

இந்திய அரசியலமைப்பின் படி, இந்தியாவில் அதிகார உரிமைகளைப் பிரதமர் மட்டும் கொண்டு இருக்கவில்லை. அரசியலமைப்பின் அதிகார உரிமைகளை முழுமையாக நிறைவேற்றும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவரே கொண்டிருக்கிறார். அந்த அதிகாரத்தை அவர் சுயமாகவும் பயன்படுத்தலாம்; தனக்குக் கீழ் உள்ளவர்களின் மூலமாகவும் பயன்படுத்தலாம். நிதி மசோதா நீங்கலாக வேறெந்த மசோதாவையும் மறுபரிசீலனைக்காக மீண்டும் நாடாளுமன்றத்திற்கே திருப்பி அனுப்பும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது.
குடியரசுத் தலைவரும் பிரதமரும் நாட்டின் இரு கண்கள். இந்த இருவரின் ஒப்புதல் இல்லாமல் எந்தச் சட்டமும் செயல் வடிவம் பெறாது. எனவே, குடியரசுத் தலைவரும் பிரதமரும் தங்களுடைய அதிகார வரம்பை நன்கு உணர்ந்து தமது பணிகளைச் செயல்படுத்த வேண்டும். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஆரோக்கியமான உறவிலும் இணைந்து பணியாற்றும் பண்பிலும் நாட்டின் மேன்மையும் முன்னேற்றமும் அடங்கியுள்ளன.
16ஆம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18 அன்று நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் குடியரசுத் தலைவர்களுக்கும் பிரதமர்களுக்கும் இடையிலான உறவை அறிந்துகொள்வது, அந்தப் பதவிகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்
1950 – 1962
ராஜேந்திர பிரசாத்
பிரதமர்: ஜவாஹர்லால் நேரு
1950இல் அரசியல் நிர்ணய சபையால் ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952, 1957 குடியரசுத் தலைவர் தேர்தல்களிலும் அவரே வெற்றிபெற்றார்.
இந்து சட்ட மசோதா, புனரமைக்கப்பட்ட சோம்நாத் கோயில் திறப்பு ஆகியவற்றின் கொள்கை முடிவுகளில் பிரதமர் நேருவுடன் அவருக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும், இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை இருந்தது.
1950இல் குடியரசு நாடாக இந்தியா அறிவிக்கப்பட்ட அன்று ராஷ்டிரபதி பவனில் அவர் நிகழ்த்திய உரை மிகவும் பிரசித்திபெற்றது. வேற்றுமையில் ஒற்றுமை எனும் இந்தியாவின் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்த உரை அது.
அந்த உரையின்போது, "இந்தியா ஒருபோதும் தனது எந்தக் கருத்தையும் நம்பிக்கையையும் பிறருக்குப் பரிந்துரைப்பது இல்லை; கட்டாயப்படுத்துவதும் இல்லை. அனைத்து மதத்தைச் சார்ந்த இறை நம்பிக்கையாளர்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்கும் இறைவனைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் உண்டு என்பதே இந்தியாவின் அணுகுமுறை" என்று உறுதியுடன் கூறினார். இந்தியாவின் சகிப்புத்தன்மையை உலகுக்கு உணர்த்திய உரை அது.
1962 – 1967
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பிரதமர்கள்: ஜவாஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி
சிறந்த தலைவர், சீரிய தத்துவஞானி என இன்றும் போற்றப்படுகிறவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரான அவரே இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர்.
1950 முதல் 1962 வரை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தார். பின்னர், 1962 முதல் 1967 வரை இந்தியக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
தனது பதவிக் காலத்தில் அனைத்துப் பிரதமர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தார்.
சென்னை பிரசிடென்சி கல்லூரி, மைசூர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் அவர் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது பல தத்துவ நூல்களை எழுதி இருக்கிறார். ஆசிரியராக இருந்தவர், தன்னுடைய உழைப்பாலும் சீரிய சிந்தனையாலும் பின்னாட்களில் நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவரானார். இதன் காரணமாகவே அவரது பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.