

‘மெட்டாவெர்ஸ்’ என்னும் மெய்நிகர் தொழில்நுட்பம், தொழில்நுட்ப உலகில் பரவலாகப் பேசுபொருளாகி உள்ளது. கூகுள், ஃபேஸ்புக் போன்ற பல சர்வதேச நிறுவனங்கள் இதற்கான ஆராய்ச்சிக்குப் பல மில்லியன் டாலர் பணத்தை வாரி இறைக்கின்றன.
இப்போதுள்ள ‘வெர்சுவல் ரியாலிட்டி, அகுமென்டட் ரியாலிட்டி, மிக்ஸ்ட் ரியாலிட்டி’ ஆகியவற்றைத் தொடர்ந்து ‘மெட்டாவெர்ஸ்’ என்னும் அனைத்தையும் உள்ளடக்கிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனம் எனில் அதற்குத் தொலைபேசி அவசியம் தேவைப்பட்டது. நாளடைவில் சாதாரண தொலைபேசி பயன்பாடு குறைந்து, வலைத்தளம், மின்னஞ்சல் முகவரி மூலமாக நிறுவனங்களைத் தொடர்புகொள்ள முடிந்தது.
இப்போது அவற்றின் பயன்பாடும் குறைந்து, ஒவ்வொரு நிறுவனமும் சமூக ஊடகக் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் பயனர்கள், வணிகத்துக்குத் தேவையான இதர நிறுவனங்களைத் தங்கள் தொடர்பில் வைத்துள்ளன.
சமூக ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டும் இல்லாமல், திறமைகளை வெளி உலகுக்குக் காட்டும் தளமாகவும், நிறுவனங்கள் தங்கள் வணிகத்தைச் சந்தைப்படுத்தும் தளமாகவும் பரிணமித்து வருகின்றன.
சமூக ஊடகம் மூலமாக மட்டுமே வணிகத்தை நடத்தும் நிறுவனங்களும் வளர்ந்துவருகின்றன. இனி வருங்காலத்தில் வலைத்தளப் பயன்பாடு குறைந்து, சமூக ஊடகங்கள் வாயிலாகவே தகவல் தொடர்பு நடைபெற இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் ‘மெட்டாவெர்ஸ்’ என்னும் இந்தப் புதிய தொழில்நுட்பம் பயனர்களுக்கு மெய்நிகர் தொழில்நுட்பத்தை அடுத்த படிநிலைக்கு எடுத்துசெல்ல இருக்கிறது. இதன்மூலம், தகவல் தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓர் உலகத்துக்கே நொடிப்பொழுதில் ஒருவரை அழைத்துச்செல்ல முடியும். மனிதன் கண்ணால் பார்ப்பதை வைத்தே மூளை செயல்படுகிறது.
அப்படி இருக்கையில் இந்தத் தொழில்நுட்பம் மனிதனின் கண்களை வேறொரு இடத்தில் இருப்பதாக நம்ப வைக்கிறது. அதனால், நம் மூளையும் அதையே நம்பி, அதில் காட்டப்படும் செயற்கை உலகத்தை உணர வைக்கிறது.
இந்தத் தொழில்நுட்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அனுபவம் வாயிலாக மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தை அனுபவித்து உணர முடியும். இது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படாமல் ஆரோக்கியம் தொடர்பான பயன்பாட்டுக்கும் வர இருக்கிறது.
உதாரணமாக, மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்க்க இயலாதவர்கள் இதன் மூலம் வெகு தொலைவில் உள்ள மருத்துவரை உடனடியாக மருத்துவமனைக்கே சென்று பார்த்த அனுபவத்தைப் பெற முடியும். நிறுவனங்களின் நேர்முகத் தேர்வுக்கும், அலுவலகப் பணிகள், குழு விவாதங்களில் நேரில் பங்கேற்பது போன்ற ஒரு முழுமையான அனுபவத்தை இந்தத் தொழில்நுட்பத்தால் உருவாக்க முடியும். யோகா, நடனம் போன்ற பயிற்சி வகுப்புகள் இப்போது இருக்கும் வீடியோ கான்ஃபரன்சிங் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் ‘மெட்டாவெர்ஸ்’ தொழில்நுட்பத்தின் மூலம் இன்னும் ஈடுபாட்டுடன் பயிற்சிபெற முடியும்.
முப்பரிமாண (3D) வடிவிலான மெய்நிகர் பொருட்களை இந்தத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி அதைச் சந்தைப்படுத்த ‘NFT’ போன்ற பிளாக் செயின் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில் ஐந்தாம் தலைமுறை நெட்ஒர்க் வரும்பட்சத்தில் அதிவேக இணையவசதி மூலம் இந்தியர்கள் அதிகம் பார்க்கும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை நாடுகளைத் தாண்டி நேரில் சென்று மைதானத்திலேயே பார்க்கும் அனுபவத்தை வீட்டிலிருந்தே பெற முடியும்.
இந்த மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தைப் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும்பட்சத்தில் பயணங்களுக்கான தேவையும் குறையும். போக்குவரத்து குறையும்போது வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையும் குறைந்து, இயற்கை வளங்கள் ஓரளவுக்குக் காப்பாற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
அதனால், ‘மெட்டாவெர்ஸ்’ தொழில்நுட்பம் வருங்காலச் சந்ததிக்கு வரவேற்கத்தகுந்த தொழில்நுட்பமாகும். இந்தப் புதிய தொழில்நுட்பம் முழு திறன் வாய்ந்த தொழில்நுட்பமாக உருப்பெற்று வருகிறது.
இனி வருங்காலத்தில் தொழிற்சாலைகளில் புதிதாகச் சேரும் பணியாளர்களை நேரடியாக விலை அதிகமான இயந்திரங்களில் வேலை செய்ய வைப்பதைத் தவிர்த்து ‘மெட்டாவெர்ஸ்’ தொழில்நுட்பம் மூலம் முழு தொழிற்சாலையையே பொருள்களுடன் செயற்கையாக உருவாக்கி, அதில் பணியாளர்களுக்குப் பயிற்சி கொடுக்கலாம்.
அப்போது பெரும் பொருட்சேதங்களும் அபாயங்களும் தவிர்க்கப்படும். நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், மனித உயிருக்கு ஆபத்தான இடங்களில் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்யும் முறையான பயிற்சியை வழங்க இந்தத் தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம்.
வெளிநாடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தத் தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தத் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் மென்பொருளைக் காட்டிலும் வன்பொருளின் விலை அதிகமாக உள்ளதால் இந்தத் தொழில்நுட்பம் இன்னும் பயனர்களுக்குச் சென்று சேராமல் உள்ளது.
எதிர்காலத்தில் இந்தத் தொழில் நுட்பத்துக்கான வன்பொருளின் விலையும் குறைந்தால், இந்தியாவும் இந்தத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும். மாணவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்த உதவும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றிய விழிப்புணர்வுக்கும் பயிற்சிக்கும் அரசு உரிய கொள்கை முடிவுகளை எடுத்து வேலைவாய்ப்பைப் பெருக்க உதவ வேண்டும்.
கட்டுரையாளர்: தரவு அறிவியல் உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: rajkumar2@srmist.edu.in