையான பணியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற கடமையும் நிறுவனத்துக்கு எழும். அந்த அங்கீகாரம் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இன்ன பிற சலுகைகள் என்று இருக்கும்.
இந்த விஷயத்தில் மனிதவள மேலாண்மை வல்லுநர்கள் எச்சரிக்கை மணி அடிப்பது இங்கேதான். சரியான அங்கீகாரம் தருகிற நேர்மறை விளைவைவிடத் தவறான முறையில் தரப்படுகிற அங்கீகாரம் தரும் எதிர்மறை விளைவு இருமடங்கு அதிகம் என்கிறார்கள். எந்தவொரு நிறுவனத்திலும் இடையூறு செய்யும் பணியாளர்களை ஜீரோ சதவீதமாகக் குறைத்துவிட முடியாது என்பதே யதார்த்தம். அதுபோன்ற பணியாளர்கள் வேலையை ஒழுங்காகச் செய்யாமல் இருப்பார்கள்; சிலரையும் செய்யவிடாமல் தன்னுடைய அதிகாரத்தால் தடுப்பார்கள். வேலையைக் காலம்தாழ்த்த தயங்க மாட்டார்கள். இவர்களைச் சரியாகக் கையாளாவிட்டால் நேர்மறை எண்ணம் உள்ள பணியாளர்களின் செயல்திறனிலும் சுணக்கம் ஏற்பட்டுவிடும். நிறுவனங்களில் இங்குதான் தவறைச் சுட்டிக்காட்டும் நபர்கள் தேவைப்படுகிறார்கள்.
அவர்களை நிறுவன மொழியில் ‘விசிலூதிகள்’ (whistle blowers) என்பார்கள். நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிற விசிலூதிகளின் ஆலோசனைகள் உதாசீனம் செய்யப்பட்டால் சிக்கல் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, எச்சரிக்கையை வழங்கும் இவர்களும் ஆலோசனை வழங்குவதை நிறுத்திவிடவும் கூடும். எந்த நிறுவனமும் நல்லவர்களை மட்டுமல்ல வல்லவர்களையே விரும்புகிறது. எனவே, ‘விசிலூதிகள்’ ஊதுகிற அபாயசங்கைக் காது கொடுத்துக் கேட்கவும் நிறுவனத்தினர் தயாராகவே இருக்கிறார்கள்.
இதைக் கோள்மூட்டுவது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. பொறாமையின் விளைவாகத் தன் சுயலாபத்துக்கும், அல்ப சந்தோஷத்துக்காகவும் செயல்படுவர்கள்தாம் கோள்மூட்டிகள். விசிலூதிகள் என்பவர்கள் தலைமையின் பார்வைக்கு மறைக்கப்பட்ட தவறுகளை நிறுவனத்தின் நன்மைக்காக வெளிக்கொணர்பவர்கள். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயல்படுவதுதான் தலைமைப் பண்பின் முக்கிய பணி.
எனவேதான், சரியான அங்கீகாரம் மறுக்கப்படும்போதும் தவறான அங்கீகாரம் வழங்கப்படும்போதும் புலம்பல்களை நிறுத்த வேண்டும். நிறுவனம் தேடும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் திறமையான நபராக நாம் மாற வேண்டும். அதே சமயம் இடையூறுகளை உருவாக்கும் நபர்களை எதிர்கொள்ளும்போது புத்திசாலித்தனமான மேலாண்மையைக் (talent Management) கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களிடம் கோபமான வார்த்தைகளையோ வெறுப்பையோ காட்டாமல் சாமர்த்தியமாகப் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டும். ஏனெனில், நம் நோக்கம் தீர்வுகளே தவிர சிக்கல்களை வளர்ப்பதல்ல. இந்த எண்ணங்களோடு அலுவலகம் சென்று பாருங்கள். இனி சங்கடங்கள் நேரும்போதெல்லாம் அங்கே சவால்களும் தீர்வுகளும் தெரியும். அது நம் வளர்ச்சிக்கும் வழி காட்டும். - கட்டுரையாளர்: தனியார் கல்லூரி மேலாண்மைத் துறைத் தலைவர்; தொடர்புக்கு: karthikk_77@yahoo.com