

பதின்பருவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது பெற்றோரிடையேயும் பொதுச் சமூகத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பதின்பருவத்தினரிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்திருப்பது குறித்து அனைவரும் கவலை தெரிவித்துவருகின்றனர்.
இந்தப் பின்னணியில் பதின்பருவத் தற்கொலைகளைத் தடுப்பது குறித்து உளவியலாளர்கள் தெரிவித்த கருத்துகள்:
பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்க வேண்டும்
லட்சுமி விஜயகுமார், உளவியல் நிபுணர், ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மைய நிறுவனர்.
பொதுவாக இந்தத் தலைமுறையில் எல்லா விஷயங்களும் அதிவேகமாக நடந்து முடிந்துவிடுகின்றன; மாணவர்களும் பிரச்சினைகளுக்கு அதிவேகத் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். தாங்கள் எதிர்கொள்ளும் தற்காலிகப் பிரச்சினைகளுக்குத் தற்கொலை என்னும் நிரந்தர முடிவை நாடிவிடுகிறார்கள்.
வெற்றி, தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம். இதை மாணவர்கள் உணர வேண்டும்.
பதின்பருவத்தில் இருப்போருக்குத் தம்மைப் பற்றிய மதிப்பீடு தாழ்வாக இருக்கும். இதனால், அவர்கள் மிக எளிதாக அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்துவிடுவார்கள்.
இதனால், தேர்வில் காப்பி அடிப்பது, எதிர்பாலினத்தவருடன் பேசுவது, கல்விக் கட்டணம் செலுத்தாதது, குறைவான மதிப்பெண் எடுத்தது ஆகியவை குறித்துப் பிறர் முன்னிலையில் கேள்வி எழுப்புவது மாணவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே இதுபோன்ற காரணங்களுக்காக மாணவர்களை தனியாக வைத்துத்தான் கேட்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே கண்டிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் தம்மிடம் படிக்கும் ஒவ்வொரு மாணவ-மாணவியரையும் தம் குழந்தையாகப் பாவிக்க வேண்டும். மன அழுத்தமோ தற்கொலை எண்ணங்களோ உடைய குழந்தைகளை எப்படிக் கண்டறிவது, அவர்களை எப்படி அணுகுவது, அவர்களை அந்த எண்ணத்திலிருந்து மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும். அதற்காக நாங்கள் ‘கேட்-கீப்பர் ட்ரெய்னிங்’ எனும் பயிற்சி நிரலை வடிவமைத்துள்ளோம். ஆசிரியர்கள் இதுபோன்ற பயிற்சிகளைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
பெற்றோர் தம்முடைய ஆசைகளைக் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது, பிறருடன் ஒப்பிடவும் கூடாது. குழந்தைக்குப் பிடித்தமானதைக் கண்டறிந்து ஊக்குவித்து அதில் சாதிப்பதற்கு உதவ வேண்டும். அதற்காகக் குழந்தைகளுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது, அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதல்ல. நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படித்தான் குழந்தைகள் வாழ்வார்கள். அதை நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
ஊடகங்கள் தற்கொலை தொடர்பான செய்தியை வழங்கும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஒரு தற்கொலை நிகழ்ந்தால் தற்கொலை செய்துகொண்டவரின் வயது, பாலினம் உள்ளிட்ட அடையாளங்கள், அவருடைய சூழல், அவர் தற்கொலை செய்துகொண்ட காரணம் ஆகியவற்றை வெளியிடக் கூடாது.
அதைப் பார்க்கும் குழந்தைகள் அவற்றைத் தம்முடன் அடையாளப்படுத்திக்கொண்டு அதேபோல் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டப்படலாம். இதுபோன்ற ‘போலச் செய்யும்’ தற்கொலைகளால் மொத்த தற்கொலைகள் 15 சதவீதம் அதிகரிக்கின்றன.
அதனால்தான் ஒரு தற்கொலைச் செய்தியில் தற்கொலையின் வழிமுறை, தற்கொலை தொடர்பான சித்திரங்கள் ஆகியவற்றை வெளியிடக் கூடாது என்று ஊடகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.
2019இல் ‘இந்திய பிரஸ் கவுன்சில்’ தற்கொலை தொடர்பான செய்தி வழங்கல் தொடர்பாக ஊடகங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை எந்த ஊடகமும் முறையாகப் பின்பற்றுவதில்லை.
‘தி இந்து’ (ஆங்கிலம்) மட்டுமே சரியாகத் தற்கொலை தொடர்பான அனைத்துச் செய்திகளிலும் தற்கொலைத் தடுப்பு உதவிக்கான தொடர்பு எண்ணை வழங்குகிறது. இது உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களில் ஒன்று.
நீண்ட செயல்திட்டம் தேவை
அபிராமி, மனநல மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர், மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம்.
பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத்தனிமனித காரணமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. ஏனெனில், கல்வி குறித்த பார்வை, கல்வி அமைப்பின் சிக்கல்கள், குடும்பங்களின் பொருளாதாரச் சூழல், இவை சார்ந்த அழுத்தங்கள் ஆகிய சமூகக் காரணிகளும் மாணவர் தற்கொலைகளுக்குப் பங்களிக்கின்றன.
மாணவர்களுக்கு வாழ்க்கை குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்த வேண்டும். தற்கொலை எண்ணத்தை அறவே தவிர்க்கும் பணியை நீண்ட நாள் செயல்திட்டமாக எடுத்துச்செல்ல வேண்டும். ‘தற்கொலை என்பது கோழைத்தனம்’, ‘தற்கொலை எதற்கும் தீர்வல்ல’ என்பது போன்ற அறிவுரைகளால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது.
தற்கொலை எண்ணம் எதனால் ஏற்படுகிறது, நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் ஏதாவது நடந்துவிட்டால் அதை உணர்வுவயப்படாமல் எப்படிப் பொறுமையாகக் கையாள்வது ஆகியவற்றை எல்லாம் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். உணர்வுவயப்பட்ட நிலையில் இருக்கும்போது எந்த ஒரு முடிவையுமே எடுக்கக் கூடாது என்பதை உணர்த்த வேண்டும்.
நிதானமான மனநிலையில் முடிவெடுக்க வேண்டும் என்று முடிவைத் தள்ளிப் போடுவதற்கான பொறுமையை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
படி படி என்று வற்புறுத்துவதற்குப் பதிலாகக் கல்வியின் அவசியத்தைப் புரியவைக்க வேண்டும். அதைச் சிறு வயதிலிருந்தே செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட கல்வி வாய்ப்பைப் பெறுவதற்கு 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் முயலும் உந்துதலையும் அதையும் தாண்டி அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதை எதிர்கொண்டு வேறு வாய்ப்பைப் பெறுவதற்கான பக்குவத்தையும் குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே ஏற்படுத்த வேண்டும்.
வீடுகளில் பெரியவர்கள் தற்கொலை செய்து கொண்டுவிடுவேன் என்று மிரட்டுவது, அது தொடர்பாகப் பேசுவது போன்றவையும் குழந்தைகளைப் பாதிக்கும். கவலை ஏற்பட்டால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தைக் கொடுக்கும். ஊடகங்களிலும் தற்கொலைகளை அளவுக்கு அதிகமாக முன்னிறுத்தும்போது அதுவும் மாணவர்களைப் பாதிக்கிறது.
கல்வி குறித்த நம் பார்வை மாற வேண்டும். கல்வி இன்றியமையாதது. ஆனால், குறிப்பிட்ட கல்வியைப் பெற முடியாவிட்டால் வாழ்வே அழிந்துவிட்டதாகக் கருத வேண்டியதில்லை.
எந்தக் கல்வியைப் பெற்றாலும் அதற்குப் பிறகும் பிரச்சினைகளை எதிர்க்கொண்டுதான் முன்னேற வேண்டியிருக்கும். டாக்டர், இன்ஜினீயர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என மதிப்புமிக்க பணிகளில் இருப்பவர்களும் அன்றாடம் பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள். எனவே, நாம் பிரச்சினையைச் சமாளிக்கக் கற்றுக்கொள்வதுதான் முக்கிய மானது.
(தற்கொலை எண்ணத்திலிருந்து மீள்வதற்குத் தமிழ்நாடு அரசு மனநல மருத்துவ உதவி எண் 104, ஸ்நேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் 044-2460050 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம்)