

இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைய இருந்த காலத்தில் பெண்களில் ஒருவர்கூடக் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை என்கிற குறை இருந்துவந்தது. பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவரானதன் மூலம் அந்தக் குறை தீர்ந்தது.
2007ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தபோது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கியபோது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக இருப்பார் என்கிற கேள்வி எழுந்தது. பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டீல், சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்ட சிலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால், பெண் ஒருவரை நிறுத்த சோனியா காந்தி விரும்பினார்.
அந்த அடிப்படையில் ராஜஸ்தான் ஆளுநராக இருந்த பிரதீபா பாட்டீலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக அறிவித்தது. இவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த சிவசேனாவும் ஆதரித்தது. பிரதீபா பாட்டீலை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் துணை தலைவராக இருந்த பைரோன் சிங் ஷெகாவத்தை வேட்பாளராக அறிவித்தது.
இன்னொரு பக்கம் அதிமுக, சமாஜ்வாடி, தெலுங்குதேசம் உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து அப்துல் கலாமை இரண்டாவது முறையாகக் குடியரசுத் தலைவராக்க விரும்பின. இதற்காக இக்கட்சிகள் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்க்கிற பெயரில் இணைந்தன. ஆனால், பிற கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அப்துல் கலாம் அறிவித்ததன் மூலம், தேர்தலில் போட்டியிடும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
எனவே, தேர்தலில் பிரதீபா பாட்டீல், பைரேன் சிங் ஷெகாவத் இடையே நேரடிப் போட்டி இருந்தது. 13ஆவது குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19 அன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 22 அன்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பிரதீபா பாட்டீல் 6,38,116 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பைரோன் சிங் ஷெகாவத் 3,31,306 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். அதாவது பதிவான வாக்குகளில் 65.8 சதவீத வாக்குகளை பிரதீபா பாட்டீல் பெற்று வெற்றி பெற்றார். ரைரேன் சிங் ஷெகாவத் 34.2 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.
13ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதீபா பாட்டீல் ஜூலை 25 அன்று நாட்டின் 12ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்கிற பெருமை பிரதீபா பாட்டீலுக்குக் கிடைத்தது.
(2012 டைரியைத் திருப்புவோம்)