

இந்தியாவில் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது.
பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகளின் கை ஓங்கியிருந்தபோது சீக்கியரான ஜெயில் சிங்கை 1982இல் நாட்டின் குடியரசுத் தலைவராக்கிக் காட்டினார் பிரதமர் இந்திரா காந்தி. 1984இல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நுழைந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ என்கிற ராணுவ நடவடிக்கையை இந்திரா காந்தி எடுத்தார். அந்த நடவடிக்கை இந்திரா காந்திக்கு வெற்றியைக் கொடுத்தது. ஆனால், நீறு பூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருந்த அந்த விவகாரத்தின் ஒரு பகுதியாகத்தான் பிரதமரின் பாதுகாப்புப் படையில் இருந்த சீக்கிய வீரர்களால் இந்திரா காந்தி கொல்லப்பட்டார்.
பிரதமர் இந்திரா காந்தி இறந்த பிறகு சீக்கியர்களுக்கு எதிராக மிகப் பெரிய கலவரம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது ஜெயில் சிங் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற குரல்கள் பஞ்சாபிலிருந்து எழுந்தன. ஆனால், அதை ஜெயில் சிங் ஏற்கவில்லை. இந்திரா காந்தி மறைந்த கையோடு ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரம்மாண்ட வெற்றிபெற்று ராஜீவ் காந்தி மீண்டும் பிரதமரானார். ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு அவருக்கும் ஜெயில் சிங்கிற்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
என்றாலும் 1987 குடியரசுத் தலைவர் தேர்தலில் சீக்கியர்களின் பக்கத்தில் காங்கிரஸ் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள ஜெயில் சிங்கையே மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பிரதமர் ராஜீவ் காந்தியோ குடியரசுத் துணைத் தலைவராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆர். வெங்கட்ராமனை காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவித்தார். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக வெங்கட்ராமனை எதிர்த்து வி.ஆர். கிருஷ்ண ஐயர் களமிறக்கப்பட்டார். மூன்றாவதாக சுயேச்சை வேட்பாளராக மிதிலேஷ் குமார் என்பவர் களமிறங்கினார். காங்கிரஸை எதிர்ப்பதற்காக டம்மி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் இவர். ராஜீவுக்கு எதிராக ஃபோபர்ஸ் ஊழல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட காலம் அது.
ஜெயில் சிங்கிற்கும் ராஜீவ் காந்திக்கும் இடையே உறவில் சிக்கல் இருந்த நிலையில், மிதிலேஷ் குமாரின் போட்டி பல ஊகங்களை அன்று கிளப்பியது. மிதிலேஷ் குமார் இறந்துவிட்டால் தேர்தல் நின்றுவிடும். மேலும் சில மாதங்களுக்கு ஜெயில் சிங் குடியரசுத் தலைவராக நீடிக்கும்பட்சத்தில், ஃபோபர்ஸ் ஊழலை முன் வைத்து பிரதமர் ராஜீவ் அரசை ஜெயில் சிங் டிஸ்மிஸ் செய்துவிடுவார் என்றெல்லாம் பேச்சுகள் கிளம்பின. இதனால், மிதிலேஷ் குமார் வேட்புமனுவை நிராகரிக்க தேர்தல் அதிகாரிக்கு காங்கிரஸ் கடும் அழுத்தம் கொடுத்தது. ஆனால், அவருடைய வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரி நிராகரிக்கவில்லை. இதனையடுத்து தேர்தலில் போட்டியிட்ட மிதிலேஷ் குமாருக்கு கேபினெட் அமைச்சருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் இந்தத் தேர்தலில் நடந்தேறின.
இதுபோன்ற போட்டிகளுக்கு மத்தியில் 1987 ஜூலை 13 அன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 16 அன்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆர். வெங்கட்ராமன் 7,40,148 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.ஆர். கிருஷ்ண ஐயர் 2,81,550 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். சுயேச்சையாகப் போட்டியிட்ட மிதிலேஷ் குமார் 2,233 வாக்கு மதிப்புகளை மட்டுமே பெற்றிருந்தார். மொத்த வாக்குகளில் 72.3 சதவீத வாக்குகளைப் பெற்று ஆர். வெங்கட்ராமன் வெற்றி பெற்றார். வி.ஆர். கிருஷ்ண ஐயர் 27.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தார்.
வெற்றிபெற்ற ஆர். வெங்கட்ராமன் நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவராக ஜூலை 25 அன்று பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுநந்தன் ஸ்வரூப் பதக் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 1962இல் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவரான பெருமை கிடைத்தது.
(1992 டைரியைத் திருப்புவோம்)