

இந்தியாவில் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தேர்தல், அதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களைவிட வித்தியாசமான தேர்தல் என்றே சொல்லலாம். 1952, 1957, 1962 என முதல் மூன்று குடியரசுத் தலைவர் தேர்தல்களும் சம்பிரதாயத்துக்கு நடந்ததைப் போலவே நடந்தேறின. ஆளும் காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால், 1967இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் 17 பேர் போட்டியிட்டனர். மேலும் எதிர்க்கட்சிகளும் வேட்பாளர்களைக் களமிறக்கின. 1967 குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தபோது மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மாறி எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வாக்களிக்கத் தகுதி பெற்ற இருவர் முன்மொழிய, இருவர் வழிமொழிய வேண்டும் என்கிற விதிமுறையும் சேர்க்கப்பட்டது. நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் ஜவாஹர்லால் நேருவும், இரண்டாவது பிரதமராகப் பதவியேற்ற லால்பகதூர் சாஸ்திரியும் மறைந்துபோயிருந்தார்கள். அப்போது பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசுத் துணைத் தலைவரான ஜாகீர் உசேன் நிறுத்தப்பட்டார். ஜாகீர் உசேனை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கோகா சுப்பா ராவ் களமிறங்கினார்.
இவர்களைத் தவிர குபி ராம், ஜமுனா பிரசாத் திரிசுலியா, பி.எஸ். கோபால், பிரம்மா தியோ உள்பட 15 பேர் சுயேச்சைகளாகக் களமிறங்கினார். குறிப்பாக 1952, 1957, 1962 குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சவுத்ரி ஹரி ராம் இந்த முறையும் களமிறங்கினார். ஆக மொத்தம் 17 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். இதுவரை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலாகவும் இத்தேர்தல் அமைந்தது.
நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1967 மே மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 9 அன்று எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜாகீர் உசேன் 4,71,244 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட கோகா சுப்பா ராவ் 3,63,971 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். சுயேச்சை வேட்பாளர் குபி ராம் 1369 வாக்குகளையும் இதர 5 வேட்பாளர்கள் 250-க்கும் குறைவான வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர். இதில் குறிப்பிடும்படியான அம்சம் என்னவென்றால் 7 வேட்பாளர்கள் வழிமொழிந்தவர்கள், முன்மொழிந்தவர்களின் வாக்குகளைக்கூடப் பெற முடியாமல் பூஜ்ஜிய வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர்.
நான்காவது முறையாகப் போட்டியிட்ட சவுத்ரி ஹரி ராம் பூஜ்ஜிய வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
மொத்தம் பதிவான வாக்குகளில் ஜாகீர் உசேன் 56.2 சதவீத வாக்குகளையும், கோகா சுப்பா ராவ் 43.4 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். அந்தக் காலகட்டத்தில் மிகவும் பலத்த போட்டியாக இந்தத் தேர்தல் கருதப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற ஜாகீர் உசேன் மே 13 அன்று நாட்டின் 3ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
(1969 டைரியைத் திருப்புவோம்)