

அண்மைக் காலமாகத் தொழில்நுட்ப வளர்ச்சியில் மேகக் கணிமை (Cloud Computing) செயல்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
தேவைப்படும் இடத்தில் அனைவரும் இணையத்தைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்வதும், பயனர்களுக்கு மென்பொருளைத் தருவதும், சேமித்து வைத்துக்கொள்ளும் செயல்பாடுதான் மேகக் கணிமை.
‘Computing’ என்பது ஒரு செயல்பாடு அல்லது செயல்முறை. மேகக் கணிமை என்பது கணிமைத் திறனை (Computing service) குறைந்த செலவில் தேவைப்படும்போது மட்டும் இணையம் வழியாகப் பெறும் முறை. மேகமானது மழையைப் பொழிந்து, எப்படி எல்லோருக்கும் பயன்படுகிறதோ அதுபோல இணையமும் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவானதே மேகக் கணிமை.
ஒரு தகவலை / தரவுகளை ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ், சி.டி. மெமரி கார்டு போன்ற புறநிலை சாதனங்களைப் (Physical device) பயன்படுத்தி சேமித்துவைக்க முடியும். அதையும் தாண்டி தகவலை இணையத்திலும் சேமித்துவைக்க முடியும். இது போன்ற கணினி செயல்பாடுகளை இணையத்தை சார்ந்து செய்வதுதான் மேகக் கணிமை. மின்னஞ்சல் அனுப்பும்போது, அனுப்பிய தகவல் எங்கு நின்று, எப்படி செல்கிறது?
இணையவழிச் சேவை
ஜிமெயில், கூகுள் காலண்டர், யாஹூ போன்ற இணையச் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் மேகக் கணிமை செயல்பாடுகளை பயன்படுத்துகிறீர்கள். எடுத்துக்காட்டுக்கு, இணையம் வழியே பயன்படுத்தக்கூடிய ‘Google Docs’ செயல்பாடு மேகக் கணிமை வகையாகும்.
இந்தச் சேவைகளை நீங்கள் பெறும்போது உலகில் எங்கோ ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ள சர்வர் கணினித் தொகுதியோடு இணைந்து நாம் செயல்படுகிறோம். இருசக்கர வாகனம் அல்லது கார் ஓட்ட கற்றுக்கொள்வதற்காக அவற்றைப் புதிதாக வாங்காமல் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் அளவுக்கு மட்டும் கட்டணத்தை செலுத்துவது போன்றதுதான் மேகக் கணிமையின் செயல்பாடும்.
கணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்களில் இருந்து தேவைக்கேற்ற அளவு கணிமைத் திறன்களைப் பெற்றுப் பயன்படுத்தலாம். உதாரணமாக பொறியியல் படிக்கும்போது நான்காம் ஆண்டில் செய்யப்படும் புராஜெக்ட் வேலையை ஆசிரியர்களிடம் விளக்க நம்மிடம் லேப்டாப் இருக்காது.
நாம் புதிதாக ஒரு லேப்டாப் வாங்குவதற்குப் பதிலாக நண்பரிடம் உள்ள லேப்டாப்பை பயன்படுத்தி, நம்முடைய புராஜெக்ட்டை விளக்குவோம். அதுபோலத்தான் ஒரு நிறுவனம் கணினிகளிலும், மென்பொருள்களிலும் கட்டமைப்பு ஒன்றை (Hardware, Software, Infrastructure) அமைக்காமல் பயன்பாட்டுக் கட்டண முறையில் தனது கணிமைத் தேவைகளைப் பல்வேறு இடங்களிலிருந்தும் கணிமை நிறுவனங்களிலிருந்தும் பெற இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது.
பல்வகை சேவைகள்
மேகக் கணிமை சேவைகளில் அடிப்படை உள்கட்டமைப்பைச் சேவையாகத் தருவது (IaaS), மென்பொருள் உருவாக்குநர்களுக்கான இயங்குதள சேவையாகத் தருவது (PaaS), மென்பொருட்களை / வலைச் செயலிகளைச் சேவையாகத் தருவது (SaaS) எனப் பல சேவைகள் உள்ளன.
அமேசானின் மேகக் கணிமைச் சேவையும், மைக்ரோசாஃப்டின் அசூர் மெய்நிகர் கணினிச் சேவையும் அடிப்படை உள்கட்டமைப்பு வகையைச் சார்ந்தவை. கூகுளின் ஆப் எஞ்சின் மென்பொருள் உருவாக்குநர்களுக்கான இயங்குதள வகையைச் சார்ந்தவை. Google Gmail, Google Docs, Google Drive போன்ற வணிகச்சேவைகள், மென்பொருள்களை / வலைச் செயலிகளைச் சேவையாகத் தரும் வகையைச் சார்ந்தவை.
மேலும் கணிமை வளங்களை எங்கேயும் எப்போதும், நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் பெற முடியும். கார், மோட்டார் சைக்கிள் தேவைப்படும்போது, உடனடியாக வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறோமோ, அதுபோல மேகக் கணிமையில் தேவைப்படும் கணிமையானது ஒரு வலைச் செயலியாக வழங்கப்படுகிறது.
அதை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும், உலாவிக்கொண்டும் இயக்க முடியும். ஒரு மணிநேர உபயோகத்திற்கு நாம் தேவையான பணத்தை கொடுக்கிறோம். அதுபோல, மேகக் கணினி நிறுவனங்கள் நாம் பயன்படுத்தும் கணிமை வளங்களை பொறுத்து கட்டணம் வசூலிக்கும்.
இந்தக் கணிமை வளங்களின் தரம் புதுப்பிக்கப்படுவதுடன் விலையும் குறைவானது. இதைப் பயன்படுத்தவன்,மென் பொருட்களை சொந்தமாக வாங்கிக் குவிக்கத் தேவையில்லை. இதைப் பராமரிக்க ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பப் படையையும் உருவாக்கத் தேவையில்லை. மேகக் கணிமையைப் பயன்படுத்த பயப்படத் தேவையில்லை, பாதுகாப்பு உள்ளது. அதேபோல் கணிமை வளங்கள் வீணாகாமல் பகிர்ந்துகொள்ளவும் வழியிருக்கிறது.
இணைக்கும் சேவை
சன் மைக்ரோ சிஸ்டம், அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட், வி.எம்.வேர் போன்ற நிறுவனங்கள் இத்தகைய மேகக் கணிமை சேவையை வழங்குகின்றன. நமக்குத் தேவையான செயல்பாடுகளை இந்த நிறுவனங்களிடமிருந்து பெற்று நாம் செய்யும் செயல்முறையே மேகக் கணிமை. பல கணினிகளும் சேவையகங்களும் இணையத்தால் தொடர்புகொள்ளும் நுட்பமும் மேகக் கணிமையே.
உதாரணமாக, நாம் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து புத்தகங்களையும் நம்மால் வாங்க இயலாது. அதற்குப் பதிலாக நூலகங்களுக்கு சென்று, தேவையான புத்தகத்தை எடுத்துவந்து படித்த பிறகு அதை ஒப்படைத்து விடுவோம். இதுபோன்ற செயல்பாட்டு முறைதான் மேகக் கணிமை.
பயனர்களுக்கு மென்பொருளைத் தருவது, சேமிப்புக்கான பாதுகாப்பான பெரிய இடத்தை அளிப்பது, இணைய சேவைகளைத் தருவது என இதன் பயன்பாடுகள் நீண்டுகொண்டே செல்கின்றன. இதில் இரண்டு அம்சங்கள் உண்டு. வலையிணைப்புக் கணிமை (Grid computing) என்பது பல்வேறு பயனர்கள் ஒரு வலையமைப்பில் இணைந்திருப்பார்கள்.
அவர்களுக்குள் மட்டுமே,அவர்களால் எந்தவொரு செயலையும் (சேமிப்பு, செயல், தரவு செயல்பாடுகள்..) செய்ய முடியும், பரிமாறிக்கொள்ள முடியும். ஆனால் மேகக் கணிமை அப்படியல்ல. எங்கிருந்து வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும், எந்தவொரு செயலையும் இணையம் வழியாக மேற்கொள்ள முடியும்.
கட்டுரையாளர்கள்: தனியார் பொறியியல் கல்லூரி இயக்குநர் மற்றும் உதவிப் பேராசிரியர், தொடர்புக்கு:
shanmugamk.cse@valliammai.co.in