10 உயர்கல்வி நிறுவனங்கள்

10 உயர்கல்வி நிறுவனங்கள்
Updated on
2 min read

தமிழகத்தில் பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் 51.4 சதவீதம். தேசிய அளவில் இந்த விகிதம் இன்னும் 30ஐ எட்டவில்லை. மாணவர்கள் சேர்க்கையில் மட்டுமல்ல கல்வியின் தரத்திலும் புதிய புதிய கல்வி வாய்ப்புகளில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த பத்தாண்டுகளில் பல புதிய உயரங்களைத் தொட்ட தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகம்: பொறியியல், தொழில்நுட்பக் கல்விக்காக தமிழக அரசால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகமும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளும் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கிவருகின்றன. ஆராய்ச்சி, வளர்ச்சி செயல்பாடுகளில் முன்னிலை வகிக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தைப் பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2012-2017) ‘University with Potential for Excellence’ ஆகப் பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்தது.

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி: வேலூரில் 122 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த மருத்துவக் கல்லூரி, என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை 2022இல் இந்திய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. தொற்றுநோய் மருத்துவம் குறித்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான உலகப் புகழ்பெற்ற மையமாக இக்கல்லூரி திகழ்கிறது. இந்திய அரசின் நிதியுதவியுடன் ஸ்டெம் செல் ஆராய்ச்சியும் இக்கல்லூரியில் நடைபெற்றுவருகிறது.

ஐஐடி: சென்னையில் தொடங்கப்பட்ட இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐஐடி) இந்தியாவின் முக்கியமான பொறியியல்-தொழில்நுட்பக் கல்வி மையமாக உள்ளது. மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிடும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் (என்.ஐ.ஆர்.எஃப்) தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடம் பிடித்துவந்துள்ளது. புகழ்பெற்ற சர்வதேச அளவிலான க்யூ.எஸ்.,தரவரிசைப் பட்டியலிலும் தொடர்ந்து இடம்பிடிக்கும் இந்தியக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்: கோவையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த வேளாண்மைக் கல்வி நிறுவனம் 1971இல் தனிப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது. வேளாண்மைக் கல்வியையும் ஆராய்ச்சியையும் முன்னெடுத்து வருகிறது. 13 இளநிலை, 40 முதுநிலை, 27 முனைவர் பட்டப்படிப்புகளை வழங்கிவருகிறது. தமிழ்நாடு முழுவதும் 32 மையங்களில் 1,200 அறிவியலாளர்கள், ஆசிரியர்களுடன் வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிகளை செய்துவருகிறது.

ஐஐஎம்: இந்தியாவின் 11ஆவது இந்திய மேலாண்மைக் கல்விக் கழகமாக (ஐஐஎம்) 2011இல் திருச்சியில் தொடங்கப்பட்டது. 2017இல் தனக்கென்று தனிவளாகத்தைப் பெற்றது. 2020இல் மனித வள மேலாண்மைக்கான முதுநிலைப் பட்டப்படிப்பு இங்கே தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்: சென்னையில் தமிழக அரசு இந்தப் பல்கலைக்கழகத்தை 1997இல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளும் இந்தப் பல்கலைக்கழகத்தின்கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. 2002இல் இப்பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒரு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதோடு 2016இல் சென்னை தரமணியில் இப்பல்கலைக் கழகத்துக்கான அதிநவீன வசதிகள் கொண்ட வளாகம் தொடங்கப்பட்டது.

என்.ஐ.டி: ஐ.ஐ.டி.க்குப் பிறகு பொறியியல், தொழில்நுட்பக் கல்வியில் பிராந்திய அளவில் தரமான கல்வியை வழங்கிவருகின்றன தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (என்.ஐ.டி). 1964இல் திருச்சியில் என்.ஐ.டி தொடங்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக சர்வதேச தரவரிசைகளில் முதல் 500 இடங்களில் இடம்பெற்றுவருகிறது. இந்திய அளவில் தலைசிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் முதல் பத்து இடங்களில் ஒன்றை இது தக்கவைத்திருக்கிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்:

இதன் கட்டுப்பாட்டில் 121 கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. யுஜிசியால் வழங்கப்படும் ‘Potential for Excellence’ அந்தஸ்தைப் பெற்ற 15 இந்தியப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. 2021இல் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) A என்னும் உச்சநிலை அங்கீகாரத்தைப் பெற்றது.

அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை: சித்த மருத்துவம் மற்றும் அது சார்ந்த கல்விக்கென்று தமிழக அரசால் முதன்முறையாகத் (1965) தொடங்கப்பட்ட இக்கல்லூரி இப்போது வைர விழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்றும் 1500க்கு மேற்பட்ட மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். இளநிலை, முதுநிலை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மாநிலக் கல்லூரி, சென்னை: 1840இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான அரசுக் கலைக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இக்கல்லூரியில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். தேசியத் தரவரிசைப் பட்டியலில் கல்லூரிகளுக்கான பிரிவில் 2022இல் மூன்றாம் இடம்பெற்றுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in