

இந்தியா சுதந்திரம் அடைந்த 50ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்த தருணத்தில் நாட்டின் 11ஆவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கட்சியைத் தவிர்த்து எல்லாக் கட்சிகளும் ஒருசேர ஒரே வேட்பாளருக்கு வாக்களித்த நிகழ்வு நடைபெற்றது.
சுதந்திர தினப் பொன் விழாவுக்கு இந்தியா ஆயத்தமாகிக்கொண்டிருந்த வேளையில், மத்தியில் நிலையான ஆட்சி அமையவில்லை. 1996 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் வெற்றிபெற்ற மாநிலக் கட்சிகளும் இடதுசாரிகளும் இணைந்து ‘ஐக்கிய முன்னணி’ என்கிற கூட்டணியை உருவாக்கின. இந்தக் கூட்டணியை காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரித்தது. இக்கூட்டணி சார்பில் முதலில் தேவ கவுடாவும் பிறகு ஐ.கே. குஜ்ராலும் பிரதமர்களாக இருந்தனர்.
1997 குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றபோது ஐ.கே. குஜ்ரால் இந்தியாவின் பிரதமராக இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய முன்னணியும் இணைந்து துணைக் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணனை வேட்பாளராக அறிவித்தன. முதன் முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டதால், அவரை எதிர்த்து பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட முன்வரவில்லை. கே.ஆர். நாராயணனையே பாஜக கூட்டணியும் ஆதரித்தது. இந்தத் தேர்தலில் கே.ஆர். நாராயணனை எதிர்த்து ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் சுயேச்சையாகக் களமிறங்குவதாக அறிவித்தார். இவரை பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சி ஆதரிப்பதாக அறிவித்தது. டி.என். சேஷனை சுயேச்சைகள் சிலரும் ஆதரித்தனர்.
11ஆவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1997 ஜூலை 17 அன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 20 அன்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் கே.ஆர். நாராயணன் 9,56,290 வாக்கு மதிப்புகளைப் பெற்று பிரம்மாண்ட வெற்றியைப் பதிவுசெய்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.என். சேஷன் 50,631 வாக்கு மதிப்புகளை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தார். மொத்தம் பதிவான வாக்குகளில் 95 சதவீத வாக்குகளை கே.ஆர். நாராயணன் பெற்றிருந்தார். டி.என். சேஷன் 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
1962 குடியரசுத் தலைவர் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் 98.1 சதவீத வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பதிவு செய்தார். அவருக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் கே.ஆர். நாராயணன்தான். தேர்தலில் வெற்றிபெற்ற கே.ஆர். நாராயணன், 1997 ஜூலை 25 அன்று நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்திய வரலாற்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் என்கிற பெருமை கே.ஆர். நாராயணனுக்குக் கிடைத்தது.
(2002 டைரியைத் திருப்புவோம்)