குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 1992: நேரு குடும்பத்தின் தாக்கம் இல்லாத தேர்தல்!

குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 1992: நேரு குடும்பத்தின் தாக்கம் இல்லாத தேர்தல்!
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் சற்று மாறுபட்ட தேர்தல் என்று சொல்லலாம். 1952 தொடங்கி 1987 தேர்தல் வரை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நேரு குடும்பத்தின் ( ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி) பங்களிப்பு இருந்தது. ஆனால், முதன் முறையாக நேரு குடும்பத்தின் பங்களிப்பு இல்லாத தேர்தலாக 1992 குடியரசுத் தலைவர் தேர்தல் அமைந்தது.

1991-பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று கருதப்பட்ட ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், நேரு குடும்பத்தைச் சாராத பி.வி. நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரே காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுதான் 1992இல் நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி, துணைக் குடியரசுத் தலைவராக இருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சங்கர் தயாள் சர்மாவை வேட்பாளராக அறிவித்தது. சங்கர் தயாள் சர்மாவை எதிர்த்து பாஜக, ஜனதாதளம், இடதுசாரிகள் இணைந்து பொது வேட்பாளராக வடகிழக்கு மாநிலமான மேகாலயாவைச் சேர்ந்த ஜார்ஜ் கில்பர்ட் ஸ்வெல் (ஜி.ஜி. ஸ்வெல்) என்பவரை நிறுத்தின. வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, காகா ஜோகிந்தர் சிங் ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.

பத்தாவது குடியரசுத் தலைவர் 1992 ஜூலை 16 அன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 19 அன்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் சங்கர் தயாள் சர்மா 6,75,864 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ஜி.ஜி. ஸ்வெல் 3,46,485 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். சுயேச்சைகளாகப் போட்டியிட்ட ராம்ஜெத்மலானி 2,704 வாக்கு மதிப்புகளையும் காகா ஜோகிந்தர் சிங் 1,135 வாக்கு மதிப்புகளையும் பெற்றனர். மொத்தம் பதிவான வாக்குகளில் 65.9 சதவீத வாக்குகளை சங்கர் தயாள் சர்மா பெற்று வெற்றி பெற்றார். ஜி.ஜி.ஸ்வெல் 33.8 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

தேர்தலில் வென்ற சங்கர் தயாள் சர்மா ஜூலை 25 அன்று குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மதுக்கர் ஹரிலால் கனியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

(1997 டைரியைத் திருப்புவோம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in