இந்தியாவின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் - 3

இந்தியாவின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் - 3
Updated on
2 min read

16ஆம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18 அன்று நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில், 1974க்கும் 1982க்கும் இடையிலான காலகட்டத்தில் பதவி வகித்த குடியரசுத் தலைவர்களுக்கும் பிரதமர்களுக்கும் இடையிலான உறவு குறித்த பார்வை இது:

1974 – 1977

பக்ருதீன் அலி அகமது
பிரதமர்: இந்திரா காந்தி

இந்தியாவின் ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் என்று அவர் அழைக்கப்படுகிறார். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நள்ளிரவில் ஆவணங்களில் கையெழுத்திட்டு அவசரநிலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.

1905ஆம் ஆண்டு மே 13 அன்று டெல்லியில் பிறந்தார். 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவாஹர்லால் நேருவைச் சந்தித்து இந்தியத் தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.

இரண்டு முறை அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர் 1967ஆம் ஆண்டு அகில இந்திய மட்டைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1974ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். 1977ஆம் ஆண்டில் காலமாகும்வரை அவர் குடியரசுத் தலைவராகவே இருந்தார்.

1977 – 1982

நீலம் சஞ்சீவ ரெட்டி
பிரதமர்கள்: மொரார்ஜி தேசாய், சரண் சிங், இந்திரா காந்தி

இந்தியாவின் இளைய குடியரசுத் தலைவர். போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவரும் இவரே.

1929இல் அனந்தபூரில் நிகழ்ந்த காந்தியுடனான சந்திப்பு நீலம் சஞ்சீவ ரெட்டியின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அன்று முதல் வெளிநாட்டு ஆடைகள் உடுத்துவதைத் துறந்து, கதர் ஆடைகளை உடுத்த ஆரம்பித்தார்.

காந்தியின் கொள்கைகளில் அபரிமித பற்று கொண்ட அவர், கல்வியைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் முழுவதுமாக ஈடுபட்டார். 1931 ஆம் ஆண்டு இந்தியச் சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தவர் பின்னர், காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தார். 'மாணவர் சத்தியாகிரகத்தில்' துடிப்பு மிக்க இளைஞராகவும் செயல்பட்டார்

1969இல் குடியரசுத் தலைவர் பதவிக்காக நீலம் சஞ்சீவ ரெட்டி காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருந்தாலும், இந்திரா காந்தி வி.வி கிரியை ஆதரித்ததால், அவர் தோல்வியைத் தழுவினார். குடியரசுத் தலைவர் பதவிக்காக அவர் வகித்துவந்த எல்லாப் பதவிகளையும் ராஜினாமா செய்ததால், தோல்விக்குப் பிறகு விவசாயத்தில் ஈடுபட்டார்.

1975 ஆம் ஆண்டு மீண்டும் அரசியலில் நுழைந்த நீலம் சஞ்சீவ ரெட்டி, மார்ச் 1977 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் ஆதரவுடன் ஜனதா கட்சி வேட்பாளராக நந்தியால் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திறமையும் நேர்மையும் மிகுந்த பணியாற்றலால் 1977 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தேர்தலில் போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொரார்ஜி தேசாய் உடனான அவரின் உறவு சுமுகமாக இல்லை. சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவராவதில் தேசாய்க்கு விருப்பமில்லை. பரத நாட்டியக் கலைஞரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ருக்மணி தேவி அருண்டேல் என்பவரையே குடியரசுத் தலைவராக்க தேசாய் விரும்பினார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in