டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு: எதிர்கொள்வதற்குக் குறிப்புகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு: எதிர்கொள்வதற்குக் குறிப்புகள்
Updated on
3 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் (preliminary) தேர்வு 2022 அக்டோபர் 30, 2002 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் வெற்றிபெற அது எந்த முறையில் நடத்தப்படுகிறது என்பதைத் தெளிவாக அறிந்து அதற்கேற்ப தயார் செய்துகொண்டாலே போதுமானது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகளை எவ்வாறு அணுக வேண்டும், அதற்கான பயிற்சியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய முக்கியக் குறிப்புகள்:

l முதலில் குரூப் 1 பாடத்திட்டத்தை முழுவதுமாகவும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு பற்றி மிகத் தெளிவாகவும் விரிவாகவும் அறிந்திருக்க வேண்டும்.

l முதல் நிலைத் தேர்வில் 200 வினாக்களுமே கொள்குறி வினா-விடை வகையைச் சார்ந்திருப் பதால் அனைத்துப் பாடத் தலைப்புகளிலும் கவனமாக உள்ளார்ந்து படித்து அறிந்து வைத்திருப்பது அவசியம். முதன்மைத் தேர்வு என்பது எழுத்துத் தேர்வு என்பதால், படித்துக் குறிப்புகள் எடுக்கும்போது அத்தேர்வுக்கும் பயன்படும் வகையில் வாசிப்பு இருக்க வேண்டியது அவசியமான ஒன்று.

l முதல் நிலைத் தேர்வில் 25 வினாக்கள் கணிதம், நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, எளிய கணித முறை களைப் பயன்படுத்தி இப்பகுதியில் 25 × 1.5 = 37.5 மதிப்பெண்களை முழுமையாகப் பெற முடியும். கணிதத்தைப் பொறுத்தவரை எண்கள் பற்றிய தெளிந்த அறிவும் குறிப்பாக அனைத்துக் கணிதக் குறியீடுகள், அவற்றின் பயன்பாடுளைப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

சராசரி, விகிதம், விழுக்காடு போன்றவற்றை அனைத்து வகையான கணக்குகளிலும் பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவை தொடர்பான பகுதிகளில் நன்கு பயிற்சி எடுப்பது அவசியம். காலமும் தூரமும், காலமும் வேலையும், சுற்றளவு, பரப்பு, கன அளவு, தனிவட்டி-கூட்டுவட்டி, லாப- நட்டம் , நிகழ்தகவு போன்றவை சம்பந்தப்பட்ட கணக்குகள் அனைத்து வகை வினாத்தாள்களிலும் நிச்சயமாகக் கேட்கப்படும்.

l நுண்ணறிவைப் பொறுத்தவரை ஆங்கில எழுத்துக்கள் வரிசையைப் பயன்படுத்தும் வகையில் வினாக்கள், எண் வரிசை, விடுபட்ட எண்ணை அறிதல், வார்த்தைகள்-குறியீடு, கடிகாரம், நாட்காட்டி சம்பந்தப்பட்ட வினாக்கள், திசைகள், ரத்த உறவுகள் குறித்த வினாக்களில் அதிக அளவில் பயிற்சி எடுப்பது நல்லது.

l 6 - 10 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்களில் கொடுத்துள்ள ஒவ்வொரு பாடத்திலும் உள்ள உட் தலைப்புகளில் வரிவரியாக நன்கு படித்து குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டால், பின்னர் திருப்பிப் பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ், அறிவியல், கணிதம், சமூக அறிவியல், குடிமையியல் பகுதியில் கேட்கப்படும் பெரும்பாலான வினாக்கள் இப்பாடப் புத்தகங்களை ஒட்டியே அமையும்.

l 11, 12ஆவது வகுப்புப் பாடங்களில் வரலாறு, புவியியல், அரசியல், இந்திய அரசமைப்பு, பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தி குறிப்புகள் எடுத்துப் படிப்பது மதிப்பெண்கள் அதிகமாக எடுக்க உதவும்.

l நடப்புச் செய்திகளைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கில நாளிதழ்களைத் தினந்தோறும் படித்து அரசியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், அறிவியல், விருதுகள், விளையாட்டு, அயல் நாட்டுச் செய்திகள் போன்ற தலைப்புகளில் குறிப்பெடுத்துப் படிக்க வேண்டும். செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கண்டு முக்கியமானவற்றைக் குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் கடந்த ஓராண்டு நடப்புச் செய்திகளைப் பற்றி நன்கு அறிந்திருத்தல் இப்பகுதியில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு வழிவகை செய்யும்.

l தமிழ்நாடு வரலாறு, குறிப்பாக சேர, சோழ, பாண்டியர், பல்லவர் கால ஆட்சிமுறை மற்றும் முக்கிய நிகழ்வுகள், தமிழ் மொழி, பண்பாடு, புவியியல், அரசியல், அரசியல் தலைவர்கள், சங்க இலக்கியம், நூல்கள்-ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள், விடுதலை இயக்கத்தில் தமிழர்களின் பங்கு, விருதுகள், விளையாட்டு, மாவட்டங்கள், சிறப்புமிகு முக்கிய நகரங்கள், தொழில் வளம், தொல்பொருள் ஆராய்ச்சித் தகவல்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் சர்வதேசப் புகழ்பெற்ற தமிழர்கள் போன்ற பகுதிகளில் உள்ளார்ந்த தகவல்களை அறிந்திருத்தல் தேர்வை அணுகுவதற்கு எளிதாக இருக்கும்.

l இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா என மூன்று பிரிவுகளிலும் முக்கிய நிகழ்வுகளை முறையாகத் தொகுத்து படிக்க வேண்டும். குறிப்பாக1857 முதல் இந்திய சுதந்திரப் போரான மீரட் சிப்பாய் கலகத்திலிருந்து இந்தியா குடியரசான 1950 வரை நடந்த அனைத்து நிகழ்வுகளைப் பற்றியும் மனதில் நிறுத்துவது அவசியம். அதிக வினாக்கள் இப்பகுதியில் இருந்தே கேட்க வாய்ப்பு உள்ளது.

l இந்தியாவை ஆண்ட வம்சங்கள், மன்னர்கள் வரிசை, முக்கியமாக அவ்வம்சத்தைத் தோற்றுவித்தவர், கடைசி மன்னர், புகழ்பெற்ற மன்னர்கள் குறித்த தகவல்கள், அக்காலக் கட்டங்களில் நடந்த போர்கள் பற்றிய குறிப்புகள், தலைநகரங்கள், அக்காலத்து மன்னர்களின் புகழ்பெற்ற நடவடிக்கைகள் போன்ற செய்திகளை முறைப்படி படிக்க வேண்டும்.

l இந்தியாவின் முதன்மைகள், அறிவியல் ஆய்வகங்கள், சிறப்பு பெற்ற நகரங்கள், முக்கிய நதிகள், அணைக்கட்டுகள், பல்நோக்குத் திட்டங்கள், உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்கள், நடனங்கள், பழங்குடி மக்கள் போன்றவற்றைப் பட்டியலிட்டுப் படிப்பது நல்லது. மேலும், இந்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விரிவாகப் படித்துக் குறிப்பெடுத்தால் அனைத்துத் தேர்வுகளுக்கும் நிச்சயமாகப் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை.

l இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றம், செயல்பாடுகள், வங்கிகள் அரசுடமை, நிதிநிலை அறிக்கை பற்றிய கண்ணோட்டம், நேர்முக, மறைமுக வரிகள், பங்குச்சந்தை போன்றவற்றைப் பற்றி நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.

l நன்கு படித்தபின் திருப்புதலின்போது மட்டுமே பழைய வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்களுக்கு விடையளித்து உங்களது பயிற்சியின் நிலையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

l முதல்நிலைத் தேர்வு (preliminary), முதன்மைத் தேர்வு (main), நேர்காணல் (interview) என மூன்று படி நிலைகளைக் கடந்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி அடைந்தால்தான் சிறப்புமிக்க உயர் பதவிகள் கிடைக்கும். எனவே, முதல்நிலைத் தேர்வை நல்ல நிலையில் கடக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்திச் செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர், போட்டித் தேர்வுப் பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.

தொடர்புக்கு - success.gg@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in