

நாட்டின் 12ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது முறையாகத் தமிழர் ஒருவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற நிகழ்வு நடந்தேறியது.
2002ஆம் ஆண்டில் நாட்டில் 12ஆவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற முதல் தேர்தல் இது. இதற்கு முன்பாக 1977இல் ஜனதா அரசு ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர் நடைபெற்றது. காங்கிரஸ் அரசோ, காங்கிரஸ் ஆதரித்த கூட்டணியோ இல்லாத அரசு மத்தியில் இருந்தபோது வந்த தேர்தலாகவும் இது அமைந்தது.
2002 குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தன்னுடைய விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தார் அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன். காங்கிரஸ் கட்சியும் கே.ஆர். நாராயணனை ஆதரித்தது. ஆனால், பிரதமர் வாஜ்பாய்க்கு கே.ஆர். நாராயணனைக் குடியரசுத் தலைவராக்க விருப்பம் இல்லை. இருவருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாமல் இருந்தது. 1998இல் பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரிதேவி தலைமையில் நடைபெற்ற அரசைக் கலைத்து வாஜ்பாய் அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆனால், பிஹாரில் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தும் அளவுக்குச் சூழல் எதுவும் இல்லை என்று வாஜ்பாய் அரசு அனுப்பிய கோப்பைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன். இந்திய வரலாற்றில் மத்திய அரசின் ஆட்சிக் கலைப்பு பரிந்துரையை ஏற்று அப்படியே கையெழுத்திடும் குடியரசுத் தலைவர்கள்தான் அதற்கு முன்பு இருந்தார்கள். அதை முதன் முதலில் திருப்பி அனுப்பிய குடியரசுத் தலைவராக இருந்தார் கே.ஆர். நாராயணன். இதுபோன்ற காரணங்களால் அவரை மீண்டும் குடியரசுத் தலைவராக்குவதில் பாஜக விருப்பம் காட்டவில்லை.
அதே வேளையில் கட்சிகளுக்குள் ஒருமித்த அடிப்படையில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாஜ்பாய் விரும்பினார். மேலும் 2002இல் குஜராத் கலவரம் பாஜக அரசுக்கு சர்வதேச அளவிலும் தலைகுனிவாக இருந்தது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு இஸ்லாமியர் ஒருவரைக் குடியரசுத் தலைவராக்க முன்வந்தார் வாஜ்பாய். 1998 பொக்ரான் அணுகுண்டு சோதனையில் முதன்மையாகப் பங்கு வகித்த தமிழகத்தைச் சேர்ந்த ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் வாஜ்பாயின் தேர்வாக இருந்தார். தேர்தலில் இஸ்லாமியர் நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சியும் அவரை ஆதரிக்க முன்வந்தது. பெரும்பாலான கட்சிகளும் அப்துல் கலாமை ஆதரிக்க, அவர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரானார்.
ஆனால், இந்த விஷயத்தில் இடதுசாரிகள் மட்டும் முரண்பட்டன. எனவே, அப்துல் கலாமை எதிர்த்து இடதுசாரிகள் சுதந்திரப் போராட்ட தியாகி கேப்டன் லட்சுமி சேகலைக் களமிறக்கின. இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றில் தமிழர்கள் இருவர் மட்டுமே முதன் முறையாகத் தேர்தலில் மோதிய நிகழ்வும் நடந்தேறியது. நாட்டின் 12வது குடியரசுத் தலைவர் 2002 ஜூலை 15 அன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 18 அன்று எண்ணப்பட்டன.
இத்தேர்தலில் அப்துல் கலாம் 9,22,884 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லட்சுமி சேகல் 1,07,366 வாக்குகளைப் பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் 89.6 சதவீத வாக்குகளைப் பெற்று அப்துல் கலாம் வெற்றி பெற்றார். லட்சுமி சேகல் 10.4 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். தேர்தலில் வெற்றிபெற்ற அப்துல் கலாம் ஜூலை 25 அன்று நாட்டின் பதினோராவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். கிர்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவரான பெருமை கிடைத்தது.
(2007 டைரியைத் திருப்புவோம்)