

குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவே நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் கவசம். தேசத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அந்த உறவே உயிர்நாடி. அவர்களுக்கு இடையிலான உறவின் சீர்கேடு நாட்டின் சீர்கேட்டில் முடியும்.
முக்கியத்துவம் வாய்ந்த அந்த உறவை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ளும் பொறுப்புணர்ச்சியை உணர்ந்தே இதுவரையிலான குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் செயல்பட்டு இருக்கிறார்கள்.
16ஆம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18 அன்று நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில், 1967க்கும் 1974க்கும் இடையிலான காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களுக்கும் பிரதமர்களுக்கும் இடையிலான உறவைக் குறித்த பார்வை இங்கே:
1967-1969
ஜாகிர் உசேன்
பிரதமர்: இந்திரா காந்தி
இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர். சிறந்த கல்வியாளர், திறமைமிக்க நிர்வாகி என ஜாகிர் உசேன் இன்றும் போற்றப்படுகிறார். காந்தியடிகளின் மீது தீவிர பற்று கொண்டவர். ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
காந்தியடிகளின் ஆதாரக் கல்விமுறை மீது மிகுந்த பிடிப்பும் ஈர்ப்பும் கொண்டவர். கல்வித்துறையில் பணியாற்றியபோது ஆதாரக் கல்விமுறையினை நாடெங்கும் பரப்ப அரும்பாடுபட்டார். ஆதாரக் கல்வி முறை குறித்தும், கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். உலகப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியர், முதல் இந்தியர் ஜாகிர் உசேன்.
டெல்லியில் உள்ள ஜமியா மில்லியா பல்கலைக் கழகம், உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். 1967இல் இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளே அந்தப் பதவியிலிருந்த அவர், 1969 மே மாதம் 3 ஆம் தேதி காலமானார்.
பிரதமர் இந்திர காந்தியுடன் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் அவரது பதவிக் காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய ஜனாதிபதியாக இருந்துள்ளார்.
1969 – 1974
வி வி. கிரி
பிரதமர்: இந்திரா காந்தி
வி.வி.கிரி, இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர். ஆளுநர்; தொழிலாளர் நலத் துறை அமைச்சர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த பெருமைக்குரியவர். சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே குடியரசுத் தலைவரும் இவரே.
1957 தொடங்கி 1967 வரைக்கும் உத்தர பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். 1967இல் குடியரசுத் துணைத் தலைவரானார். 1969-ல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா காந்தி அவரை ஆதரித்தது, 1969இல் காங்கிரஸ் கட்சியின் பிளவுக்கு வழிவகுத்தது. குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசேன் மறைவுக்குப் பிறகு மூன்று மாதங்கள் அவர் செயல் தலைவராக இருந்தபோது, வங்கி தேசியமயமாக்கல் அவசரச் சட்டத்தை கிரி அறிவித்தார்.
இவரது பதவிக்காலத்தில், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, 1971ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் பிரதமர் இந்திரா காந்தி அவருக்கு ஓர் கடிதம் எழுதினார். அதை ஏற்பதற்கு கிரி மறுத்தார்; அமைச்சரவையின் பரிந்துரை எங்கே? என்று திருப்பிக் கேட்டார். இந்திரா காந்தி, அமைச்சரவையை அவசரமாகக் கூட்டி, அதன் பரிந்துரையை அனுப்பி வைத்த பிறகே அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டார். இந்திரா காந்தியால் குடியரசுத் தலைவரானவர் என்றாலும், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை உறுதிப்படப் பதிவு செய்ய வி.வி.கிரி தவறவில்லை.