

இந்தியாவின் பதினான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் முதன் முறையாகக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் பதினான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றபோது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தது. 2007 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பிரதமராக இருந்தது போலவே இந்த முறையும் மன்மோகன் சிங்கே பிரதமராக இருந்தார். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் ஓர் அணுகுமுறையைக் கடந்த காலங்களில் பின்பற்றியிருந்தது.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்தவர்களைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைத்திருந்தது. எனவே, 2007ஆம் ஆண்டில் குடியரசுத் துணைத் தலைவரான ஹமீது அன்சாரி, குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஹமீது அன்சாரியும் தானே குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்று நினைத்திருந்தார். அதேவேளை கருத்துக்கணிப்பு நடத்தி மக்கள் விருப்பப்படி ஏ.பி.ஜெ. அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்கிற கோரிக்கைகூட எழுந்தது.
ஆனால், காங்கிரஸ் தலைமையோ மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக்கத் திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது. (சற்று அதிருப்தி அடைந்த ஹமீது அன்சாரி, இரண்டாவது முறையாகத் துணை குடியரசுத் தலைவராக்கப்பட்டார். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்குப் பிறகு இரண்டாம் முறை துணைக் குடியரசுத் தலைவரானவர் ஹமீது அன்சாரி). அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வட கிழக்கு மாநிலமான மேகாலயாவைச் சேர்ந்த பி.ஏ. சங்மா முயன்றுகொண்டிருந்தார். பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த தன்னைக் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்தார்.
அவருடைய கோரிக்கையை ஏற்றுக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ. சங்மா போட்டியிட அதிமுக ஆதரவு அளித்தது. அதுபோல பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகளும் பி.ஏ. சங்மாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டின. பின்னர் பாஜகவே பி.ஏ. சங்மாவை ஆதரிக்க முன்வந்தது. இதன் அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பி.ஏ. சங்மா அறிவிக்கப்பட்டார். பதினான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2012 ஜூலை 19 அன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 22 அன்று எண்ணப்பட்டன.
இத்தேர்தலில் பிரணாப் முகர்ஜி 7,13,763 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ. சங்மா 3,15,987 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் 69.3 சதவீத வாக்குகளைப் பெற்ற பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். 30.7 சதவீத வாக்குகளைப் பெற்ற பி.ஏ. சங்மா தோல்வியடைந்தார். வெற்றிபெற்ற பிரணாப் முகர்ஜி 2012, ஜூலை 25 அன்று நாட்டின் 13ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவர் ஆனதில்லை என்கிற குறை பிரணாப் முகர்ஜி பதவியேற்றதன் மூலம் தீர்ந்தது.
(2017 டைரியைத் திருப்புவோம்)