

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் என்றவுடன் அது சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்கியோவிலோ, சிங்கப்பூரிலோ இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றும். ஆனால், அந்த எண்ணத்தை விருத்தாசலம் பொய்த்துப் போகச் செய்திருக்கிறது. ஆம், ஆசியாவின் மிகப் பெரிய தனியார் நூலகம் விருத்தாசலம் நகரில்தான் இருக்கிறது.
அரிதினும் அரிதாகக் கிடைக்கும் பழைய நூல்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த தனியார் நூலகத்தின் பெயர் 'தமிழ் நூல் காப்பகம்'. அரிய தமிழ் நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு இதுவே சரணாலயம்.
இந்த நூலகத்தை நிறுவியவர் புலவர் பல்லடம் மாணிக்கம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமிப்பது அவருடைய பழக்கம். இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களை அவர் சேர்த்துள்ளார். அதில் மிகப்பழமையான பல நூல்களும் அடக்கம்.
பல்லடம் மாணிக்கம், நிறங்கள் என்கிற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்கிற இதழையும் நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் அது குறிப்பிடத்தகுந்தது.
முதல் பதிப்புகள்
இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம், சிற்றிலக்கியங்கள் போன்றவை அங்கே உள்ளன. பல்தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் உள்ளிட்ட பல முதல் பதிப்பு நூல்களைக் கொண்டிருப்பது அந்த தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு.
இலக்கியநூல்களும் ஆய்வு நூல்களும்
திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளும் அங்கே உள்ளன. அத்துடன் திருக்குறள் தொடர்பான 1500க்கும் மேற்பட்ட நூல்களையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது.
கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் அங்கே உள்ளன.
நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள் அங்கே உள்ளன.
மேலும், காந்தியடிகள், கார்ல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல் தொகுதிகளும் அங்கே இடம்பெற்றுள்ளன.
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகளும் அங்கே சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன
உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள், இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அங்கே இருப்பது அந்த நூலகத்தின் கூடுதல் சிறப்பு.
நூலகத்தின் அமைப்பு
தரை தளத்தில் நூலகம் உள்ளது. மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும், ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் உள்ளன. இந்த நூலகத்தின் அமைப்பும் கட்டட வடிவும் மிகுந்த கலை நயத்துடன் மிளிர்கின்றன.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்கள், நேபாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பு எனத் தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளைப் பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் பல்லடம் மாணிக்கம்.
நூலகத்திற்கான தனி கட்டிடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார்.
பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் இங்கேதான் நடைபெற்றன.
அன்பளிப்பாகக் குவிந்த நூல்கள்
இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.
தமிழைக் காப்பதே நோக்கம்
வயது மூப்பின் காரணமாக, அவரால் நூலகத்தைப் பராமரிக்க இயலவில்லை. அதனால் தற்போது தனது நூல்களை நிர்வகிக்கும் பொறுப்பைக் கோவையில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் உள்ள ‘நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம்’ எனும் அமைப்புக்குக் கொடுத்துவிட்டார். அவரது நூலகம் தற்போது அந்தக் கல்லூரி வளாகத்தில் இயங்குகிறது. தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம்
தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும்; பாதுகாக்கப்பட்ட நூல்களைத் தமிழ் ஆய்வாளர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்; அந்த ஆய்வாளர்கள் தமிழை வளர்ப்பார்கள்; அழிவிலிருந்து காப்பார்கள் என்பது பல்லடம் மாணிக்கத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்து வருபவர் அவர். அவருடைய உழைப்பின் மேன்மையை உணர்த்தும் வகையில் ’தமிழ் நூல் காப்பகம்’ இன்று நம்மிடையே கம்பீரமாக நிற்கிறது.