குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 2017: இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பெருமை!

குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 2017: இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பெருமை!
Updated on
1 min read

நாட்டின் பதினைந்தாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் இரண்டாவது முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவரானார்.

2017ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றபோது மத்தியில் ஆட்சி மாறியிருந்தது. மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருந்தது. 2002 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பாஜகவைச் சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தார். பாஜக ஆட்சி மீண்டும் 2014இல் அமைந்த பிறகு 2017இல் குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது.

இந்தத் தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், பிஹாரில் ஆளுநராக இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்துவது என முடிவானது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மீரா குமாரின் தந்தை ஜகஜீவன் ராமை 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக்க அன்றைய பிரதமர் இந்திரா காந்தி விரும்பினார். ஆனால், காங்கிரஸ் தலைமை ஏற்காததால், அன்று அவரால் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆக முடியவில்லை. ஆனால், 48 ஆண்டுகள் கழித்து அவருடைய மகள் மீரா குமாருக்குக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது. ராம்நாத் கோவிந்த் - மீரா குமார் இருவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த வகையில் இத்தேர்தலில் ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

நாட்டின் பதினைந்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2017, ஜூலை 17 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் 97.29 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 20 அன்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். மீரா குமார் 3,67,314 வாக்கு மதிப்புகளை மட்டுமே பெற்றார். பதிவான வாக்குகளில் 65.65 சதவீத வாக்குகளைப் பெற்ற ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார். 34.35 சதவீத வாக்குகளைப் பெற்ற மீரா குமார் தோல்வியடைந்தார்.

தேர்தலில் வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்த் நாட்டின் பதினான்காவது குடியரசுத் தலைவராக ஜூலை 25 அன்று பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கே.ஆர். நாராயணனுக்குப் பிறகு தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது குடியரசுத் தலைவர் என்கிற பெருமை 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராம்நாத் கோவிந்துக்குக் கிடைத்தது.

(டைரி - நிறைவடைந்தது)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in