இந்தியாவின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் - 4

இந்தியாவின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் - 4
Updated on
2 min read

16ஆம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18 அன்று நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில், 1982க்கும் 1992க்கும் இடையிலான காலகட்டத்தில் பதவி வகித்த குடியரசுத் தலைவர்களுக்கும் பிரதமர்களுக்கும் இடையிலான உறவு குறித்த பார்வை இது:

1982-1987

கியானி ஜெயில் சிங்
பிரதமர்கள்: இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி

1972ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். 1980இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயில் சிங். இந்திரா காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். ஜெயில் சிங்கின் செயலாற்றலும் பொறுப்புணர்வும் 1982, ஜூலை 25 அன்று அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பொறுப்பைப் பெற்றுத் தந்தன. அபார நகைச்சுவை உணர்வுக்கும் அவர் சொந்தக்காரர்.

தனது 16வது வயதில் பகத் சிங்கின் வீரத்தாலும் தியாகத்தாலும் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டவர் அவர். அதனால்தான் என்னவோ, மிகவும் உறுதியான குடியரசுத் தலைவர் என்று இன்றும் கருதப்படும் அளவுக்குத் தீரத்துடன் செயலாற்றினார். பிரதமரை அகற்றத் துணியும் அளவுக்கு உறுதியானவராக இருந்தார்.

இந்திரா காந்தியின் அதீத நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ஜெயில் சிங்குக்கு ராஜீவ்காந்தியுடன் சுமுக உறவு என்றே சொல்ல வேண்டும். ராஜீவ்காந்தியுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவரை பதவி நீக்கம் செய்ய நினைத்தார். அந்த செயல் இந்தியாவில் இதுவரை கண்டிராதது. தபால் மசோதாவுக்கு எதிராக அவர் பயன்படுத்திய வீட்டோ அதிகாரத்தால், அரசாங்கம் அதைக் கைவிட நேர்ந்தது.

1987-1992

ஆர்.வெங்கடராமன்
பிரதமர்கள்: ராஜீவ்காந்தி, வி.பி. சிங், சந்திர சேகர், பி.வி. நரசிம்ம ராவ்

சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்து போராடியவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவுக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவர் இவர். 1980இல் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த ஒன்றிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அந்த நேரத்தில்தான் இந்திய ராணுவத்துக்கான ஏவுகணை திட்டப்பணிகள் தொடங்கின.

1984இல் நாட்டின் துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற வெங்கடராமன், 1987இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை இல்லாத மக்களவை சூழலை எதிர்கொண்ட முதல் ஜனாதிபதி. அவரது பதவிக்காலத்தில் 4 பிரதமர்கள் மாறினர். இதில் மூன்று பிரதமர்களுக்கு இவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

நாடாளுமன்றத்தில் கட்சிகளை அவற்றின் பலத்துக்கு ஏற்ப அரசாங்கத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார். கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப அரசாங்கத்தை உருவாக்க அழைப்பதற்கு இவரது செயல்முறையே முன்மாதிரி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in