

ஏதோவொரு அறிவியல் துறையில் விஞ்ஞானியாக வேண்டும் என்கிற கனவு பலருக்கும் இருக்கலாம். உயிரியல் துறையில் விஞ்ஞானி ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
அறிவியல் துறையில் விஞ்ஞானியாக வேண்டும் என்றால் மற்ற துறைகளைவிட இன்னும் சில ஆண்டுகள் அதிகமாகப் படிக்க வேண்டும். அதாவது, இளங்கலை அறிவியல் / பொறியியல் (பிஎஸ்.சி. / பி.இ) மூன்று அல்லது நான்கு ஆண்டுகள். முதுகலை அறிவியல் / பொறியியல் (எம்.எஸ்சி/ எம்.இ) இரண்டாண்டுகள். பிறகு முனைவர் பட்டத்துக்கான (பிஎச்டி) ஆராய்ச்சிப் படிப்பு 4 முதல் 6 ஆண்டுகள்.
படிக்க வேண்டிய காலம் மிக அதிகம் என்றாலும் பணி செய்து கிடைக்கும் ஊதியத்துக்கு இணையான உதவித்தொகையுடன் முதுநிலைப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை படிக்க இயலும். எனவே, விஞ்ஞானி ஆவதற்குப் பணமோ குடும்பச்சூழலோ ஒரு தடைக்கல்லாக இருக்காது.
முதுகலையில் முடிவெடுங்கள்
உயிரியல் துறையில் விஞ்ஞானியாக வேண்டும் என்றால் நீங்கள் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும். கல்லூரியில் உயிரியல் படிப்பைத் தேர்ந்தெடுப்பது அவசியம். உதாரணமாக, இளங்கலை அறிவியலில் விலங்கியல், தாவரவியல், நுண்ணுயிரியல், உயிரித் தொழில்நுட்பவியல் போன்ற படிப்புகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தப் படிப்புகளுக்கு நேரடியாகத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறைவுதான். என்றாலும், மூன்று ஆண்டுகள் படித்து முடித்தபின் நீங்கள் உயிரியல் விஞ்ஞானியாக உயர்வதற்கு இந்தப் படிப்புகள் நிச்சயம் அடித்தளமாக அமையும்.
இளங்கலை அறிவியல் படிப்பை முடித்த பிறகு முதுகலைப் படிப்பைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். உயிரியல் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்குள் செல் உயிரியல் (Cell Biology), மூலக்கூறு உயிரியல் (Molecular Biology), மரபியல் (Genetics), உயிரித் தொழில்நுட்பவியல் (Biotechnology) மற்றும் மரபுத் தொழில்நுட்பவியல் (Genetic Engineering) என நூற்றுக்கும் அதிகமான உட்பிரிவுகள் உள்ளன.
ஆகவே இளங்கலை அறிவியல் படிப்பைப் படிக்கும்போது இவற்றில் எந்தத் துறையில் தொடர விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்த பிறகு, அதற்கேற்ப முதுகலைப் படிப்பைத் தெரிவுசெய்ய வேண்டும்.
கிடைக்கும் உதவித்தொகைகள்
இளங்கலை அறிவியலில் நீங்கள் எந்த உயிரியல் தொடர்பான படிப்பைப் படித்திருந்தாலும், முதுகலையில் விருப்பமான எந்தவொரு உயிரியல் சம்பந்தமான உட்பிரிவையும் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, இளங்கலையில் விலங்கியல் படித்திருந்தாலும் முதுகலையில் மூலக்கூறு உயிரியலைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தியாவில் மத்திய அரசின் உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஜெ.என்.சி.ஏ.எஸ்.ஆர்., ஐ.சி.எம்.ஆர்., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., டி.ஐ.எஃப்.ஆர். என்.ஐ.பி.இ.ஆர். போன்றவை சிறந்த முதுகலை ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்குகின்றன.
இந்த நிறுவனங்களில் படிக்கும்போது மாதம் ரூ. 12,000 வரை உதவித்தொகை பெற்றுப் படிக்க முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு. நுழைவுத் தேர்வு மூலமே இந்நிறுவனங்களில் சேர இயலும். நுழைவுத்தேர்வு அறிவிப்புகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். உயிரியலில் முதுநிலைப் படிப்புக்குப் பிறகான ஆராய்ச்சிப் படிப்புக்குச் சிறந்த உதவித்தொகையுடன் எண்ணற்ற வாய்ப்புகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கொட்டிக் கிடக்கின்றன.
குறிப்பாக, ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவித்தொகைக்கென்றே இந்தியாவில் சி.எஸ்.சி.ஆர். ஆண்டுக்கு இரண்டு முறை போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. மேலும், ஐ.சி.எம்.ஆர்., டி.பி.டி. ஆகிய நிறுவனங்களும் ஆண்டுக்கு ஒருமுறை போட்டித் தேர்வை நடத்துகின்றன.
முறையான பயிற்சி இருந்தால் இந்தத் தேர்வுகளில் எளிமையாக வெற்றிபெறலாம். இந்தத் தேர்வில் வெற்றிபெற்றாலே மாதம் ரூ. 32,000 உதவித் தொகையுடன் ஐந்து ஆண்டுகளுக்கு ஆராய்ச்சிப் படிப்பை இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க இயலும்.
வெளிநாடுகளில் பணி
மேலும், மத்திய அரசின் ‘கேட்’(GATE) தேர்வில் வெற்றி பெற்றாலும் மேலே குறிப்பிட்ட பல உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பை தொடர முடியும். அது மட்டுமல்லாமல், முதுகலைப் படிப்பில் முதல் தர வரிசையுடன் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசின் ‘INSPIRE Fellowship’ உதவியுடன் எந்த நுழைவுத்தேர்வும் இன்றி மாதம் ரூ. 40,000 உதவித்தொகையுடன் இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர முடியும்.
ஆராய்ச்சிப் படிப்பை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களிலும் முழு உதவித்தொகையுடன் படிக்க முடியும். அதற்கு அந்தந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் வகுத்துள்ள தகுதிகளின்படி ‘TOEFL’, ‘IELTS’ போன்ற ஆங்கிலத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர இடம் கிடைத்தாலே படிப்புக்கான முழு செலவையும் அந்நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும். மாதாந்திர உதவித்தொகையும் உண்டு. ஆராய்ச்சிப் படிப்பைச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் படித்த பிறகு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதேபோன்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் விஞ்ஞானியாகப் பணியாற்ற முடியும்.
கட்டுரையாளர்: நெதர்லாந்து டுவென்டி பல்கலைக்கழக விஞ்ஞானி