துறை முகம்: மேன்மை தரும் மேலாண்மை படிப்பு

துறை முகம்: மேன்மை தரும் மேலாண்மை படிப்பு
Updated on
2 min read

அறிவைத் தருகிற கல்வியோடு சேர்த்து வேலைவாய்ப்பையும் உறுதிசெய்கிற படிப்பு எது என்று ஆராய்ந்து, அதைத் தேர்ந்தெடுக்கிற தெளிவான சிந்தனை இன்று பலரிடமும் ஏற்பட்டிருக்கிறது. இது வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முதல் படி.

அந்த வகையில் எந்தப் படிப்பைப் படித்தாலும் அந்தத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஒரு படிப்பை மட்டுமே படிக்காமல், கூடுதலாக இன்னொரு படிப்பைப் படிக்கும்போது, அது நம்முடைய வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தை அதிகப்படுத்தும்.

கூடுதல் படிப்பு என்றால் என்ன படிப்பைப் படிக்கலாம் என்கிற எண்ணம் வரும். அறிவியலில் ஒரு பிரிவை எடுத்து இளங்கலையில் படித்தவர்கள், முதுகலையிலும் அதே படிப்பைப் படிப்பதுண்டு. இதேபோல பொறியியலில் ஒரு பிரிவை எடுத்துப் படிப்பவர்கள், அதே பிரிவில் முதுகலைப் படிப்பையும் படிப்பதுண்டு.

ஆனால், இளங்கலையில் கலை, அறிவியல், பொறியியல், வேளாண் என எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும், ஒரு படிப்பை எல்லாருமே முதுகலையில் படிக்கலாம். அது, மேலாண்மைப் படிப்பு.

தகுதி என்ன?

1980களில் பட்டப் படிப்புகளில் குறைந்த அளவே பாடப்பிரிவுகள் இருந்தன. ஆனால், இன்று எண்ணற்ற இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகள் கடலளவு விரிந்து கிடக்கின்றன. அவற்றில், சிறந்ததொரு பட்டப்படிப்புதான் மேலாண்மை. அதாவது, எம்.பி.ஏ. (MBA - Master of Business Administration).

இந்தப் படிப்பை படிப்பதால் கிடைக்கிற பலன்கள் எண்ணற்றவை. மேலாண்மைப் பாடங்கள் பற்றிய அறிவுடன் ஆளுமைத் திறன் , தலைமைப் பண்பு, தகவல் தொடர்புத் திறன், பகுப்பாய்வுத் திறன், உணர்வுகளைக் கையாளும் திறன், முடிவெடுக்கும் திறன் போன்ற திறன்கள் கைவரப் பெறுவீர்கள். எம்.பி.ஏ. படிப்பு என்பது நிறுவனங்கள் எதிர்பார்க்கிற மேலாளர்களை மட்டுமல்ல, தொழில் முனைவோர்களையும் உருவாக்கி தரும் வல்லமை கொண்டது.

யாரெல்லாம் படிக்கலாம்?

சகலமானவர்களும் எம்.பி.ஏ. மாணவராகலாம். இதற்குச் சிறப்புத் தகுதிகள் எதுவும் தேவையில்லை. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தப் பட்டப் படிப்பு கலை, அறிவியல், பொறியியல், வேளாண் இளங்கலையில் படித்துத் தேர்ந்தவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கலாம்.

சிறந்த கல்வி நிறுவனங்கள்

இந்தியாவில் பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மேலாண்மைப் படிப்புகளை வழங்கிவருகின்றன. இவை தவிர மேலாண்மைக் கல்வியை மட்டுமே வழங்கும் உயர் கல்வி நிறுவனங்களும் உண்டு. அந்த வகையில் ஐஐஎம் (இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம்) எக்ஸ்.எல்.ஆர்.ஐ. (சேவியர் ஸ்கூல் ஆஃப் மேலாண்மை), எக்ஸ்.ஐ.எம்.இ. (சேவியர் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் நிறுவனம்), சிம்பயாசிஸ் எனச் சிறந்த கல்வி நிறுவனங்கள் மேலாண்மைப் படிப்புகளை வழங்கிவருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகளைப் படிக்க வேண்டுமென்றால் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதற்காகவே CAT (Common Admission Test), MAT (Management Aptitude Test), XAT (Xavier Aptitude Test), Symbiosis National Aptitude Test (SNAP) போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் இப்படிப்பைப் படிக்க வேண்டும் என்றால், TANCET (Tamil Nadu Common Entrance Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதெல்லாம் சரி, மேலாண்மைப் படிப்பைப் படிக்க எந்த அளவீடுகளில் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்? கல்வி நிறுவனத்தின் நற்பெயர், பேராசிரியர்களின் தகுதிகள், கல்வி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், படிப்பைப் படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைக் குறிப்பாக முன்னனணி நிறுவனங்களில் படிப்போடு தொடர்புடைய வேலைகளில் சேரும் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதில் நல்லவிதமாகச் செயல்பட்டதற்கு ஆதாரமான ஆவணங்களைக் கொண்டு கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம். தற்போது இத்தகைய தகவல்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் வலைத்தளங்களிலேயே கிடைக்கின்றன. என்றாலும் ஒரு முறை தீர விசாரித்துக்கொள்ளவும் வேண்டும்.

எங்கு வேலை கிடைக்கும்?

வங்கித் துறை, தொழில் துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறை போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் உண்டு. இன்று எதை எடுத்தாலும் நிர்வாக மேலாண்மை இன்றித் தனித்து இயங்க முடியாது. நிர்வாகம் செம்மையாக இயங்கத் திறமையான மேலாண்மைப் பட்டதாரிகள் அவசியம்.

அதனால்தான், இவர்களின் தேவை இன்றைய போட்டி உலகத்தில் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கூடிக்கொண்டே போகிறது. மேலும், இளங்கலை மற்றும் மேலாண்மை அறிவை வைத்துச் சுயமாக தொழில்முனைவோராகவும் ஆகலாம்.

அதேவேளையில் சிறந்த கல்வி நிறுவனங்களில் சிறந்த படிப்பைப் படித்திருந்தாலும் சிலர், சரியான வேலை கிடைக்கவில்லை என்று மனக்குறை இருக்கவே செய்யும். குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் ஆட்களும் இருக்கவே செய்கிறார்கள். எம்.பி.ஏ.வைப் பொறுத்தவரை, தேர்வுக்குத் தயாராவது முக்கியம்.

தேர்வுக்காக கடைசி நேரத் தயாரிப்புகளில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெறும் மனப்போக்கு இருந்தால் மாற்றிக்கொள்வது அவசியம். 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் இருந்தால் போதும் என்கிற வரையறையையும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவை எல்லாம் ஒருபோதும் நம்மை உயர்த்தாது.

மேலாண்மைப் படிப்பைப் படிக்கிற காலத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அனுபவங்களை எந்த அளவுக்குச் சேகரிக்கிறோமோ அந்த அளவுக்குப் பலன்கள் கிடைக்கும். கலந்துரையாடல், கருத்தரங்குகள், நிறுவனம் தருகிற பயிற்சிகள் (இன்டெர்ன்ஷிப்) போன்றவை மூலம் நிறுவனம் எதிர்பார்க்கும் அனைத்துவிதமான திறமைகளையும் படிக்கிற காலத்திலேயே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்,

வேலைக்குச் சேர விரும்புகிற நிறுவனங்களின் எதிர்பார்ப்பைப் படிக்கிறபோதே வளர்த்துக்கொண்டு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களின் முயற்சியே திருவினை ஆக்கும்.

கட்டுரையாளர், தனியார் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர்

தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in