

16ஆம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18 அன்று நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில், 1992க்கும் 2002க்கும் இடையிலான காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களுக்கும் பிரதமர்களுக்கும் இடையிலான உறவு குறித்த பார்வை இது:
1992 – 1997
சங்கர் தயாள் சர்மா
பிரதமர்கள்: பி.வி. நரசிம்மராவ், ஏ.பி. வாஜ்பாய், எச்.டி. தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால்
ஐந்தாண்டு பதவி காலத்தில் நான்கு பிரதமர்களுடன் பணியாற்றிய ஒரே குடியரசு தலைவர்.
கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப அரசாங்கத்தை உருவாக்க அழைப்பதற்கு வெங்கட்ராமன் உருவாக்கிய முன்மாதிரியை சங்கர் தயாள் ஷர்மா அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். நாடாளுமன்றத்தில் கூட்டணிக் கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப கூட்டணி தலைவர்களை அரசாங்கம் அமைக்க அழைப்பதற்கான முன்மாதிரியை சங்கர் தயாள் ஷர்மா உருவாக்கினார்.
பிரதமர் பி.வி. நரசிம்ம ராவும் சங்கர் தயாள் சர்மாவும் ஒரே கட்சியில் நீண்டகாலம் தோழர்களாக இருந்தவர்கள் என்கிறபோதும், அவர்களுக்கு இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டன. நிர்வாக விஷயத்தில் இருவரும் அவரவர் தனித்தன்மையைக் காட்டினர்.
கொள்கை விஷயங்களில் தனது வேறுபாடுகளை எவ்வித தயக்கமுமின்றி அரசாங்கத்துக்கும் பிரதமர்களுக்கும் தெரியப்படுத்த இவர் ஒருபோதும் தயங்கியது இல்லை.
1997 – 2002
கே.ஆர். நாராயணன்
பிரதமர்கள்: ஐ.கே. குஜ்ரால், ஏ.பி. வாஜ்பாய்
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர். இந்தியாவின் மிகச் சிறந்த ராஜதந்திரி என்று நேருவாலேயே வர்ணிக்கப்பட்டவர். கட்சித் தலைவர்களை அரசாங்கத்தை அமைக்க அழைக்கும் அதே வேளையில் தேர்தலுக்கு முந்தைய அவர்களின் கூட்டணிகளைக் கருத்தில்கொள்ளும் வழிமுறைக்கு இவரே முன்னோடி.
மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் அவர். 1998-ல் ராஷ்டிரபதி பவன் வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று அவர் வாக்களித்தார். அடுத்து வந்த தேர்தல்களிலும் அதைத் தொடர்ந்தார். ஜனநாயகத்தைக் காப்பதே குடியரசுத் தலைவரின் அரசமைப்புச் சட்டக் கடமை என்பதில் மிகவும் உறுதி காட்டியவர் அவர்.
மாநில ஆட்சியைக் கலைக்குமாறு ஒன்றிய அமைச்சரவை வலியுறுத்தியபோது அம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பியனுப்பினார். அரசமைப்புச் சட்டத்தின் வழி நின்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் வழி நின்றும் தனக்குரிய விருப்புரிமை அதிகாரங்களைத் தயங்காமல் பயன்படுத்தி புதிய வழிகாட்டும் நெறிகளை உருவாக்கியவர் நாராயணன்.
பிரதமரின் முடிவுகளுக்கு எந்தக் கேள்வியுமின்றி ஒப்புதல் வழங்கும் வழக்கத்திலிருந்து விலகி, அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாகக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை முறையான வகையில் கையாண்டு, முன்னுதாரணங்களை ஏற்படுத்தியவர் என்ற வகையில் அவருக்கு இந்திய வரலாற்றில் முக்கிய இடமுண்டு.