

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றி மறக்க முடியாத தேர்தல் என்று 1977இல் நடந்த தேர்தலைச் சொல்லலாம். இந்தத் தேர்தலில் போட்டியின்றி குடியரசுத் தலைவராக நீலம் சஞ்சீவ ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு நடந்தேறியது.
நாட்டின் ஏழாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதற்குக் காரணம், 1974இல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஃபக்ருதீன் அலி அகமது, 1977 பிப்ரவரி 11 அன்று காலமானார். பதவியில் இருக்கும்போதே மறைந்த இரண்டாவது குடியரசுத் தலைவரானார் ஃபக்ருதீன் அலி அகமது. இதற்கு முன்பு ஜாகீர் உசேன் குடியரசுத் தலைவராக இருந்தபோதே காலமானார்.
ஃபக்ருதீன் அலி அகமது மறைவால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை தற்காலிகக் குடியரசுத் தலைவராகத் துணை குடியரசுத் தலைவரான பி.டி. ஜாட்டி பொறுப்பேற்றார். ஆனால், அப்போது மக்களவைத் தேர்தலும் குறுக்கிட்டது. எனவே, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அவசர நிலை பிரகடனம் உள்படப் பல்வேறு காரணங்களால் தோல்வியடைந்தது.
தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் தலைமையில் புதிய அரசு அமைந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற பிறகுதான் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. 1977 ஜூலை 18 அன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் ஆளும் ஜனதா கட்சி கூட்டணி சார்பில் நீலம் சஞ்சீவ ரெட்டி நிறுத்தப்பட்டார். அப்போது தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருந்த இந்திரா காந்தி, காங்கிரஸ் சார்பில் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை. என்றாலும், தேர்தலில் போட்டியிட 36 பேர் வரை வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுக்கள் எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
விளைவு, போட்டியின்றி நீலம் சஞ்சீவ ரெட்டி வெற்றிபெற்றார். இந்திய வரலாற்றில் தேர்தலையே சந்திக்காமல் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டிதான். புதிய குடியரசுத் தலைவராக சஞ்சீவ ரெட்டி ஜூலை 25 அன்று பொறுப்பேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிர்சா ஹமீதுல்லா பெக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
(1982 டைரியைத் திருப்புவோம்)