

இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக 1967ஆம் ஆண்டில் ஜாகீர் உசேன் பதவியேற்ற நிலையில், அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தல் 1972இல் வந்திருக்க வேண்டும். ஆனால், 1969ஆம் ஆண்டிலேயே ஐந்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது. அதற்குக் காரணம், குடியரசுத் தலைவராக இருந்த ஜாகீர் உசேனின் திடீர் மரணம்.
நாட்டின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேனின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள்கூட முடியாத நிலையில் 1969 மே 3 அன்று காலமானார். ஜாகீர் உசேனின் மரணத்தால், நாட்டின் இடைக்கால குடியரசுத் தலைவராக, துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி. கிரி பொறுப்பேற்றார். இதனையடுத்து 1969இல் மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்திய வரலாற்றில் மிகவும் பரபரப்பாகவும் மிகக் கடுமையான போட்டியாகவும் 1969 தேர்தல் அமைந்தது. இந்தத் தேர்தல் நடந்தபோது நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவியது. தலித் தலைவரான ஜகஜீவன் ராமை வேட்பாளராக அறிவிக்க இந்திரா காந்தி விரும்பினார். ஆனால், அதை அன்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களான காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா ஆகியோர் விரும்பவில்லை. இந்திரா காந்தியின் விருப்பத்துக்கு மாறாக காங்கிரஸ் தலைமை அன்று மக்களவை சபாநாயகராக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக அறிவித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த பிரதமர் இந்திரா காந்தி இடைக்கால குடியரசுத் தலைவராக இருந்த வி.வி. கிரியை சுயேச்சையாகத் தேர்தலில் களமிறக்கினார். இத்தேர்தலில் பாரதிய ஜனசங்கம் சார்பில் சி.டி.தேஷ்முக் களமிறக்கப்பட்டார். நீலம் சஞ்சீவ ரெட்டி, வி.வி. கிரி, தேஷ்முக் தவிர்த்து மேலும் 12 வேட்பாளர்கள் சுயேச்சைகளாகத் தேர்தலில் களமிறங்கினர். காங்கிரஸ் கட்சியிலிருந்து இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் யாருக்கு வாக்களிப்பார்கள் என்கிற கேள்வி எழுந்தது. இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொருவிதமாக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தன.
தேர்தலில் காங்கிரஸ் தலைமை அறிவித்த நீலம் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்தார். ஆனால், பிரதமராக இருந்த இந்திரா காந்தி மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் என்பதைத் தாண்டி காங்கிரஸ் கட்சியில் தங்கள் பலத்தைக் காட்டிக்கொள்ள இத்தேர்தலைத் தலைவர்கள் பயன்படுத்தினர்.
நாட்டின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 20 அன்று எண்ணப்பட்டன. குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் முன்னுரிமை வாக்கு, இரண்டாம் முன்னுரிமை வாக்கு என்கிற விதிகள் உள்ளன. இத்தேர்தலில் முதல் முன்னுரிமை வாக்குகளில் வி.வி. கிரியே அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இறுதியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி 4,05,427 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவைப் பெற்ற வி.வி. கிரி 4,20,077 வாக்கு மதிப்புகளைப் பெற்று வெற்றியை வசமாக்கினார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 14,650தான். வி.வி. கிரி 50.9 சதவீத வாக்குகளையும் நீலம் சஞ்சீவ ரெட்டி 49.1 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் நீலம் சஞ்சீவ ரெட்டியை இந்திரா காந்தியின் ஆதரவு பெற்ற வி.வி. கிரி வீழ்த்தினார். இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றில் மிகமிக நெருக்கமான போட்டியாக 1969 தேர்தல் கருதப்படுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்ற வி.வி. கிரி 1969 ஆகஸ்ட் 24 அன்று நாட்டின் நான்காவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற ஒரே குடியரசுத் தலைவர் வி.வி. கிரிதான். தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக இவருடைய வெற்றியை எதிர்த்துத் தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குடியரசுத் தலைவர் வி.வி. கிரி விளக்கம் அளித்த வரலாறு எல்லாம் நடந்தேறியது.
(1974 டைரியைத் திருப்புவோம்)