

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 முதல் 1977 வரை காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளர்கள்தாம் குடியரசுத் தலைவர்களாக முடிந்தது. ஆனால், ஒரு மாற்றமாக ஜனதா கட்சியைச் சேர்ந்த நீலம் சஞ்சீவ ரெட்டி 1977 - 1982 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். இவரும் முன்னாள் காங்கிரஸ்காரர்தான். ஆனால், இந்திரா காந்திக்கு இவரை ஏனோ பிடிக்காமல் போனது.
நிற்க, 1982 குடியரசுத் தலைவர் தேர்தல் வருவதற்கு முன்பே 1980 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று இந்திரா காந்தி பிரதமராகியிருந்தார் (அவருக்கு நீலம் சஞ்சீவ ரெட்டிதான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்). இந்தத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர்தான் வெற்றிபெற முடியும் என்கிற அளவுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் அதிகம் இருந்தனர். தேர்தல் நெருங்கியபோது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்கிற யோசனையில் இந்திரா காந்தி மூழ்கினார்.
அப்போது பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுக்கொண்டிருந்தன. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு மக்கள் மத்தியிலும் ஆதரவு இருந்தது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு இந்திரா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு முடிவை எடுத்தார். சீக்கியர் ஒருவரைத் தேர்தலில் நிறுத்துவது என்பதுதான் அந்த முடிவு. அதன்படி தன்னுடைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கியானி ஜெயில் சிங்கை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்தார். எதிர்க்கட்சிகள் சேர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.ஆர். கண்ணாவை நிறுத்தின.
தேர்தல் 1982 ஜூலை 12 அன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 15 அன்று எண்ணப்பட்டன. ஜெயில் சிங் 7,54,113 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். எச்.ஆர். கண்ணாவால் 2,82,685 வாக்கு மதிப்புகளை மட்டுமே பெற முடிந்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் ஜெயில் சிங் 72.7 சதவீத வாக்குகளைப் பெற்று வாகை சூடினார். எச்.ஆர். கண்ணா 27.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தார்.
வெற்றிபெற்ற ஜெயில் சிங் 1982 ஜூலை 25 அன்று நாட்டின் ஏழாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தியாவின் முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர் என்கிற பெருமை ஜெயில் சிங்கிற்குக் கிடைத்தது.
(1987 டைரியைத் திருப்புவோம்)