

ஜூலை 16: தேசிய அளவில் ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி நான்காம் ஆண்டாக இந்த ஆண்டும் முதலிடம் பிடித்தது.
ஜூலை 18: நாட்டின் 16 ஆவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 99.1 சதவீத வாக்குகள் பதிவாயின. தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 100 சதவீத வாக்கு பதிவானது.
ஜூலை 18: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் சூப்பர் 500 போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜூலை 19: இந்தியாவின் கலாச்சார, பாரம்பரிய, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகராக உத்தரப் பிரதேசத்தின் வாராணசி அறிவிக்கப்பட்டது.
ஜூலை 20: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இலங்கையின் 9ஆவது அதிபர்.
ஜூலை 21: குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு 64.03 சதவீத வாக்கு மதிப்புகளைப் பெற்று வெற்றிபெற்றார். எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா 35.9 சதவீத வாக்கு மதிப்புகளையே பெற்றார்.
ஜூலை 22: 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் ‘சூரரைப் போற்று’ சிறந்த படமாகத் தேர்வானது. சிறந்த நடிகராக சூர்யா (சூரரைப் போற்று), அஜய் தேவ்கன் (தி அன்சங் வாரியர்), சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று) ஆகியோர் தேர்வாகினர். ‘சூரரைப் போற்று’, ‘மண்டேலா’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படங்கள் மூலம் தமிழகத்துக்கு 10 விருதுகள் கிடைத்தன.